யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
சட்டப்படியாக தேர்வான ஒருவர் ஜனநாயக முறைப்படி தோற்கடிக்கப்பட்ட நிலையிலும், ஜனநாயக ரீதியில் தோற்கடிக்கப்பட்ட ஒருவரே சட்டப்படியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது கேலிக் கூத்து இலங்கையில் அரங்கேறியுள்ளது.
இதற்கு உதாரணம் 69 லட்சம் வாக்குளை பெற்று சட்டப்படியாக தேர்வானகோத்தபாயவை ஜனநாகப் போராட்டம் மூலம் வீழ்த்திய மக்கள் ஒன்றுகூடி வீழ்த்திய நிலையில் ஜனநாயக ரீதியில் தோற்கடிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ரணில் சட்டப்படியான முறையில் பிரதமராகி தற்போது இடைக்கால ஜனாதிபதியாகிவிட்டார்.
தீவு நாடான இலங்கையில் ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் இடையில் ஒற்றுமை இருந்ததோ இல்லையோ போட்டி இருந்தே வந்துள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை (19) அன்று ஜனாதிபதி பதவியின் எஞ்சியிருக்கும் காலத்திற்கான நபரை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் மறுநாள் (20) தெரிவு நடைபெறவுள்ளது. இப்போதுள்ள மொட்டுக் கட்சி ரணிலை ஆதரிக்கும் என்று அதன் பொதுச் செயலர் சாகர காரியவசம் தெரிவிக்க, அப்படியெல்லம் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் கூறிவிட்டார். அதேநேரம் பெரமுனவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டலஸ் அழகபெரும இத்தேர்தலில் தானும் களத்திலுள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இதில் பெரும்பன்மை சிங்கள உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி ஒருபுறம் இருக்க தமிழ் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்று மறுபுறம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கூட்டமைப்பினர் யாருக்கு ஆதரவு?
“புதிய ஜனாதிபதி தெரிவு செய்வது தொடர்பில் யாரை ஆதிரிப்போம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முடிவை 19ஆம் திகதியன்று போட்டியிடும் வேட்பாளர்கள் யாரென்று தெரியவந்த பிறகு தங்களது நாடாளுமன்றக் குழு கூடி முடிவு எடுக்கும்” என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் பகிரங்கமாகவும் தெரிவித்துள்ளனர்.
புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதிப் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அநுராகுமார திசநாயக்காவின் பெயர் அடிபட்டாலும் அவர் போட்டியிட மாட்டார் என்று அறியப்படுகிறது. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது என்ற கேள்வி பரவலாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனும் நாடாளுமன்றத்திலுள்ள பிரதான கட்சிகளுடனும் பேச்சுக்கள் தொடரும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் கையை சுட்டுக்கொள்ள விரும்பாத கூட்டமைப்பு.
நல்லாட்சிக் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சில தடவை ஆதரவு வழங்கி சில விடயத்தை சாதிக்க முயன்றபோதும் அதனையே பல கட்சிகள் தமக்கு எதிர்ப் பிரச்சாரமாக மாற்றியதனால் கூட்டமைப்பு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் மீண்டும் ஒருமுறை தமது விரலை தாமே சுட்டுக்கொள்ள கூட்டமைப்பு விரும்பவில்லை என்பது திடமாக தெரிகின்றது.
இதேபோன்று ரணில் விக்கிரமசிங்க20ஆம் திகதி வாக்கெடுப்பில் வென்றாலும் நாட்டில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்றே கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மீண்டும் போராட்டம் ஏறபாட்டால் இதே மக்களின் முன் கூட்டமைப்பால் தோன்ற முடியாத சூழலில் ஏற்படும். அதேபோன்று யார் வென்றாலும் தேர்தல் ஒன்றிற்கு சென்றால் வாக்கு வங்கியினையும் தக்க வைக்க வேண்டும். இப்படியான பல சிக்கல்களில் கூட்டமைப்பு சிக்கியுள்ளது என்பதே யதார்த்தம்.
இதேநேரம் “ரணில் ஒரு நரி” என தற்போதுள்ள அரசியல் கட்சிகளிற்கு அப்பால் விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டயதனை எவரும் மறுக்கவோ மறக்கவோ தயாராக இல்லை என்பதும் நிதர்சனமாக இருப்பதனால் கூட்டமைப்பு நிச்சயமாக இம்முறை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முன்வராது என்று அரசியல் நோக்கர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காது விட்டால் நடு நிலையென சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த நிலைப்பாட்டை எடுக்குமா எனவும் சிலர் வினாவுகின்றனர். அவ்வாறு நடுநிலை என்ற முடிவிற்கும் வாய்ப்பே இல்லை என்று கூட்டமைப்பின் வட்டாரங்களில் இருந்து அறிய முட்கிறது.
அவ்வாறானால் என்ன முடிவு என்பதை19ஆம் திகதி மாலை பகிரங்கமாக அறிவித்து20 ஆம் திகதி அவருக்கே வாக்களிக்கும் முடிவை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவிப்பார் என்பதே எமது கணிப்பாக உள்ளது.
வாக்களிப்பில் பங்கேற்பில்லை
இதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் தாம் கலந்துகொள்வது இல்லை என இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணி முடிவு முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
இவ்வாறு யாருக்குமே வாக்களிக்காது நடுநிலை வகிப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்பிக் குழுவின் தலைவருமான வி.மணிவண்ணன் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
”அந்தக் கருத்தில் யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
தென்னிலங்கையிலே போராடுகின்ற சக்திகள் கூட தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் மீது மெல்ல மெல்ல அக்கறை செலுத்துவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது” என்கிறார் மணிவண்ணன்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு முற்று முழுதாக ஒரு தீர்வை காண்பதே தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் எனவும் யாழ் மாநகர சபையின் முதல்வர்.
“சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாதுர்யமாக முடிவெடுக்க வேண்டும்”
“தற்போது உருவாகியுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் முடிவு எடுக்க வேண்டும். தமிழ் கட்சிகள் குறுகிய நோக்கங்களை கைவிட்டு தமிழ் மக்களுக்காக சிந்திக்க வேண்டும். தமிழ் தேசியம் என்று சொல்கின்ற நபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுடைய நன்மைக்காக ஒரு முடிவை எடுத்து ஒரணியாக செயலாற்றுவது கட்டாயம். இந்த ஜனாதிபதி தேர்தலிலே என்ன நிலைப்பாட்டை தமிழ் மக்கள் சார்பாக எடுக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பொது அமைப்புக்களுடன் இணைந்து ஆலோசனை செய்ய வேண்டியது கட்டாயமாகும்” என்கிறார் அவர்.
தமிழ் சிவில் சமூகத்தில் அரசியல் சார்ந்து சிந்திக்கக்கூடிய கல்வியலாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு கட்டாயம் இதனை செய்ய வேண்டும். அவ்வாறு ஆலோசனையை செய்யமாட்டோம் என சொன்னால் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலே அவர்களுக்கு இருக்கக்கூடும் என்று `சைக்கிள் கட்சி` என்று அறியப்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தனது விமர்சனத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் விடயத்துக்காக ஒற்றுமைப்பட மாட்டோம் ஒன்றாக முடிவெடுக்க மாட்டோம் என்று யாராவது சொன்னால் கூட அவர்கள் மீது சந்தேகப்பட வேண்டிய நிலையே காணப்படுகின்றது. பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றது. ஜனாதிபதியாக வரக்கூடியவர்களிடமிருந்து தமிழ் மக்களுக்கான குறுகிய கால பிரச்சினைகள் மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் என்ற அடிப்படையிலே வாக்குறுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம். ஆக குறைந்தது அரசியல் கைதிகளினுடைய விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகளை விடுவித்தல்,காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கான உத்தரவாதம் போன்றவற்றுக்கு வாக்குறுதியை பெற வேண்டும் என்று கனடா உதயனிடம் பேசிய போது அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வடகிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக வட கிழக்கு மையப்படுத்திய பொருளாதார அதிகார சபையை நிறுவுவதற்கு வரப்போகும் ஆட்சியாளர்களுடன் சம்மதித்து அதை நிறுவ வலியுறுத்த வேண்டும். அரசியல் தீர்வு தொடர்பாக காத்திரமான ஒரு உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்று கூறும் மணிவண்ணன் இதை தமிழ்க் கட்சிகள் செய்யத் தவறி வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசினால் அந்த அரசியல் கட்சிகளுக்கு தென்னிலங்கையில் ஏற்பட்டது போன்ற சூறாவளியை வடகிழக்கில் தமிழ் மக்கள் ஏற்படுத்துவார்கள் எனவும் எச்சரிக்கிறார்.
தொலைநோக்குப் பார்வை தேவை
தமிழ் அரசியல் கட்சிகள் நாட்டில் தற்போது நிலவும் சூழலில் தொலைநோக்குப் பார்வையுடன் தெளிவான முடிவுகளை எடுக்காவிட்டால் தமிழ் மக்களின் கோபத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை பலருடன் பேசிய போது உணர முடிந்தது. தமிழ் தேசியக் கட்சிகள் மீதிருக்கும் அதிருபதி தேர்தல் நேரத்தில் வெடிக்கும் என்றும் வடகிழக்கு தமிழ் மத்தியில் எண்ணம் நிலவுகிறது. நாடாளுமன்ற தேர்தல் குறித்த காலத்திற்கு முன்னரே நடைபெறும் சாத்தியகூறுகள் உள்ள நிலையில், தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பது போரினால் பாதிக்கப்பட்டு இன்னும் தமது வாழ்வாதாரங்களை கட்டியெழுப்ப முடியாமல் திண்டாடும் மக்களுக்கு சொல்லும் செய்தியாகவே பார்க்கப்படும்.
எந்த தேர்தலிலும் நடுநிலை அல்லது புறக்கணிப்பு என்பது மழுப்பலான ஒரு விடயமாகவே கருதப்படும். அரசியல் கட்சிகள் உறுதியான முடிவை எடுக்க வேண்டும், அதன் மூலம் தமது மக்களுக்கான அர்ப்பணிப்பையும் தலைமைப் பண்பையும் நிரூபிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அவ்வகையில் தமிழ் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை அடுத்த இரு நாட்கள் சவால்களும் சோதனைகளும் மிகுந்ததாகவே இருக்கும்.