யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
ஒரு வழியாக ரணில் விக்ரமசிங்க தனது வாழ்நாள் இலட்சியத்தை எட்டிவிட்டார். பதவி தான் முக்கியம் அதன் பிறகு தான் ஜனநாயகம் என்பது இலங்கை, பாகிஸ்தான், மியான்மார், நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளில் இன்று யதார்த்தம்.
யாருடன் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம், பேச்சுவார்த்தைகளின் போது ஒன்று பேசுவது பின்னர் வாக்கெடுப்பின் போது வேறு மாதிரி செயல்படுவதெல்லாம் தெற்காசிய அரசியலில் சாபக்கேடாகும்.
அதேபோன்று ஒரு கட்சிக்குள்ளேயே கூட்டணி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி, கூட்டணியே முறிந்து போவதும் இந்தியா, இலங்கை ஆகியவற்றில் நடைபெற்றவையே. போதாத குறைக்கு நடைபெற்றது என்னவென்று முழுமையாகத் தெரியாமல் அல்லது புரியாமல் அல்லது தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல் செவிவழிச் செய்தியை மட்டுமே நம்பி செய்தி வெளியிட்டு குட்டையைக் குழப்புவதும் ஊடகங்களுக்கு கைவந்த கலையாகவுள்ளது. இதில் பெரும்பாலும் உள்நோக்கமும் இருக்கக் கூடும். அவ்வகையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் டலஸ் அழகபெரும-சஜித் பிரேமதாச ஆகியோரிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து கசிந்த சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு, இலங்கையின் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்று வாக்கெடுப்பன்றி காலையில், ஏதோ கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளையும் டலஸ் ஏற்றுக்கொண்டது போலவும், உடனடியாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர், காணிகள் விடுவிக்கப்படும், போர் குற்றச்சாட்டுக்கு பொறுப்புக்கூறல் இடம்பெறும் என்றெல்லாம் டலஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதாக முதல் பக்க செய்தியை வெளியிட அது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கொழும்பிலிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் கூறுகின்றன.
இதனிடையே கூட்டமைப்பிற்குள் இந்த பேச்சுவார்த்தைகளின் போது என்ன நடைபெற்றது என்பதை உதயன் கண்டறிந்தது
இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு சரியானதா தவறானதா என்பது பலரிடமும் ஓர் மிகப் பெரும் கேள்வியாகவுள்ளது.
தமிழர்களின் பிரச்சணையில் இனம் கண்ட 10 பிரச்சணைகளைத் தீர்த்து தருவோம் என முதல் தடவையாக ஓர் ஜனாதிபதி வேட்பாளரிடம் கூட்டமைப்பு எழுத்தில் வேண்டியது.
இது2015 ஆம், 2020 ஆம் ஆண்டுகளின் பட்டறிவின் அடிப்படையில்வேண்டியதாகவும் இருக்கலாம் இருப்பினும் மைத்திரிபால சிறிசேனாவை இதயத்தால் மட்டும் நம்பி ஏமாந்து ஏறக்குறைய கழுத்தறுப்பிற்கு சமணாகவும் பல தடவை ரணிலின் வாக்குறுதியை மட்டும் நம்பி ஏமாந்து வாக்கு வங்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்ட பட்டறிவின் பிரதிபலிப்போ என்னவோ இம்முறை தமது நிபந்தனையை கூட்டமைப்பு எழுத்தில் கோரிப் பெற்றது.
அதாவது 2022-07-19 ஆம் திகதி அன்று இரவு கூட்டமைப்பின் கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தன் இல்லத்தில் இடம்பெற்றபோது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்குதான் இணங்கவே மாட்டன் என்பதுபோல் உரையாற்றி இறுதியில் இணங்கினார். ஆனால் ஆரம்பம் முதலே ரணிலை ஆதரிக்கவே முடியாது, ஏன் நடுநிலையாக இருக்க கூடாது என்பது சாள்ஸ் நிர்மலநாதனின் முடிவாக இருந்தது. இந்த நிலையில் அமெரிக்கா, இந்தியாவின் முடிவு என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வினாவியுள்ளார்.
இதன்போதுதான் ஆட்டம் களை கட்டியது, அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த முடிவிற்கு செல்லவில்லையென சுமந்திரன் பதிலளித்தபோது அப்படி நீங்கள் மட்டும்தானே கூறுகின்றீர்கள் என சுமந்திரனை நோக்கி சிறிதரன் பதில் கேள்வி எழுப்பியபோது இதற்கு பதிலளித்த சுமந்திரன் இவ்வாறு கதை வரும் என்றே செல்வத்திடமும் கூறப்பட்டது என சுமந்திரன் தெரிவிக்க, சஜித் என்றால் ஆதரவளிக்குமாறே கூறப்பட்டதாக செல்வம் அடைக்கலநாதன் கூற முற்பட்டார்.
இதனால் வேறு வழியின்றி இந்திய அதிகாரி ஒருவருக்கு சுமந்திரன் உடனே தொடர்பை ஏற்படுத்தி தனது தொலைபேசியை செல்வத்திடம் வழங்கி உரையாட வைத்த பின்னர் செல்வம் அடைக்கலநாதன் தெளிவாக கூறினார்- தூதரகம் டலசிற்கே வாக்களிக்குமாறு கூறுகின்றனர் என்றார். இவற்றின் பின்பே டலஸ், சஜித், ஜி.எல்.பீரிஸ் போன்றோர் நேரில் சென்று கூட்டமைப்பின் 10 கோரிக்கைக்கும் ஒப்பம் வைத்து வழங்கியதாக தகவல் வெளியானது. எனினும் இதை சுயாதீனமாக உதயனால் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால் டலஸ் அழகபெருமவிற்கு வாக்களிக்க இந்தியா தமிழ் தேசியக் கூட்டமைப்பை அறிவுறுத்தியது என்றா செய்தியை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. அவ்வாறான செய்தி தவறனாது, ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் யாருக்கும் எந்த அறிவுரையோ அல்லது ஆலோசனையோ வழங்கவில்லை என்று அதிகாரபூர்வமாக ட்வீட் செய்துள்ளனர்.
இவ்வாறெல்லாம் அமளி நடக்கும்போது சித்தார்த்தனோ கை கட்டி பார்த்த வண்ணம் இருந்தாரே அன்றி பதிலளிக்கவில்லை. அதேநேரம் என்ன முடிவு எட்டினாலும் டலஸ்சிற்கே வாக்களிப்பேன்- ஏனெனில் டலஸ் புளட் அமைப்பில் இருந்தார் என சித்தார்த்தன் முதல் நாளே தெரிவித்திருந்தார். ( இருப்பினும் முடிவை மாற்றினார்.)
இதேநேரம் 10 கோரிக்கையும் ஒப்பமிட்ட பேப்பர் சுமந்திரனிடமே இருந்தபோதும் அதன் தமிழாக்கம் சி.சிறிதரனின் கைத் தொலைபேசியிலும்அது பதிவேற்றம் செய்யப்பட்டது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட டலஸ் நாம்தான் எழுத்திலேயே வழங்குகின்றோமே அரசு அமைந்தால் ஏன் நீங்கள் அமைச்சுப் பதவியை ஏற்க்கூடாது எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இது ஓம் என வழங்கும் உத்தரவாதம் இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அமைச்சராக வரலாம் என்றபோது நீங்கள் கேட்டதற்கு அதுதான் பதில் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
இவ்வாறு ஒர் தீர்மானத்தை எட்டிய நிலைமையிலும் 2022-07-20 ஆம் திகதிய வாக்கெடுப்பின்போது இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 223 பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். அதில் 04 வாக்குகள் செல்லுபடியற்றது. இதில் 134 பேர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும், 82 பேர் டளஸ் அழகம்மெருமாவிற்கும் வாக்களிக்க 03 பேர் அநுராகுமார திசநாயக்காவிற்கு வாக்களித்தனர்.
தமிழர் தரப்பில் எவருக்குமே வாக்களிக்க மாட்டேன் என முதலில் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இறுதியில் தனது முடிவை மாற்றி ரணிலிற்கு வாக்களித்தபோதும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இலஙபையின் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மற்றும் போட்டியிடவே தகுதி போதாது என நிராக்கப்பட்ட ரணில் தற்போது இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.
இவ்வாறு ரணில் தேர்வானதற்கு ரணிலிற்கு எதிராக வாக்களிப்பதாக தீர்மானித்த கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்குபேர் ரணிலிற்கே வாக்களித்திருப்பர்கள் என தற்போது அறிய முடிகின்றது. அந்த நால்வருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதன் மூலம் இலகுவில் அடையாளம் காணமுடியும்.
இவ்வாறான சூழலில் கூட்டமைப்பின் முடிவை தற்போது சிலர் விமர்சித்தாலும் முடிவு எடுக்கும் முன்போ அல்லது முடிவை அறிவித்து வாக்களிக்கும் முன்போ பதிலளிக்க துணியாது தற்போது விமர்சிக்கின்றனர் என்றும், என்ன முடிவை எட்ட வேண்டும் என ஒரு வார கால அவகாசம் இருந்தபோது வாய்திறக்கவில்லை என்ற கருத்தும் கூறப்படுகின்றது.
இதேவேளை வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்று கூறிய விக்னேஸ்வரன் ஏன் தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்று கேட்டு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதயன் சார்பில் கேட்ட முயன்றோம். எனினும் அவர் பதிலளிக்காததால் அவருக்கு நான்கு கேள்விகளை அனுப்பினோம்.
கேள்வி .01
ஜனாதிபதி தேர்வில் நடுநிலை வகிப்பதாக அறிவித்த நீங்கள் எதன் அடிப்படையில் அந்த முடிவை மாற்றிக்கொண்டீர்கள்?.
கேள்வி. 02.
ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கபடுவதோடு அவரை ஆதரித்த தங்களிற்கு எதிராகவும் போராடும் நிலைமை ஏற்படும் என சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள் ?.
கேள்வி . 03
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்தால் அமைச்சரவையில் பங்குகொள்வீர்களா?.
கேள்வி .04
மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் ரணிலை நம்ப முடியாது அவர் ஒரு பொய்யர் எனத் தெரிவித்த நீங்கள் தற்போது எதன் அடிப்படையில் நம்பினீர்கள் ?
எனினும் இந்த கட்டுரை இணையத்திலும் அச்சுப் பதிப்பிற்கும் செல்லும்வரை அவரது பதில் கிடைக்கவில்லை.