27 உறுப்பினர் நிருவாகக் குழுவை புதிய தலைமை கலைக்க வேண்டும்
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூலை 24
மலேசியவாழ் இந்துப் பெருமக்களின் பாரம்பரிய சமய அமைப்பான மலேசிய இந்து சங்கத்திற்கு ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் புதிய தலைவரானார். இதன்வழி, அந்த ஆன்மிக அமைப்பை சூழ்ந்திருந்த பீடை அகன்றது.
மலேசிய இந்துக்களின் மீதும், இந்து சங்கத்தின்பாலும் மாறாத பற்று கொண்டவரும் சிவநெறியில் திளைத்தவருமான தங்க. கணேசன், முதல் வேலையாக மலேசிய இந்து சங்கத்தின் தற்போதைய 27 பேர் கொண்ட நிருவாகக் குழுவை களைக்க வேண்டும்.
அப்பொழுதுதான், சங்கம் பழையபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குடும்பப் பாங்கான சமயப் ரீதியான அமைப்பாக செயல்படும். குறிப்பாக, இந்து சங்க தேசியப் பொறுப்பாளர்களிடையே எழும் குழு மனப்பான்மையும் பிரிவினையைம் அடியோடு அகலும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மலேசிய இந்து சங்கத்தின் உறுப்பினர்கள் ‘இன்னார்தான் தங்களின் அடுத்தத் தலைவராக வரவேண்டும் என்ற உளமார்ந்த விருப்பத்துடன் தாங்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்க்கும் சூழல் உருவாகும். இல்லாவிடில், இன்று மோகன்ஷாண் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை, அவர் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத சோக அத்தியாத்தை கருப்பு வரலாற்றை இதே கணேசன் தங்கவேலு , எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்றாவது ஒருநாள் எதிர்கொள்ள நேரிடும்.
மலேசிய இந்து சங்க உறுப்பினர்கள் என்ன சொன்னாலும் கவலையில்லை; நிருவாகக் குழுவைச் சேர்ந்த 27 பேரில் 14 பேரை வசப்படுத்தினால் போதும் என்ற அகம்பாவநிலை மாறவேண்டும்.
சங்கமாவது, ஆன்மிகப் பணியாவது; இவையெல்லாம் கிடக்கட்டும் ஒரு மூலையில்; ஆண்டுதோறும் உறுப்பினர்களைச் சேர்த்து அவர்கள் வழங்கும் ஆண்டுக் கட்டண நிதியைக் கொண்டு சமயத் தொண்டாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லாமல், கிடைக்கின்ற வருவாயைவிட தொண்டறத்திற்-கான செலவு அதிரித்தால், அரச உதவியை நாட வேண்டும் என்ற முயற்சி எதுவும் தேவையின்றி, எங்கெங்கு மானியம் கிடைக்கிறதோ அங்கங்கெல்லம் புதுந்து இந்து சங்கத்தின் பெயரால் மானியங்களைப் பெற்று, அவற்றை தனிப்பாத்தி அமைத்து தங்களுக்குள் வசப்படுத்திக் கொள்ளும் திருட்டு தைரியத்தை இந்த 14 பேர் ஆதரவுதான் இன்றோடு கடந்துபோன தலைமைக்கு வழங்கி வந்தது.
இதுகூட பரவாயில்லை; குதிரை கீழேத் தள்ளியது மட்டுமன்றி, மேலும் எட்டி உதைத்த கதையாக, “எல்லாரும்தான் திருடுகிறார்கள்; நாங்கள் என்ன கொலையா செய்தோம்?” என்று கேட்கும் அளவிற்கு உடலில் மட்டும் அல்லாமல் உள்ளத்திலும் திணவெடுக்கிறது என்றால், அதற்கெல்லாம் மூல காரணம் இந்த ’14 பேர் ஆதரவு’தான்.
டத்தோ அ. வைத்திலிங்கம் உருவாக்கிய இந்தக் கட்டமைப்புக்கு காரணம் எதுவுமாக இருக்கலாம். ஆனாலும், இது சீர்கெட்ட கட்டமைப்பு என்பதால், இந்த 27 பேர் நிர்வாகக் குழுவை உடனே களைத்துவிட்டு ‘சங்கரத்னா’ கே. பரமலிங்கம், ‘அருள்நெறிக் காவலர்’ செல்வநடராஜா, ‘தொக்கோகுரு’ டாக்டர் எஸ்.எம்.பொன்னையா, டத்தோ எஸ்.கோவிந்தராஜ், ‘சித்தாந்த செல்வர்’ ஆறு. நாகப்பன், ‘சங்கரத்னா’ எம்.சுப்பிரமணியன் ஆகியத் தலைவர்கள் எப்படி இந்து சங்க உறுப்பினர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அதைப்-போல தங்க. கணேசனும் அடுத்த முறை இந்து சங்க உறுப்பினர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட முன்கூட்டியே வாழ்த்து!.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் மற்ற தலைவர்களைத்தான் கைது செய்தனரேத் தவிர, இறைவனின் கருணையால் என்னை விட்டுவிட்டனர் என்று பொறுப்பின்றியும் தலைமைத்துவ பண்பின்றியும் பேசிய மோகன்ஷானின் உள்ளத்தில் சுயநலப் பேய் குடிகொண்டிருந்தது அப்பட்டமாக வெளிப்பட்டது.
அவரின் லட்சணத்தே அவரே உணர்ந்த காரணத்தினாலோ என்னவோ இன்று ஞாயிறு காலையில் நாட்டின் மையப்பகுதியான சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள புகழ்மிக்க சன்வே அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் இந்து சங்கத்தின் 45-ஆவது தேசிய ஆண்டுக் கூட்டம் கூடியபொழுது, அதனைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மோகன்ஷான் அழுது புலம்பாத குறையாக, உறுப்பினர்களிடம் கெஞ்சிப் பேசினார்.
1965 ஜனவரி 23-இல் நிறுவனச் சட்டத்தின்படி பதிவுபெற்ற மலேசிய இந்து சங்கத்தில், தான் தலைமையேற்றிருந்த 13 ஆண்டு காலத்தில் எத்தனை ஆயிரம் இந்து மக்களை சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்தேன் என்று சொல்ல மோகனுக்கு வகையில்லை; வழியுமில்லை. இருந்தால்தானே கம்பீரமாக எடுத்துச்சொல்ல முடியும். அவரின் எண்ணெமெல்லாம் மானியத் தேடலில்தான் இருந்தது.
இததனை ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை கொண்ட இந்து சங்கத்தில், ஏறக்குறைய 70 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக சொல்லப்-படுகிறது. இது, எந்த அளவுக்கு உண்மையென்று அந்த சிவனுக்கே வெளிச்சம்.
இந்த நிலையில், இன்றையக் கூட்டத்தில் 1,443 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டு கட்சித் தேர்தலிலும் வாக்களித்தனர்.
27 பேர் கொண்ட நிருவாக மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பேராளர்கள் 3 ஆண்டு காலம் பொறுப்பு வகிப்பர்; அதேவேளை, இந்த 27 பேரில் மூன்றில் ஒரு பகுதியினரான 9 பேர் சுழற்சி முறையில் பதவி விலகி, புதிய ஒன்பது பொறுப்பாளர்களுக்கான தேர்தல் ஆண்டுதோறும் நடைபெறும்.
இடையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயமாறன் என்ற மோகன் ஷான் ஆதரவாளர் மறைந்துவிட்டதால் காலியான அந்த இடத்திற்கும் சேர்த்து பத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல் இந்த ஆண்டு இடம்பெற்றது.
இதில் மோகன்ஷானை ஆதரித்து 10 பேரும் மாற்றத்தை முன்வைத்து களம் கண்ட தங்க. கணேசன் சார்பில் 10 பேரும் என 20 பேர் களம் கண்டனர்.
இவர்களில் தங்க.கணேசன் அணி சார்பில் பட்டியலில் அகர வரிசைப்படி இடம்பெற்றிருந்த 1-(டாக்டர் ஏ.கோபி), 2-(ஆதிமூலம்), 4-(ஸ்ரீஅர்ஜுனா எம்.பாலகிருட்டிணன்), 5-(கணேஷ்பாபு), 6-(கணேசன் தங்கவேலு), 8-(டாக்டர் எஸ்.கலைவாணி), 12-(எம்.முனியாண்டி), 13-(இரா.பெருமாள்), 19-(விவேகநாயகி கே.சுந்தரி), 20-(பி.வேலாயுதம்) ஆகியோர் முறையே 974, 947, 939, 954, 967, 952, 931, 918, 917, 916 என்ற அளவில் வாக்குகளை அள்ளி மோகன் ஷான் அணியை அடித்து நொறுக்கினர்.
மோகன் ஷான் அணி சார்பில் போட்டி இட்டவர்கள் 459, 464, 421, 433, 427, 412, 405, 416, 432, 430 என்ற அளவில் வாக்குகளைப் பெற்று ஒட்டுமொத்தமாக தோல்வியைத் தழுவினர்.
இந்த அளவிற்கு மாற்று அணியினர் தெளிவான வெற்றிபெற்ற நிலையிலும் பதவி பறிபோவதைக் கண்டு பொறுக்கமுடியாத மோகன்ஷான் தரப்பு மறுவாக்கு எண்ணிக்கைக் கேட்டதால், அதில் சில மணி நேரம் வீணானது.
ஒரு வழியாக முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், பழைய 17 பொறுப்பாளர்களும் புதிய 10 பொறுப்பாளர்களும் ஒன்றுகூடி புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிலைவந்தபோது, அப்பொழுதும் பதவி விலகியத் தரப்பு கடைசி முயற்சியாக பதவி ஆசைக் காட்டி அதிகமானவர்களை தங்கள் பக்கம் வளைக்கப்பார்த்தது.
அதிலும் தோல்விகண்ட நிலையில், ஒருவழியாக தங்க கணேசன் 17 பேரின் ஆதரவைப் பெற்று புதிய தேசியத் தலைவராக உருவெடுத்துள்ளார்.
டாக்டர் பாலதருமலிங்கம், இரத்தினவேலு, ஜி.ராமநாதன் உள்ளிட்டவர்-களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் மீண்டும் இந்து சங்கத்தில் இணைத்து ஒரு வலிமையான சமய இயக்கமாக உருவாக்குவதே முதல் கடமை என்றும் நிதி நிருவாகத்தில் எந்த ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும் என்றும் தங்க. கணேசன் தெரிவித்தார்.
புதிய நிருவாகத்தில் துணைத் தலைவராக கணேஷ்பாபு, உதவித் தலைவர்களாக வேலாயுதம்-சாந்தா வேணுகோபால், தேசியச் செயலராக மாணிக்கவாசகம், துணைச் செயலராக அழகேந்திரன், பொருளாளராக முனியாண்டி, துணைப் பொருளராக அர்ஜுனா பாலகிருஷ்ணன் ஆகியோரும் தேர்வு பெற்றானர்.
தங்க. கணேசனுக்கும் அவரின் தலைமையிலான அணியினருக்கும் வாழ்த்து.