*-நக்கீரன்*
கோலாலம்பூர், ஆக.02:
ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியா முழுவதும் மொகலாய சாம்ராஜியம் பரவி இருந்தது. அதற்கு முந்தைய பண்டைய காலத்து வேத இந்தியாவில் இந்து ராஜியம் இருந்தது என்பதைப் போன்ற ஒரு பொய்யான கட்டமைப்பைக் கொண்ட ஒரு செய்திக் கட்டுரையை, ஆகஸ்ட் முதல் நாளான நேற்று லண்டன் பிபிசி உலக செய்தி ஒலிபரப்புக் கழகத்தின் தமிழ்ப் பிரிவான தமிழோசை வெளியிட்டுள்ளது.
அண்மைக் காலமாக, லண்டன் தமிழோசை இந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். என்னும் ராஷ்டிரிய சுயசேவை சங்கத்தின் பிரச்சார களமாக விளங்குகிறது.
1925 செப்டம்பர் 25-இல் தோற்றுவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம், இன்னும் மூன்று ஆண்டுகளில் தன்னுடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறது. அதற்கு ஏதுவாக, 2024-இல் நடைபெற உள்ள இந்திய பொதுத் தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சியை எப்பாடு பட்டாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அதீத முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்.-இந்து மகா சபை என்னும் தீவிரவாத அமைப்புகளின் பெயரக் குழந்தையான பாஜக, இப்பொழுது இந்தியாவில் வாழும் பிற இனங்களின் மொழி, பண்பாட்டு, வரலாற்றுக் கூறுகளை அழிக்கவும் அல்லது திரிக்கவும் முற்படுவதன் வெளிப்பாடுதன் ‘ஒரே இந்தியா-ஒரே மொழி-ஒரேக் கலாச்சாரம்’ என்னும் கொள்கை.
இந்திய துணைக் கண்டத்தில் முன்று இனங்கள் வீர மரபுக்கு உரியவை. சீக்கியர்கள், வங்காளியர், தமிழர்கள் ஆகிய இனங்கள்தான் அவை.
இந்த மூன்று இனங்களிலும் தமிழர்கள் மட்டுமே பாரம்பரிய மரபுக் கூற்றையும் தொன்மையான இன அடையாளத்தையும் கொண்டுள்ளனர். இவற்றைவிட, தொல்மொழியான தமிழை பாதுகாப்புக் கவசமாக தமிழர்கள் கொண்டிருப்பது-தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு பெரும் மருட்டலாக உள்ளது.
இருந்தாலும், தமிழர்களின் பொருளாதார கட்டமைப்பு, தொழில்-வர்த்தக மேம்பாடு, கல்வி வளர்ச்சி நிலை, பாரம்பரிய சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ மேன்மை, தொன்மைமிகு வரலாற்றுப் பெருமை என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சிதைக்கவும் மறைக்கவும் திரிக்கவும் முற்பட்டு வருகின்றனர்.
இந்த அடிப்படையில்தான், தமிழர்களின் தொல்வரலாற்றுக்கு கட்டியம் கூறும் குமரிக் கண்ட வரலாற்றை மறைக்கும் வகையில் அது வெறும் நம்பிக்கை மட்டுமே என்ற அடிப்படையில் அ.விக்னேஷ் என்பவர் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை 2021 பிப்ரவரி 11-இல் தமிழோசை வெளியிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து பற்பல செய்திகள் தமிழியத்திற்கு மாறுபட்டு வெளிவந்தவண்ணமாக இருந்தாலும், இப்பொழுது இந்தியாவின் தொன்மையே வேத காலம்தான் என்றும் அப்பொழுது இந்து சாம்ராஜியம் என்ற ஒன்று இருந்ததாகவும் ஒரு பொய்யான கருத்தை அப்பட்டமான வெளியிட்டிருக்கிறது தமிழோசை.
இந்தச் செய்தியை எழுதியவர் பிபிசி செய்தியாளர், ஜுபைர் அஹ்மத் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த , ஜுபைர் அஹ்மத் என்ற பெயரே ஐயத்திற்கு இடமாக இருக்கிறது.
உண்மையில் இந்தியா என்று கட்டமைக்கப்பட்ட நிலப்பகுதி, ஓர் ஆழமான ஆன்மிக பூமிதான். அதில் ஐயமில்லை.
உலக மதங்களில் கிறித்துவம், இஸ்லாம் ஆகிய இரண்டைத் தவிர பிற அனைத்து சமயங்களும் இந்திய மண்ணில்தான் தோன்றின. ஆனால், அப்பொழுது இந்தியா என்ற ஒரு நாடே இல்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை
பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகளைப் பேசி, பல்வித பண்பாட்டு-சமயக் கூறுகளுடன் வட்டார அளவிலும் குறுநில மன்னராட்சி, பெருநில மாமன்னராட்சி என்ற வகையிலும் தனித்தனித்த வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர்.
தமிழர்களைப் பொறுத்தவரை, சக்தி வடிவத்தை வழிபடும் கொற்றவை வணக்க முறைதான் முதன்மையானது. அதுதான் மாரியம்மன் தெய்வம், பத்ரகாளி அன்னை என்றெல்லாம் பலவாறாக பின்னாளில் உருவெடுத்தது. இப்பொழுது, இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள ஆறு சமயக் கொள்கைகளில் ஒன்றான சாக்தம் எனப்படும் சக்தி வழிபாட்டிற்கு இதுதான் அடிப்படை.
ஆதித் தமிழர்களின் கொற்றவை வழிபாடுதான், முதல் முதலாக கட்டமைக்கப்பட்ட முறையான இறைவணக்க முறை என்றாலும் அதற்கு முன்னம், அவரவரும் மனம்போன போக்கில் இயற்கையின் பல்வேறு வெளிப்பாடான பொழுது புலரும்-மறையும் வேளைகளில் தோன்றும் செஞ்சூரியன், முழுநிலவு நாளில் தோன்றும் பெருநிலவு, கடுங்காற்று, பெருமழை, இடி-மின்னல், மலர் மணம், வானத்தேத் திரளும் கருமேகக் கூட்டம், கொடிய விலங்குகள், சலசலக்கும் அருவி உள்ளிட்ட அனைத்து வடிவங்களுடன் பகல்பொழுதில் தன்னுடன் இணைந்துவரும் சொந்த நிழலையும்கூட ஒருவித பயம்-மிரட்சியுடன் வணங்கி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவை யாவும் இமய மலை அடிவாரப் பகுதியில் இருக்கும் கைபர் கணவாய் வழியாக பார்ப்பனர் என்னும் பிராமணர்கள் நுழைந்தபின் மெல்லமெல்ல மாறத் தொடங்கின.
இந்த மண்ணின் பாரம்பரிய பழஞ்சமயங்களான பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்தவர்கள் அவர்கள்தான். இப்பொழுது, இந்து சமயம் என்ற பெயரில் சைவ நெறிக்கும் பெருந்திரை போட்டிருப்பதும் இதேப் பார்ப்பனர்கள்தான். பரிகாரமும் வேள்வியும் இல்லாவிடில் அவர்களின் சோற்றுத் தட்டு, வெற்றுத் தட்டாகிவிடும்.
நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்த பிராமணர்களுக்கு உருவ வழிபாட்டு முறை தெரியாது; ஆலயக் கட்டமைப்பிலும் நம்பிக்கை இல்லை; அவர்களுக்கு ஆலயமும் கட்டத் தெரியாது; அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வேள்வி என்னும் யாகம்தான். அந்த யாகத்தில் தாங்கள் வளர்க்கும் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளை வாட்டி உண்பது அவர்களின் பண்பு.
வறண்ட நிலங்களில் சுற்றித் திரிந்த இவர்கள் இந்தியாவில் நுழைந்தபின் செழுமையான நிலம், ஓரிடத்தில் மக்கள் கூடிவாழும் போக்கு, உயர்ந்த மாளிகை, உயர்கோபுரங்களைக் கொண்ட ஆலயம் போன்றவற்றைக் கண்டு வியந்து, இந்த மண்ணிலேயே நிலைகொள்ளத் தலைப்பட்டனர்.
அதற்காக அவர்கள் கையில் ஏந்திய அயுதம் தர்ப்பப் புல்; சிவப்புத் தோலும் அவர்களுக்கு கைகொடுத்தது. ஒன்றாக வாழ்ந்த மக்களிடத்தில் சாதிய ஏற்றத் தாழ்வை உருவாக்கி, ஒருவன் தாழ்ந்தவனாகவும் ஏழையாகவும் இருப்பதற்கு பிறவிப் பயன் என்னும் கரும வினைதான் காரணம் என்று கர்ப்பித்து, அத்துடன் சொர்க்கம், நகரத்தைக் கட்டமைத்து, அதிக பரிகாரம் செய்தால் அடுத்தப் பிறவியில் நன்மை விளையும்; சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்றெல்லம நம்பவைத்து மெல்ல மெல்ல தங்களை மேநிலைப்பட்டவர்-களாகவும் உயர்சாதிக்காரர்களாகவும் பூசனை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டதாகவும் கற்பிதம் செய்தனர்.
மன்னர்கள்கூட, இவர்களை குறிசொல்லும் ராஜகுருவாக ஏற்றுக் கொண்டு அரண்மனையில் உயரிடம் வழங்கிவிட்ட நிலையில், பொதுமக்களின் நிலையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
பிராமணர்களின் நான்மறைகளில் ஒன்றான ரிக் வேதத்தின் 153-ஆவது பாடலில் பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள் (மன்னர் பரம்பரையினர்), தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள்(வணிகத் தொழிலினர்), பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள்(விவசாயி, வண்ணார், நாவிதர், துப்புறவு தொழிலாளி உள்ளிட்டவர்கள்) என்றும் மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பஞ்சமர் என்னும் தீண்டத்தாகாதவர்களுக்கு பிரம்மாவின் உடலில் இடமே இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் காலத்திலேயே நிலைத்துவிட்டது இந்த பிராமண மேலாண்மை. மற்ற இனத்தில் சிந்தனையாளர்கள் தோன்றினால், அவர்களுக்கு பித்துபிடித்துவிட்டது என்று கதைகட்டி அவர்களைக் கொளுத்தச் சொல்லி இருக்கின்றனர்.
பாண்டிய மண்ணில் திருக்குறள் நூலுக்கு அரங்கேற்றம் செய்யவிடாமல் தடுத்த இவர்கள், கம்பர் இயற்றிய இராமாயணத்தையும் அரங்கேற்றம் காணாமல் தடுத்ததால், கம்பர் ஊர் ஊராக அலைந்தார். சிவனெறிப் பாடல்கள் பதிக்கப்பட்ட திருமுறை ஓலைச் சுவடிகளையே அதுவும் பரம்பொருளர் சிவபெருமான் அம்பலத்தாடும் சிதம்பர சன்னிதானத்திலேயே தமிழையும் சைவத்தையும் ஒருசேர அழிக்க முற்பட்ட தமிழ் விரோதியர் இந்த பார்ப்பனர்கள்.
இவ்வாறாக பார்ப்பனிய மேலாதிக்கம் நிலைப்பட்டுவிட்ட நிலையில், 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் பேரள-வில் வெடித்தது. அனைவரும் தம் உடல்-பொருள்-ஆவி என அனைத்தையும் ஈகம் செய்து விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வேளையில், பார்ப்பனர்கள் மட்டும் விடுதலை பெறும் இந்தியாவை தங்களின் ஆதிக்கம் மிக்க இந்து-இந்தியாவாக உருவாக்குவது என்பதைப் பற்றி திட்டமிட்டனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்துத்துவத்தை கலந்துவிட்டவர்கள் பாலகங்காதர திலகர் உள்ளிட்ட மராட்டிய சித்பவன பார்ப்பனர்கள்தான். மராட்டிய சாம்ராஜியத்தில் சிப்பாய்களாக இருந்ததால் இவர்களுக்கு கொஞ்சம் வீர மரபும் உண்டு.
ஆங்கிலேயர் ஆட்சியில் பெண் தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்களை இயக்குபவர்களுக்கான பாதுகாப்பில் முன்னுரிமை கொடுக்கவும் எட்டு மணி நேர வேலை என்பதை வரையறுக்கவும் சிறார் தொழிலாளர்களை மட்டுப் படுத்தவும் சட்டம் இயற்ற முன்வந்தபோது, “ஆங்கிலேய ஆட்சியினர் இந்தியாவில் உருவாகும் சுதேசி முதலாளிகளை ஒடுக்கப்பார்க்கின்றனர்” என்று அறிவித்து அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தவர் இந்தத் திலகர்.
விடுதலைக்கு முன், ஆங்கிலேயர் உருவாக்கிய மாநில சட்டமன்றங்களில், தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பிற சாதியினரும் கோரிக்கை வைத்தபொழுது, விவசாயி என்ன சட்டமன்றத்தை உழப் போகிறாரா? வணிகன் என்ன தராசு-படிக்கல்லுடன் சட்டமன்றத்திற்கு வரப் போகிறானா? என்றெல்லாம் கொக்கரித்துவிட்டு, அரசியலை எங்களிடம் விட்டுவிடுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பேசியவர் திலகர்.
பிளேக் என்னும் நோய் பேரளவில் பரவி, பல்லாயிரக் கணக்கான மக்கள் வாந்தி-பேதியால் கொத்துக் கொத்தாக மடிந்தபோது, அதை பெருநோய்க் காலமாக அறிவித்து, பிளேக் நோய்க்கான கிருமி எலிகள் மூலமாகத்தான் பரவுகின்றன என்பதைக் கண்டறிந்து எலிகளை அழிக்க முற்பட்ட பொழுது, எலிகள் பிள்ளையாரின் வாகனம் என்பதால் அவற்றைக் கொல்லக் கூடாதென்று போராட்டமே நடத்தியவர் திலகர்.
இப்படிப்பட்ட திலகர்தான் விநாயகர் சதுர்த்தி விழாவை முதல் முதலில் பேரளவில் அறிமுகப்படுத்தினார்.
மலேசியாவில், ஹரி ராயா என்ற பெயரில் கொண்டாடப்படும் நோன்புத் திருநாள், தமிழகம்-இந்தியா-இலங்கையில் எல்லாம் ரம்ஜான் பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படும்.
அது இஸ்லாமியத் திருநாளாக இருந்தாலும் சமய நல்லிணக்க விழா என்று சொல்லும் அளவிற்கு சைவ, வைணவ சமயங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமயத்தினரும் ஒருங்கிணைந்து கொண்டாடிய சமய விழாவாக ரம்ஜான் விளங்கியது.
அதைக் கெடுத்தவர் திலகர். இந்துக்கள் யாவரும் ரம்ஜான் பண்டிகையில் பங்கேற்கக் கூடாதென்று தடைவிதித்தவர் இவர்தான்.
அந்த நேரத்தில் ஏறக்குறைய இந்து சமயம் கட்டமைக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயர்கள் தொடர்ந்து எதிர்-கொண்ட ஒரு சிக்கல், மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான். கிறித்துவர்-களையும் இஸ்லாமியர்களையும் கணக்கெடுத்துவிட்ட நிலையில், மற்றவர்களை எப்படி கணக்கிடுவது? சமய அடிப்படையில் என்றால் சைவ சமயத்தினர் எத்தனை பேர்? வைணவர் எண்ணிக்கை என்ன?சமணம், பௌத்தம், பார்சியினர் ஆகியத் தரப்பினரை யெல்லாம் எப்படி கணக்கிடுவது என்ற குழப்பத்தில் நீண்டகாலம் தவித்துக் கொண்டிருந்தனர்.
பிரிட்டீஷ் அரண்மனையில் இருந்து அரசியும் இதுகுறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதால், அடிமை இந்தியாவின் ஆட்சியாளர்கள் கைபிசைந்து நின்றனர்.
இதேநேரத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலைப் போராட்ட களத்தில் தீவிரவாத பிரிவிற்கு தலைமை ஏற்றிருந்த திலகர் போன்ற பார்ப்பனர்கள் தங்களுக்கே அதிக வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.
இதற்காக சைவம், வைணவம், சாக்தம், கணபதியம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு சமயக் கொள்கைகளை உள்ளடக்கி இந்து சமயம் என்பதைக் கட்டமைத்து, இவர்கள் யாரை யெல்லாம் கீழ்ச் சாதியினர் என்று ஒதுக்கி வைத்தார்களோ அவர்களை யெல்லாம் கணக்கில் சேர்த்து “பாருங்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களைவிட இந்துக்கள்தான் அதிகம்; அதனால் எங்களுக்கே அரசாங்க வேலைகளில் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திலகர் ஆங்கில ஆட்சியாளர்களிடம் தொடர்ச்சியாக குரலெழுப்பி வந்தனர்.
இவ்வாறு 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டமைக்கப்பட்டதுதான் இந்து சமயம். இதைக் கண்ட ஆங்கில நிருவாகிகளுக்கு, இது ஒரு வகையில் வசதியாக அமைந்துவிட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில், யாரெல்லாம் இஸ்லாமியர் இல்லையோ; எவரெல்லாம் கிறிஸ்துவர் இல்லையோ மற்ற அனைவரும் இந்துக்கள் என்று குத்து மதிப்பாக அறிவித்துவிட்டனர்.
சீக்கிய சமயம் உள்ளிட்ட பிற சமயங்களை யெல்லாம் கணக்கில் கொள்ளவில்லை.
அதைப்போல, பிரிட்டிஷ் நீதி நிருவாக அமைப்பில் இருப்பதைப் போல இந்தி-யாவிலும் ஒரு பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கான அடிப்படையை அவர்கள் தேடிக் கொண்டிருந்தபோது, மனு சாத்திரத்தைக் கொடுத்தவர்-களும் இந்த சித்பவன பார்ப்பனர்கள்தான். இங்கிலாந்தின் Privy Council-கிளைதான் இந்திய உச்சநீதிமன்றமாக அப்போது செயல்பட்டது.
ஆக, மனு சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவில் முதல் முதலாக பொது இந்து சிவில் சட்டம் வரையப்பட்டது. இதைச் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள்.
இவ்வாறு, பிராமணர்கள் கட்டமைத்த வேதங்கள், நிகண்டுகள், இராமாயண- மகாபாரத புனை காவியங்கள் உட்பட எந்த இடத்திலும் இந்து மதம் பற்றி சொல்லப்படவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் புத்தம் புதிதாகக் கட்டமைக்கப் பட்டததுதான் இந்து சமயம்.
வரலாறு நெடுகிலும் இந்து என்ற சொல், சமய இலக்கியங்களில் இல்லவே இல்லை; ஆனாலும், ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை மட்டும் குறிக்க இந்தச் சொல் பயன்பட்டுள்ளது; மாறாக, மத அடிப்படையில் அல்ல.
எகிப்து நாகரிகத்திற்கு முந்தைய கிரேக்கக் கல்வெட்டுகளில் மட்டும் அரிதாகக் காண்படும் ஹிந்துஷ் என்னும் சொல், எப்படி அரேபியர்கள் இந்தப் பகுதிக்கு வந்தபொழுது சிந்து நதியின் அடுத்தக் கரையை ஒட்டியுள்ள நிலப் பகுதியை ‘அல்-சிந்த்’ என்றும் ‘அல்-ஹிந்த்’ என்றும் அழைத்தார்களோ அதைப்போல இடத்தின் அடையாளமாகத்தான் ஹிந்துஷ் என்று கிரேக்க மொழி கல்வெட்டில் காணப்படுகிறது.
காஞ்சி சங்கராச்சாரியார்கூட, “நல்ல வேளையாக ஆங்கிலேயன் நமக்கு இந்து என்று பெயர் வைத்தான்; அதனால் தப்பித்தோம்; இல்லாவிடில் நாமெல்லாம் சைவர் என்றும் வைணவர் என்றும் இன்னும் பிற மத அடையாளங்களுடன் பிரிந்து நிற்போம்” என்று அவர் வெளியிட்ட பருவ இதழிலேயேக் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட உண்மை சம்பவங்கள், அண்மைய நிகழ்ச்சிகளாக நம் கண் முன்னே தெரியும் வேளையில், பண்டைய வேத கால இந்தியா என ஒரு தேசக் கட்டமைப்பு இருந்ததாகவும் அதில் இந்து ராஷ்டிரம் என்னும் அரசக் கட்டமைப்பு இருந்ததாகவும் சொல்வது அப்பட்டமான கட்டுக்கதை; பொய்மூட்டையின் மொத்த வடிவம். ஒரு வகையில், இது தமிழ்த் துரோகம்.
இந்திய துணைக் கண்டத்தில் செழித்திருந்த நாகரிகம் திராவிட நாகரிகம்தான் என்பதை மொகஞ்சதாரோ, ஹாரப்பா நாகரிக அடையாளங்கள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன; அந்த நாகரிகம் தமிழர்களால் உருவாக்கப்பட்டது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது; அத்துடன், நிகழ் காலத்தில் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சபுரம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சி முடிவுகளும் இந்த நிலத்தின் பூர்வ குடியினர் தமிழர்கள்தான் என்பதை உலகுக்கு அடித்துச் சொல்கின்றன.
இவை அத்தனையையும் மூடி மறைக்கப்பார்க்கும் இன்றைய இந்தியாவின் பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் பார்க்கிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கொள்கை என்பது, இந்து ராஜியம்-பிராமணர் ஆதிக்கம்-சமஸ்கிருத மேலாண்மை என்பவைதான். இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிற்கு திலகர் வழிவந்த சித்பவன பிராமணர்கள்தான் வர முடியும்.
இவ்வாறு பார்ப்பன மேலாதிக்கக் கட்டமைப்பிற்கு அடித்தளமிட்ட திலகரின் நினைவு நாளான ஆகஸ்ட் முதல் நாளில், லண்டன் தமிழோசை திட்டமிட்டே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னம், மொகஞ்சதாரோ-ஹரப்பா நாகரிகம் தமிழர்களுடையதுதானா என்று கேள்வி எழுப்பும் கட்டுரையையும் தமிழோசை வெளியிட்டது.
உலகளாவிய பொதுநோக்கையும் உண்மைத் தகவலையும் அடிப்படையாகக் கொண்டு விளங்க வேண்டிய பன்னாட்டு செய்தி நிறுவனமான லண்டன் தமிழோசையின் தமிழ் விரோதப் போக்கை நாளைய உலகம் தெளிவாக வரையறை செய்யும்.
வாழ்க தமிழ்! வெல்க தமிழர்.!!