ஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் ஞாயிறு மாலை கனடா வீணைமைந்தன் அவர்களின் வாழ்வில் ஓரு பொன்னாள்.திரு நல்லூர் சண்முகப்பெருமானின் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருந்திருவிழா ஆறாம் நாள் முருகப்பெருமான் ஆட்சிசெய்யும் திருத்தலத்துக்கு அண்மையில் அமையப்பெற்றுள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் வீணைமைந்தன்-75 பவள விழா வெகு விமரிசையாக ஆரம்பமானது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் யாழ்.இலக்கிய வட்ட த்தலைவருமான சிரேஷ்ட பேராசிரியர் என். சண்முகலிங்கனார் தலைமையில் கலை இலக்கியப்படைப்பாளிகளும் கற்றறிந்தசான்றோரும் நிறைந்த அவையிலே இனிதாய் அமையப்பெற்றது. அன்றைய விழா கனடா உதயன் தொடர் எழுத்தாளர் ‘கனடா வீணைமைந்தன்’ அவர்களை ‘யாழ்மைந்தன்’ ஆக உயர்த்திய விழாவாக அமையப்போகின்றது என்பதை ஆரம்பத்திலேயே கட்டியம் கூறும் வகையில் அன்றைய வைபவம் அமைந்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்து கனடிய தேசத்தில்வாழ்ந்து வரும்,தாய்மண்ணையும்-தாய் மொழியையும் நேசித்து வாழும் கலை- இலக்கியப்படைப்பாளியின் பவளவிழாவினை தாய் மண்ணிலே கொண்டாடி இலக்கிய உலகம் பெருமிதம் கண்டது. மங்கள ஒளி தீபமேற்றலுடனும் செல்வி தீட்சனா உமாகாந்தனின் இறை வணக்கத்துடனும் இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் இசையமைத்துப்பாடிய புலவர் பார்வதி நாதசிவம் அவர்களின் தமிழ் மொழி வாழ்த்துடனும் அரங்கு தெய்வீகமயமானது.
.வாழும்போதே கலை இலக்கிய படைப்பாளிகளைக் கௌரவிக்கும் இலக்கிய வட்டம் ,மனச்செம்மையான படைப்பாளி ,எழுபத்தைந்து வயது இளைஞன் வீணைமைந்தன் பவளவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது’ என தன் வரவேற்புரையிடை அடிக்கோடிடுவார் யாழ். இலக்கிய வட்ட செயலாளர் நயினை கி. கிருபானந்தா.
தாய்மண்னையும் தாய் மொழியையும் நேசிக்கும் ஆளுமை என நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பாமாச்சாரிய சுவாமிகள்பொன்னாடை அணிவித்து ஆசி வழங்கினார். தொடர்ந்து வீணை மைந்தனிடம் அன்பும் நட்பும் பூண்ட தெல்லிநகர் பிரம்மஸ்ரீ கி. கணேசமூர்த்தி சர்மா அன்றைய பாடசாலைக்காலத்தில் முளைவிட்ட சண்முகராஜாவின் திறமைகளை இனங்காட்டி இன்று பல சிகரங்களை அவர் தொட்டமை பெருமகிழ்ச்சி தருகின்றது என்றார்.
’அனுபவம் என்ற பல்கலைக்கழகத்தில்ன நிறையவே கற்றுக்கொண்ட வீணை மைந்தன் சண்முகராஜாவின் அயராத தேடல் மகத்துவமானது. இடம்பெயர், புலம்பெயர் அவலங்களியெல்லாம் தாண்டி நிமிர்ந்த பண்பாட்டு மேன்மைக்கான அவர் வாழ்வின் உண்மை அழகைக்கொண்டாடுவதில் யாழ் இலக்கியவட்டம் பெருமிதம் கொள்கின்றது’ என தலைமையுரையின் போது குறிப்பிடுவார் பேராசிரியர் சண்முகலிங்கன். தலைமையுரையைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்றன. எங்கள் பெருங்கலைஞர் நடிகமணிவி.வி. வைரமுத்து அவர்களின் கலைவாரிசுகளுள் ஒருவரான திருமதி வசந்தா ஐயாத்துரை முன்னொரு காலத்தில் நாடக நடிகனாக வேடமேற்ற வீணைமைந்தனுக்கு ஒப்பனை செய்து அரிதாரம் பூசியதை நினைவு கூர்ந்து தந்தையார் நடிகமணியின் மயான காண்டத்தின் இறுதிப்பகுதியை பாடிப்பரவசப்படுத்தி கண்ணீர்மல்க வைத்தார். மூத்த கவிஞரான ’சோ.ப’ அவர்கள் வீணைமைந்தனின் ‘தொலைந்து போன வசந்தகாலங்களூடாகவும் , கவிதைகள் வழியாகவும் தன் அன்பையும் ரசனையையும் வெளிப்படுத்தினார்.
யாழ்.பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா,தனது இளமைக்கால நினைவுகளோடு வீணைமைந்தன் கட்டுரைகள்,கவிதைகளை ஒப்பிட்டு சிலிர்ப்பூட்டினார்.
தொடர்ந்து வீணைமைந்தனின் கல்விச்சாலையான காங்கேசந்துறை அமெரிக்கன் மிஷன்பாடசாலை மூத்த மாணவரும் வலி-வடக்கு மீள் குடியேற்ற அமைப்பின் செயல் வீரருமான அ.குணபால சிங்கம் உரை நிகழ்த்தினார். யாழ்பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி கலாநிதி சுகந்தினி ஸ்ரீ முரளீதரன், யாழ்ப்பாணத்தமிழ்ச்சங்க தலைவரும் ஆசிரிய கலாசாலை உப அதிபருமான திரு ச.லலீசன், வலம்புரி நாளிதளின் பிரதம ஆசிரியர் திரு ந.விஜய சுந்தரம், தொழில் சார் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி செல்வ நாயகம் , எழுத்தாளரும் கவிஞருமான திருமதி உமா மோகன்(கனடா) ஆகியோர் வீணைமைந்தனின் பல்துறை ஆற்றல்களை கலை நயத்துடன் பகுப்பாய்வு செய்தனர்.
தொடர்ந்து பவளவிழா மலர் வெளியீடு இடம்பெற்றது. சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு இரா. இராஜேஸ்கண்ணன் வீணை மைந்தன் -75 பவள விழா மலரின் அழகையும் அதன் வழி வெளிப்படும் வீணை மைந்தன் ஆளுமைத்திறத்தினையும் தன் வெளியீட்டுரையில் திறம்பட வெளிப்படுத்தினார்.
முதல் பிரதியை தமிழ்த்தேசிய பசுமை இயக்க தலைவரும் வட மாகாண சபை முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் பெற்று கௌரவப்படுத்தினார்.
வீணைமைந்தனின் கவிதை புனையும் ஆற்றலை அன்றேகண்டறிந்து ஊக்கப்படுத்திய புலவர் பார்வதிநாதசிவம் அவர்களின் புதல்வர் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு மகாலிங்கசிவம் அவர்களின் நயமான பவளவிழா மலர் நயப்புரையைத்தொடர்ந்து , யாழ் இலக்கிய வட்டத்தின் சார்பில் பாமாலை வாழ்த்து இசைத்து வழங்கப்பட்டது. மேலும் வீணைமைந்தன் உறவுகள், ரசிக அன்பர்கள் பலரும் மலர்மாலை சூட்டியும் வாழ்த்துப்பாக்கள், பொன்னாடை மணியாரங்களுடன் அழகுசெய்து அன்பில் திழைக்கவைத்தனர்.
’சிறுவட்டமான என்னையாழ் இலக்கியவட்டம் –தமிழ் கூறும் நல்லுலகில் பெரிய வட்டமாக அறிமுகம் செய்து பெருமைப்படுத்தி விட்டது” என்று மெய் சிலிர்ப்புடன் வீணைமைந்தன் ஏற்புரை வழங்க பவள விழா இனிதே நிறைவு கண்டது .
(யாழிலிருந்து கனடா ‘உதயன்’சிறப்புச் செய்தியாளர்.)