யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்.
கிளிநொச்சி பிரதேச சபை நகர சபையாக தரமுயர்வு கண்டால் சபையின் எல்லைப் பரப்பில் வாழும் காணி அனுமதிப் பத்திரம் அற்றவர்கள் நில உரித்தை இழக்கும் அபாயம் ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றனர்.
கரைச்சி பிரதேச சபை எல்லைப் பரப்பில் தற்போது கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 59 கிராம சேவகர் பிரிவுகள் உண்டு. ஆனால் 11 கிராம சேவகர் பிரிவுகள் மட்டுமே நகர சபையாக மாறும்.
எஞ்சிய கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் பிரதேச சபையாகவே இருக்கும். அதனால் இந்த 11 கிராம சேவகர் பிரிவிற்கு வெளியில் இருப்போர் எந்த அச்சமும்கொள்ளத் தேவையில்லை என்பது முதலாவது விடயம்.
நகர சபையாக மாறும் 11 பிரிவுகள்.
நகர சபையாக மாறும் கிராம சேவகர் பிரிவுகளாக வரும் கிளிநகர், ஆனந்தபுரம், இரத்தினபுரம், ஜெயந்திநகர், திருநகர் தெற்கு, திருநகர் வடக்கு, கணேசபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுடன் உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, கனகபுரம் மற்றும் விவேகானந்த நகர் ஆகிய 11 கிராம சேவகர் பிரிவுகள் மட்டுமே நகர சபை எல்லைப் பரப்பிறகுள் உள்ளடங்குகின்றன.
இதேநேரம் கரைச்சி பிரதேச சபையில் இருந்து நகர சபையாக மாறும் எல்லைப் பரப்பில் தற்போது காணி உறுதியோ அல்லது காணி அனுமதிப் பத்திரம் அற்றவர்கள் இந்த வகை நெருக்கடிக்குள் அகப்படுவர் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய அச்சமாக கூறப்பட்டது.
முன்னாள் காணி ஆணையாளரின் கருத்து.
நீண்டகாலம் வடக்கில் காணி ஆணையாளராக பணியாற்றிய குகநாதனைத் தொடர்பு கொண்டு இவை தொடர்பில் விபரம் கேட்டபோது,
உறுதி மற்றும் காணி அனுமதிப் பத்திரங்களிற்கு அப்பால் ஏற்கனவே காணிக்கு விண்ணப்பித்து காணிக் கச்சேரி இடம்பெற்றவர்களும் இந்த நெருக்கடிக்குள் அகப்பட மாட்டார்கள். இதனால் காணி அனுமதிப் பத்திரம் இல்லாது விடினும் அனைவரும் உடன் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அவர்களிற்கான காணிக் கச்சேரியை துரிதப்படுத்தினால் இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்றார்.
நெருக்கடியை எதிர்கொள்ளும் 2, 347 பேர்
தற்போது நகர சபையாக தரம் உயரும் கிராம சேவகர் பிரிவில் உறுதிக் காணிகள் தவிர்ந்து அனுமதிப் பத்திரக் காணிகள் 2 ஆயிரத்து 466 உண்டு. இதேபோன்று 3 ஆயிரத்து 800 காணிகளிற்கு காணி அனுமதிப் பத்திரம் இல்லையெனவும் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதும் காணி அனுமதிப் பத்திரம் அற்ற 3 ஆயிரத்து 800 காணிகளிலும் ஆயிரத்து 453 காணிகளிற்கு ஏற்கனவே காணிக் கச்சேரி இடம்பெற்றுவிட்டது.
இவற்றின் பிரகாரம் தற்போதும் 2 ஆயிரத்து 347 காணிகளின் உரிமையாளர்கள் இந்த நெருக்கடிக்குள் அகப்படுகின்றனர். இதனைத் தடுக்க வேண்டுமானால் கரைச்சி பிரதேச செயலாளரே துரிதமாக செயல்படவேண்டிய தேவை உள்ளது.
கரைச்சி பிரதேச செயலகம் ஏற்கனவே காணிக் கச்சேரி இடம்பெற்ற ஆயிரத்து 453 காணிகளிற்குமான அனுமதிப் பத்திரங்களை வழங்க ஆவண செய்வதோடு எஞ்சிய 2 ஆயிரத்து 347 காணிகளிற்கும் காணிக் கச்சேரியை உடனடியாக நடாத்த ஆவண செய்வதே தீர்வாக முடியும் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.
மாவட்ட அரச அதிபரின் பதில்
இவை தொடர்பில் மாவட்டச் செயலாளரான திருமதி றூபவதி கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு தமக்கு ஏறபடக்கூடிய ஆபத்து தொடர்பில் மக்கள் முன் வைக்கும் கோரிக்கைக்கு என்ன தீர்வு எனக் கேட்டபோது,
உடனடியாகவே மாகாண காணி ஆணையாளரான சோதிநாதனுடன் தொடர்பு கொண்டு இந்த 11 கிராம சேவகர் பிரிவிற்குமான காணிக் கச்சேரியை நடாத்துமாறு கோரிக்கை விடுத்தபோது அதனை ஏற்றுக்கொண்டு 4 உத்தியோகத்தர்களை தற்போது மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த நான்கு உத்தியோகத்தர்கள் சகிதம் கரைச்சி பிரதேச காணி உத்தியோகத்தர் ஊடாக இதுவரை காணி அனுமதிப் பத்திரமோ அல்லது அதற்கான காணிக் கச்சேரி இடம்பெறாதவர்களின் விபரங்கள் துரிதமாக திரட்டப்படுகின்றது. அது நிறைவுற்ற உடனேயே காணிக் கச்சேரிக்கு ஏற்பாடு இடம்பெற்று 3 தினங்கள் தொடர்ச்சியாக நடாத்த எண்ணியுள்ளோம் என்றார்.