இலங்கை அரசு விடுதலைப் புலிகள் மீது முன்னெடுத்த கொடூரமான யுத்தத்தின் போது பலவகையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கவீனர்கள் ஆயினர். வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத பலர் அந்த குறைபாடுகளுடன் வேறு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வகையில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போரின் காரணமாக குறைந்தபட்சம் 500 பேரும் விபத்துக்களின் காரணமாகக் சுமார் 100 பேரும் முள்ளந்தண்டு வடம் பாதித்த நிலையில் இன்றும் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்வது மட்டுமன்றி இவர்களிற்கான விசேட வசதி வாய்ப்பையுடைய மெத்தைகள், சக்கர நாற்காலிகள், கழிப்பறை வசதிகள் என்பன கிடைக்கப்பெறாத நிலையில் கடும் போராட்டங்களிற்கிடையே வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் முதல் கட்ட முன்னெடுப்பாக, வடமராட்சியில் vada 91 உயர்தர மாணவர் அமைப்பினரால் உயிரிழை நிறுவனத்தின் பயனாளிகளுக்காக 10 சக்கர நாற்காலிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
VADA 91 உயர்தர மாணவர் அமைப்பின் புலம்பெயர் நண்பர்கள் அண்மையில் வடமராட்சியில் நடந்த ஒன்றுகூடலுக்குக் கலந்து கொள்ள வந்த பொழுது உயிரிழை அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களது தேவைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். இதன்போது அவர்களது வேண்டுகோளின்படியே இந்த 10 சக்கர நாற்காலிகள் மற்றும் முள்ளந்தண்டு வடம் பாதித்தவர்களிற்கான கழிப்பறை வசதிக்கு பயன்படுத்தக்கூடிய சக்கரநாற்காலிகள் என்பவற்றை அன்பளிப்பாக வழங்க முன்வந்தனர்.
அவ்வகையில் VADA 91 உயர்தர மாணவர்கள் சார்பாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் உமாசங்கர் அவர்கள் மேற்படி சக்கர நாற்காலிகளைக் கையளித்தார்.
போர் முடிந்து 13 ஆண்டுகளாகின்ற நிலையில் முள்ளந்தண்டு வடம் பாதித்த 600 பேரில் மேலும் பலர் இந்த வசதி வாய்ப்பிற்காக இன்றும் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சிரமத்தின் மத்தியில் இருப்பதற்கு ஒவ்வொருவரிற்கும் இதற்கான வசதி வாய்ப்பை ஏற்படுத்துவதானால் முன்னர் 10 லட்சம் ரூபாவும் தற்போது 25 லட்சம் வரையிலும் செலவு ஏற்படுவதே இதற்கான காரணமாகவுள்ளது என்கின்றனர். இதன் அடிப்படையில் இவ்வாறான உதவிகள் தமக்குப் பெரிதும் கை கொடுக்கும் என பயனாளிகள் தெரிவித்தனர்.