யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்
இலங்கையில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் `தியாகி திலீபனின்` உயிர்க்கொடை மிகவும் முக்கியமான மைல்கற்களில் ஒன்றாகும். அந்த விடுதலைப் போராடத்தை புரட்டிப் போட்ட சம்பவங்களில் அவர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தது காலத்தால் அழியாதது.
அவரது நினைவேந்தலே பல ஆண்டுகளாக சவால் நிறைந்த ஒன்றாக இருந்துள்ளது. இராணுவக் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள், வகைதொகையற்ற கைதுகள் என்பது ராஜபக்சக்களின் ஆட்சியில் அன்றாட நடைமுறையாக இருந்தது. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு `பின் வாசல் வழியாக` ஜனாதிபதியாக ராஜபக்சக்களின் `பினாமியாக` ரணில் ஆட்சி செய்து வந்தாலும், நினைவேந்தலுக்கு தடைகள் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே அவருக்குப் பெருந்திரளான மக்கள் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இந்த ஆண்டு உள்ளது.
ஆனால், மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த ஆண்டு புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அவரது தியாகத்தை அரசியலாக்கி அதில் ஆதாயத்தைப் பெற வேண்டாம் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாகவுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையேயுள்ள மோதல் மேலும் வெளிப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலில் அரசியல் பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஷை கண்டித்து, விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவராக இருந்த `பஷீர் காக்கா` என்று அறியப்படும் முத்துக்குமார் மனோகர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
நல்லூரில் இன்று (15) இடம்பெற்ற ‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் சட்டத்தரணி சுகாஷ் ஒலிபெருக்கி வாயிலாக அரசியல் கருத்துக்களைத் தெரிவித்தார். இதன்போது நினைவேந்தலில் கலந்துகொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த போராளியாக இருந்த பஷீர் காக்கா, நினைவேந்தல்களில் கட்சி அரசியலைக் கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் எனத் தெரிவித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றையும் பஷீர் காக்கா வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்ல எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலைக் கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என தயவுடன் வேண்டுகிறேன் – அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிழியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் (பஷீர் காக்கா) ஆகிய நான் வேண்டுகோள் விடுகிறேன் என்று மிகுந்த ஆதங்கத்துடன் அந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
”இந்த ஆண்டின் திலீபன் நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வு தொடங்கும் முன்னர் பிறிதொரு அணியினரை சாடும் வகையில் சட்டத்தரணி சுகாஷ் உரையாற்றியமை எமக்கு வேதனையை உண்டாக்குகிறது. நேற்று இவர் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டாளரும் திலீபனை நேரில் கண்டவர்களில் ஒருவருமாகிய பொன் மாஸ்டரிடம் இந்நிகழ்வை பொதுநிகழ்வாக நடத்துவதில் உங்களுக்குள்ள சங்கடங்கள் என்னவென்று கேட்டேன். எதுவும் இல்லை என பதிலளித்தார். அது திருப்தி அளித்தது.
அந்த நம்பிக்கையைச் சிதறடிக்கும் விதத்தில் சட்டத்தரணி சுகாஷ் இன்றைய தினம்(15) நடந்து கொண்டார். ஏற்கனவே மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏனைய கட்சிகளைத் தாக்கும் களமாகப் பயன்படுத்த வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன்”.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனை கடைப் பிடிப்பதாக தன்னிடம் உறுதியளித்தார், எனினும் கிளிநொச்சியில் நிகழ்ந்த மாவீரர்களின் பெற்றோருடைய கௌரவிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடியமை பற்றி செய்தி பத்திரிகையில் வெளியான போது தான் மிகவும் வேதனைப்பட்டதாகவும் தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
”அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொன் மாஸ்டரை சந்தித்து உரையாடினேன். எனவே இவ்வாண்டு திலீபனின் நினைவு நிறைவடையும் வரைக்கும் அரசியலை கலக்காமல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாட்டமாக அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன். எமது உணர்வுகளை எதிர்காலத்தில் மதிப்பார்கள் என நம்புகிறேன்” – என்று தனது அறிக்கையில் உருக்கமாகக் கூறியுள்ளார்.
இதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சீ.வி.கே.சிவஞானம் அஞ்சலி செலுத்த வந்தபோது `ஒற்றையாட்சியை ஏற்றவர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்துவதாக` சுகாஸ் தெரிவித்தபோது விடுதலைப் போராட்டம் இடம்லெற்ற காலத்தில் ஓடி ஓளித்த சுகாஸ் அதற்காக பல முனைப்பில் ஈடுபட்ட சீ.வி.கே.யை விமர்சிக்க தகுதியற்றவர் எனத் தெரிவித்ததோடு `தியாக தீபம்` திலீபனிற்கு இரண்டு தடவையும் இதே இடத்தில் நினைவுத் தூபியை அமைத்தவரே சீ.வி.கே தான் என்பதனை அறியாதவர் சுகாஸ் என அங்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்தவர்கள் எள்ளி நகையாடினர்.
மூத்த போராளிகளில் ஒருவரான பஷீர் காக்காவின் கருத்து தொடர்பில் தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸை கனடா உதயன் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது,
”தியாக தீபம் திலீபனின் ஆரம்ப திகழ்வு இன்று ஆரம்பமானபோது ஒற்றையாட்சிக்கும் 13ஆம் திருத்தத்திற்கும் எதிராக உண்ணா நோன்பு இருந்து வீரச்சாவடைந்த திலீபனின் வழியில் பயணிப்போம் என நாம் கூறுவது எந்த வழியிலும் அரசியல் ஆகாது இது தமிழர்களின் அபிலாசையாகும். இதனை அரசியல் என்றால் இந்த அரசியலை தொடர்ந்தும் மேற்கொள்வோம்”.
மேலும் “மூத்த போராளி பஷீர் காக்கா இவ்வாறான கருத்தை முன் வைப்பது ஒற்றையாட்சியினையும் 13ஐயும் ஏற்கும் தரப்புக்களை பாதுகாக்க முற்படுகின்றாரா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது, இது வேதனையான விடயம் என்றார்.
வீரச்சாவடைந்த திலீபனின் நோக்கத்தையடைய நாம் தொடர்ந்தும் பயணிப்போம் என சபதம் எடுக்கின்றோம் இது அரசியல் என்றால் அந்த அரசியலை மேற்கொள்வோம் என்றும் சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளருமான கனகரட்னம் சுகாஸ் உறுதிபட கூறினார்.
இதேநேரம் இந்த அரசியல் கூத்துகளின் மத்தியில் அதாவது முன்னணியின் இரு அணியினரின் போட்டி அரசியலின் மத்தியிலும். உணர்வுள்ள மக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர்.
இந்திய அரசிடம் நீதி கோரி 5 அம்சக் கோரிக்கையை முன் வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு உணர்வுபூர்வமாக இன்று தொடங்கி அனுசரிக்கப்படுகிறது.
திலீபன் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 12 நாள்கள் நல்லூர் வீதியில் உண்ணா நோன்பை ஆரம்பித்த அதே நேரத்தில் இன்று காலை நல்லூரின் பின் வீதியில் அமைந்துள்ள நினைவுத் தூபி இடத்தில் இந்த ஆண்டின் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.
பிரதான சுடரேற்றலைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், உறவுகள் மற்றும் மதகுருமார் பொதுமக்களுடன் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வை தொடர்ந்தும் 12 நாட்களும் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசியல் சர்ச்சைகள் இடம்பெற்றுள்ளது பொதுமக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திலீபனின் நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான தூபி முன்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டது .
பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முதல் தேசிய எழுச்சிக்கொடி கட்டப்பட்டு பிரதான தூபியில் மாணவர்களால் அமைக்கப்பெற்ற நினைவாலயத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவனால் பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகை சுடரும் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் பொழுது யாழ். பல்கலைக் கழக தமிழ் மாணவர்களுடன் இஸ்லாமிய சிங்கள மாணவர்களும் இம்முறை உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்ததோடு மேலும் யாழ் பல்கலை கல்விசாரா ஊழியர்கள் , யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய இளைய தலைமுறையினர் அதிலும் புலம் பெயர்ந்த தேசத்தில் பிறந்தவர்கள் அறிந்துகொள்வதற்காக தியாகி திலீபன் முன் வைத்த 5 அம்சக் கோரிக்கைகள்.
* பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
* வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து 13 ஆண்டுகளானாலும், 35 ஆண்டுகளிற்கு முன்னர் திலீபன் முன்வைத்த கோரிக்கைகள் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.