யா/ வட்டு இந்துக் கல்லூரியில் 15.09.2022 திகதி வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.அப்புத்துரை ஆனந்தராசா அவர்கள் தலைமையில் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான திறன் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இத் திறன் வகுப்பறைக்கான பொருட்கள் இரத்தினம் அறக்கட்டளை நிறுவுனர் திரு. இ. நித்தியானந்தன் அவர்களினதும்; லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரதும் நிதி அனுசரணையுடன் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினரான திரு அருளம்பலம் ஆனந்தராசா அவர்களும், சிறப்பு விருந்தினரான திரு சி.மதியழகன் பிரதிக் கல்விப்பணிப்பாளர், திட்டமிடல் பிரிவு, வலிகாமம் கல்வி வலயம் அவர்களும் திறன் வகுப்பறைக்கான பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்ததோடு இத் திறன் வகுப்பறையை நாடா வெட்டி உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பிரதி அதிபர் திருமதி வதனி தில்லைச்செல்வன் அவர்களது வரவேற்பு உரையும், பாடசாலை மாணவனது திறன் பலகையைப் பயன்படுத்தி தாவரக்கலம் பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர் உரையாற்றிய போது இரத்தினம் அறக்கட்டளை நிறுவுனர் திரு. இ. நித்தியானந்தன் அவர்களுக்கும் லண்டன் பழைய மாணவர் சங்கத்துக்கும் இத் திறன் வகுப்றையை விஞ்ஞான பாடம் கற்கும் மாணவர்களது கற்றலை ஊக்குவிக்கும் முகமாகாக அன்பளிப்பாகத் தந்துதவியமைக்கு நன்றி தெரிவித்தார்.
பிரதிக் கல்விப்பணிப்பாளர் (திட்டமிடல்) வலிகாமம் கல்வி வலயம் திரு சி.மதியழகன்; அவர்கள் தனது உரையில் யா/ வட்டு இந்து கல்லூரி பல வரலாற்று சாதனைகளை பதிந்து வருகின்றது எனவும், இம் முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சகல பிரிவுகளிலும் சிறந்த பேறுபேறுகளை பெற்றுள்ளது எனவும் பாராட்டுக்களை தெரிவித்தார். பிரதம விருந்தினராக கலந்து கொண்ட திரு அருளம்பலம் ஆனந்தராசா புதிய தொழில் நுட்ப மாற்றத்துக்கேற்ப மாணவர்கள் தொழில்நுட்ப சாதனங்களை கையாண்டு கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும் எனவும் அதற்கு தங்களது உதவிகள் எப்பொழுதும் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.