எமது யாழ் செய்தியாளர்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரின் அலுவலகங்கள் முன்னாள் போராளிகளினால் முற்றுகையிடப்படும் நிலை ஏற்படும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் செயலாளர் கதிர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”தியாக தீபம் திலீபனின் வரலாறு என்பது தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் வரலாறாக இருக்கின்றது. இவர் மக்களுடைய விடுதலைக்காக ஜனநாயக வழியிலே அகிம்சை போராட்டத்தினை ஆரம்பித்து வீர மரணத்தை தழுவிக்கொண்டவர்” என்றார்.
களத்தில் மடிந்த மாவீரர்களை அரசியல் ரீதியான தேவைகளுக்குப் பயன்படுத்துவது இதுவரை தவிர்க்கப்பட்டு வந்தது. அவர்களின் தியாகங்கள் என்பது போற்றப்பட வேண்டியது. எனவே அவர்களை குலதெய்வங்களாக கௌரவித்து பூஜித்து வந்திருக்கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் மேலும் தெரிவித்துள்ளார்.
”இன்றைய சூழலில் போராளிகளை நினைவுகூருவது என்பது விடுதலைப் புலிகளாகிய எங்களின் கடமையாகும். இதனை எங்களது தாயக மண்ணிலே செய்வதற்கு அரசியல் கட்சிகளுடைய தலையீடு எங்களுக்கு இடையூறாக இருக்கின்றது. அண்மையில் திலீபனின் நினைவுத்தூபி அமைந்திருக்கின்ற இடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலையீடு என்பது மிக மோசமான ,கீழ்த்தரமாக இருந்தது. தங்களின் கட்சி அரசியலுக்காக பயன்படுத்துவதற்காக தீவிரமான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். தாயகப் பகுதியில் இருக்கின்ற உங்களின் அலுவலகங்கள் , வாழ்விடங்கள் அனைத்தும் ஆயிரக்கணக்கான போராளிகளால் முற்றுகை இடப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கின்றேன்” என்று அவர் கூறினார்.
போராட்டம் என்பது மக்களின் விடுதலைக்காக,தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்று முழுதாக தலைமைத்துவம் வழங்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. தமிழ் தேசியக் குழுக்கள் போன்ற குழுக்களால் இன்று தலைமைத்துவம் சிதைவுற்று இருக்கின்றது. போராளிகள் எடுத்த வகுப்பில் தான் இன்று நீங்கள் நிற்கிறீர்கள்.இதனைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் அரசியலுக்காக தமிழ் தேசியத்தை விற்றுப் பிழைக்காதீர்கள் என்றும் அவர் அரசியல்வாதிகளைக் கடுமையாகச் சாடினார்.
எதிர்காலத்தில் எங்கள் மக்களுக்காக உண்மையான, நேர்மையான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றோம். விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள், நாங்கள் தான் இனி தமிழ் தேசியவாதிகள் என்று தலை தூக்கிக்கொண்டு வர கூடாது. ஒரு போதும் தாங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்றும் அவர் ஊடகவியாலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இன்று தமிழ்த் தேசியம் பற்றி பேசுபவர்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் போர்க்காலத்தில் ஓடி ஒளிந்து தமது உயிருக்குப் பயந்து சட்டத்துறையில் கல்வி கற்றபதற்காச் சென்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய கதிர் தாங்கள் தம்மைப் போன்ற போராளிகள் போராடியதால் தான் இன்று தமிழ் தேசிய அரசியல் பேசுபவர்கள் அரச அங்கீகாரம் பெற்று வந்து நிற்கிறார்கள் என்றும் வலியுறுத்தினார். தமக்கு தேசத்தின் அங்கீகாரம் இருக்கிறது அதை அரசியல் கட்சிகள் தட்டிப் பறித்துக்கொண்டு அவர்கள் அரசியலுக்குக் கொண்டு போவதனை தாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் மேலும் தெரிவித்தார்.