திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களை யார் அனுஷ்டிப்பது என்பதில் முரண்பாடுகளை தோற்றுவித்திருக்கிறது.
கஜன் அணியானது தாங்கள் ஏற்கனவே நினைவு கூர்தலுக்கான ஒரு கட்டமைப்பை பொன் மாஸ்டரின் தலைமையில் உருவாக்கியிருப்பதாக கூறுகிறது. அதேசமயம் மணிவண்ணன் அணியானது கடந்த வாரம் நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை புதிதாக உருவாக்கியிருக்கிறது. திலீபனின் நினைவுத்தூபி மாநகர எல்லைக்குள் வருகிறது. எனவே மேயர் மணிவண்ணன் தலைமையிலான மாநகர சபை நினைவு கூர்தலுக்கான ஏற்பாடுகளை தன் கையில் எடுக்க முயற்சித்தது. ஆனால் அதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜன் அணி ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் மணிவண்ணனை டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவோடு மாநகர சபை முதல்வராக வந்தவர் என்று குற்றம் சாட்டுகின்றார்கள்.எனவே தேவானந்தாவின் ஆதரவை பெற்ற ஒருவருக்கு திலீபனை நினைவு கூரும் தகுதி இல்லை என்று அந்த அணி குற்றச்சாட்டுகிறது.
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவு திலீபனின் நினைவு நாளை பாதிக்க கூடாது என்ற அக்கறையோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சாராத சிலர் இரண்டு தரப்புக்கும் இடையே உரையாட முற்பட்டார்கள். மணிவண்ணன் வெளிநாட்டிலிருந்து வர முன்னரே இது தொடர்பாக அவர்கள் மாநகர சபையோடு உரையாடத் தொடங்கி விட்டார்கள். எனினும் மோதல்கள் தொடங்கிய பின்னர்தான் அதாவது திலீபனின் நினைவு நாள் தொடங்கிய பின்னர்தான் மணிவண்ணனின் ஏற்பாட்டில் ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த உரையாடல்களில் முதன்மை வகித்தது பஷீர் காக்கா என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஆகும். அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் என்பதோடு அவருடைய ஒரு மகளையும் போரில் இழந்திருக்கிறார். அவர் இதற்கு முன்னரும் நினைவுகூர்தல் தொடர்பான உரையாடல்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார். குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தல் தொடர்பாக அவர் ஏற்கனவே தன்னால் இயன்ற பல முன்முயற்சிகளை எடுத்திருக்கிறார். ஆனால் அவை யாவும் அவருக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையே முரண்பாட்டை தோற்றுவித்தன. இப்பொழுது திலீபனின் நாட்களிலும் அதுதான் நடந்திருக்கிறது.
பஷீர் காக்கா உள்ளிட்ட சிலர் இது தொடர்பாக கஜன் அணியோடும் மணிவண்ணன் அணிவோடும் உரையாடி இருக்கிறார்கள். கஜேந்திரனை தொலைபேசியில் அழைத்தபோது அவர் மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்தார். எனவே தன்னுடைய பதில் ஆளாக கட்சியின் பேச்சாளர் சுகாஷ் உடன் உரையாடுமாறு கேட்டிருக்கிறார்.அதேசமயம் பஷீர் காக்கா தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பொன் மாஸ்டரிடம் இது தொடர்பாக உரையாடியிருக்கிறார். பகீர் காக்காவைப் போலவே பொன் மாஸ்டரும் திலீபன் உயிருடன் இருந்த காலங்களில் அவரோடு நெருக்கமாக பழகியவர்.எனவே இந்த விடயத்தில் பொன் மாஸ்டருக்கு ஊடாக அக்கட்சியை அணுகுவது பொருத்தமாக இருக்கும் என்று பசீர் காக்கா நம்பியிருக்கக்கூடும். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நிலைமைகள் இருக்கவில்லை.
திலீபனின் நினைவு நாட்களின் தொடக்க நாளில் சட்டத்தரணி சுகாஷ் ஆற்றிய உரையில் பஷீர் காக்காவின் வேண்டுதலை மீறி மணிவண்ணனை மறைமுகமாகச் சாடியுள்ளார்.பஷீர் காக்கா அதற்கு எதிர்ப்பு காட்டியிருக்கிறார்.ஆனால் பொன்மாஸ்டரும் அதை பொருட்படுத்தவில்லை. சுகாசும் பொருட்படுத்தவில்லை. இதனால் பஷீர் காக்கா பகிரங்கமாக ஓர் அறிக்கையை விட்டார். காணொளியும் விட்டார்.
சர்ச்சைகளின் பின்னணியில் திலீபன் தீசன் என்று அழைக்கப்படும் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த கருத்துக்களை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டான் ரிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திலீபன் தீசனும் பார்த்திபனும் கலந்துகொண்டார்கள். திலீபன் தீசன் கஜன் அணியைச் சேர்ந்தவர். பார்த்திபன் மணிவண்ணன் அணியை சேர்ந்தவர். திலீபன் தீசன் பின்வருமாறு கூறுகிறார்…. ” போராளிகள் என்ற போர்வையில் நீங்கள் எங்களுக்கு வகுப்பெடுக்க கூடாது. காரணம் என்னவென்றால்,இந்தப் போராட்டம் வளர்ந்ததே மக்கள் ஆதரவினால்தான். மக்கள் ஆதரவு இல்லாமல் போராட்டம் வளர்ந்திருக்குமா? எனவே போராட்டம் தொடர்பாக நாங்கள் தான் தியாகம் செய்தோம் எங்களுக்குத்தான் உரிமை இருக்கு என்று யாரும் கதைக்கேலாது…”
இவ்வாறான சர்ச்சைகளின் பின்னணியில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் நாவலர் மண்டபத்தில் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் போன்றவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் வந்திருக்கவில்லை. சிறீதரன் தனது பிரதிநிதியாக கிளிநொச்சி பிரதேச சபைத் தலைவரை அனுப்பியிருந்தார். சித்தாந்தன் தனது பிரதிநிதியாக யாழ். மாநகர சபை உறுப்பினரை அனுப்பியிருந்தார். விக்னேஸ்வரனும் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தார். மதத்தலைவர்கள் அங்கே வந்திருக்கவில்லை.மேலும் யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கணேசலிங்கன்,அரசியல் விமர்சகர் ஜோதிலிங்கம் போன்றோர் வந்திருந்தார்கள்.
நினைவு கூர்வதற்குரிய ஒரு பொதுக் கட்டமைப்புக்குள் கட்சிகளை இணைக்க வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதற்குள் இணைத்துக் கொள்ளப்பட்ட ஐங்கரநேசன்,சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. எனவே கட்சிசாரா செயற்பாட்டாளர்கள் ஆறு பேர்களைக் கொண்ட கொண்ட ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கட்டமைப்புக்கு ஏற்பாட்டளராக மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதையும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பார்த்திபன் மணிவண்ணனின் அணியை சேர்ந்தவர். நினைவு கூர்தலை முன்வைத்து மணிவண்ணன் அணியும் கஜேந்திரக்குமார் அணியும் மோதும் நிலைமைகள் அதிகரித்து வருவதனால்,அதை தவிர்ப்பதற்கு அரசியல்வாதிகள் யாரும் அப்பொதுக் கட்டமைப்பில் இருக்க வேண்டாம் என்று கேட்கப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை நடந்த இரண்டாவது சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
நினைவு கூர்தல் பொறுத்து உருவாக்கப்பட்ட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பொதுக் கட்டமைப்பு இது.ஆனால் இது தொடர்ந்து இயங்குமா இல்லையா என்பதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தல் உட்பட எல்லா நினைவு கூர்தல்களுக்குமான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிந்திக்கப்பட்டு வருகிறது. அதற்குரிய சந்திப்புகள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மட்டங்களில் நடந்தும் இருக்கின்றன. ஆனால் அவை எவையும் பிரயோசனமான முடிவுகளைத் தரவில்லை. இம்முறை உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பு எவ்வளவு தூரம் தொடர்ந்து செயல்படும் என்று இப்பொழுது சொல்ல முடியாது.ஏனென்றால் ஏற்கனவே இது போன்று உருவாக்கப்பட்ட பொதுக் கட்டமைப்புகள் பொதுவானவைகள் ஆக இருக்கவில்லை என்றும் மிகச் சிலர் அதை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முற்படுவதாகவும் விமர்சனங்கள் உண்டு.
இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பில் உள்ள விசேஷம் என்னவென்றால், முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள், போரில் தியாகிகளாகிய பிள்ளைகளின் பெற்றோர்,மதத்தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குடிமக்கள் அமைப்புகள் போன்றவற்றின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகிப்பதுதான்.
எனினும், இது மணிவண்ணனின் வேலை என்றே கஜேந்திரகுமார் அணி கூறப்போகிறது.அந்த அணியைச் சேர்ந்த பொன் மாஸ்டர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி மணிவண்ணன் உருவாக்கிய அணிக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். எனவே, கஜேந்திரகுமாருக்கும் மணிவண்ணனுக்கும் இடையிலான முரண்பாட்டை இப்பொதுக்கட்டமைப்பு பிரதிபலிக்குமா இல்லையா என்பதை பொறுத்துத்தான் இக்கட்டமைப்பின் அடுத்த கட்டம் எது என்பது தெரியவரும். அதாவது திலீபனின் நினைவுகள் கட்சி அரசியலுக்குள் சிக்குப்படத் தொடங்கிவிட்டன என்று பொருள்.