(21-09-2022)
யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டி, குறித்த காணியினை துப்புரவு செய்து 22ம் திகதிக்கு முன் தமக்கு அறியத்தரவேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் குறித்த ஆவணம் தங்களால் கையேற்கப்படும் எனவும் வல்வெட்டித்துறை நகரசபை சிவப்பு எச்சரிக்கையினை காட்சிப்படுத்தியுள்ளது.
இது குறித்து வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் இராமச்சந்திரன் சுரேன் ஊடகங்களுக்கு தொிவிக்கையில், பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக துப்புரவு செய்ய முயற்சித்தால் பொலிஸ், இராணுவம் என பிரச்சினைகள் வரும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் நகரசபை தொடர்ச்சியாக அந்த வளாகத்தை துப்புரவு செய்யும் எவரேனும் அதற்கு உரிமைகோரினால் பராமரிப்பு செலவுடன் மீள வழங்கப்படும் என்றார்.
இந்த காணி நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
இது குறித்து எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், வல்வெட்டித்துறையில் எத்தனை இடங்களில் கடுகளாக பற்றைகள் வளர்ந்துள்ளது. அனைத்துக்கும் சிவப்பு எச்சரிக்கை ஒட்டியுள்ளார்களா? அந்த காணியை நானே பொறுப்பேற்று துப்புரவு செய்வேன் என்றார்.