ஐக்கிய இராட்சியத்தைத் தளமாகக் கொண்ட இரட்ணம் பவுண்டேசன் மற்றும் லண்டன் வாழ் ஈவினை, புன்னாலைக்கட்டுவன் ஒன்றியம் ரு.மு, பல இலண்டன் பழைய மாணவர்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் யா/ஈவினை அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை ஒன்றில் ஆரம்பபிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் 2022 புரட்டாதி 22ம் திகதி குதூகலமாக ஆரம்பிக்கப்பட்டது.
இக்கல்லூரியின் முதல்வர் திரு.ம.தரணீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வலிகாமம் கல்விவலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.பொ.ரவிச்சந்திரன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக யாஃபிரான்பற்று கலைமகள் வித்தியாலய அதிபர் திரு.சோ.ஸ்ரீகிருஷ்ணா அவர்களும், வளவாளர் திரு.சி.சிவரதீஸ் அவர்களும் கலந்து விழாவினை சிறப்பித்து வைத்தனர்.
விழாவில் வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட திறன் வகுப்பறையானது கல்விப்பணிப்பாளர் அவர்களாலேயே திரைநீக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆசிரியர் ஒருவரால் கற்றல் செயற்பாடு நடாத்தப்பட்டதுடன் மாணவர்களும் தமது செயற்பாட்டை திறன் பலகையில் செய்து காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பின்தங்கிய அடிப்படைவசதிகள் குறைந்த எமது பிரதேசத்தில் இத்தகைய கல்வி வசதி எமக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமே. இதனைப் பயன்படுத்தி நாம் உச்சப்பயனைப் பெறுவோம் என
பாடசாலையின் மாணவத்தலைவனால் கூறப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
உதவியளித்திருந்த லண்டன் வாழ் ஈவினை, புன்னாலைக்கட்டுவன் ஒன்றியம், லண்டன் பழைய மாணவர்கள், மற்றும் இரட்ணம் பவுண்டேசன் அமைப்புக்கும் அதிபர் உட்பட விருந்தினர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், திறன் பலகையைப் பயன்படுத்தி மாணவர்கள் தமது ஆராய்வூக்கம் மற்றும் ஆக்கும் திறன் முயற்சிகளுக்காக எவ்வாறு பயன்படுத்தி சிறப்பாகத் துலங்கலாம் என்பது பற்றிய அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.