நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என, கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி சாவித்ரி சர்மா தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரர் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் எனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிடமிருந்து பணத்தை வாங்கி தருவதாக” குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு ஓடி மாணவியை காப்பாற்றிய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான மாணவியுடன் தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்த அத் தந்தை பொருளாதார பிரச்சனையில் தான் இருப்பதுடன், தனது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, குறித்த மாணவியை சிறு தடி ஒன்றில் தாக்கியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.