முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரியும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை இடம் மாற்றக்கோரி யும் 24 மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்களின் போராட்டம் நேற்று வியாழக்கிழமை (6) நான்காவது நாளாக தொடர்கிறத நிலையில், கொழும்பிலிருந்து வருகை தந்த கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குழு விசாரணையினை தொடங்கியுள்ளது.
அதிகாரிகளின் விசாரணை நேற்று வியாழக்கிழமை (6) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராடி வரும் மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாசம் மற்றும் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் முல்லைத்தீவு பங்கு அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் ஆகியோர் தங்கள் முறைப்பாட்டினை விசாரணைக் குழுவிடம் முன்வந்துள்ளார்கள்.
இதேவேளை தடைசெய்யப்பட்ட தொழிலுக்கு ஆதரவான மற்றைய மீனவ அணியின் பிரதிநிதிகளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை இன்றுடன் நிறைவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொடர் போராட்டகாரர்கள்,
கொழும்பில் இருந்து விசாரணை குழு விசாரணை செய்துள்ளது. 8 பேர் சென்றுள்ளார்கள். நல்ல பதிலை எங்களுக்கு தரலாம் என விசாரணை குழு சொல்லப்படுவதற்கு அமைய அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளோம்.
எதிர்வரும் 12ஆம் திகதி கடற்றொழில் அமைச்சரும் நல்லதொரு பதிலை கொண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் இன்று போராட்டத்தினை இந்த இடத்தில் இருந்து விலகி செல்கின்றோம்.
தவறும் பட்சத்தில் அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என்று சங்கங்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அ.அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கோரிய போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உறவுகளுக்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்