இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுக்கு எழுத்து மூலமாக கடிதம்.
(11-10-2022)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றாத பெண் விரிவுரையாளருக்கு 19 மாதங்களாக 13 மில்லியன் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் துறையில் பணியாற்றும் பெண் விரிவுரையாளர் எந்தவொரு பாடநெறிக்கும் விரிவுரைகளை மேற்கொள்ளாத போதிலும் துறைத் தலைவரின் அறிவுறுத்தலை மீறி 19 மாதங்களாக அவருக்கான கொடுப்பனவாக 13 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் குறித்த கடிதத்தில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
யாழ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை பெண் விரிவுரையாளர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ சுகவீன விடுமுறையை தனது சுய விருப்பின் பேரில் எடுத்திருந்தார்.
பின்னர் எந்த விதமான ஆட்சேர்ப்பு நடைமுறையையும் பின்பற்றாது , மருத்துவ பரிசோதனைக்கு கூட உட்படுத்தாது , ஒழுங்கு முறைகளை மீறி இரு ஆண்டுகளுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டது.
குறித்த விரிவுரையாளர் 19 மாதங்களாக எந்த வேலையும் செய்யாத போதிலும் , சம்பளம் மற்றும் ஆராய்ச்சி கொடுப்பனவு என்பன துணைவேந்தரால் வழங்கப்பட்டு வருகிறது.
இவை தொடர்பில் பிரதமர் மற்றும் அதிபருக்கு முறையிட்ட துறைத் தலைவர் கடந்த மாதம் 27ஆம் திகதி “தொடர்பாடல் நெறிமுறை மீறல்” என குற்றம் சாட்டி துறைத் தலைவர் பதவியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எந்த குற்றமாக இருந்தாலும் , குற்றப்பத்திரிகை வழங்கி விளக்கம் கேட்டு , அது திருப்தி இல்லையெனில் விசாரணை நடத்தி அதில் குற்றவாளியாக கண்டாலே பதிவு நீக்கம் செய்ய முடியும்.
ஆனால் அவை எதுவும் இன்றி துறைத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆகவே குறித்த பாரபட்சமான நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கலாநிதி சுரேன் ராகவனுக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.