வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர்.
- ‘ஊழல்’ – ‘மோசடி’ ஆட்சியில் அமர்வோருக்கு ‘அரசியல் சித்தாந்தம்’. எதிரணியினருக்கு அடுத்த தேர்தலுக்கான ‘பரப்புரைக்கான மூலதனம்’;.
- மொட்டுக்குள் சங்கமித்த யானை.
இலங்கையில் தேர்தல் வேண்டுமென ஒரு தரப்பினர் குரல் எழுப்புகின்றனர்.ஆனால் ராஜபக்ஷதரப்பினர் இப்போதைக்கு தேர்தல் அவசியமில்லை எனக் கூறுகின்றனர்.முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்ஷ இப்போதைக்கு தேர்தல் எல்லாம் அவசியமில்லை எனக் கூறுகின்றார். இதே நிலைப்பாட்டில்தான் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவும் உள்ளார்.
தொடர்ந்து இரண்டரை வருடங்களுக்கு நாட்டை தமது பிடியிலேயே வைத்துக் கொண்டால் மக்களை திசை திருப்பிவிடலாம் எனபதே இவர்களது எதிர்பார்ப்பாகும். இந்த அதீத நம்பிக்கையுடன் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்கள் பொருளாதாரக் குற்றங்கள்குறித்து ஜநா மனித உரிமை பேரவைவரை பேசப்படுகின்றது. ஆனால் மஹிந்த அணியினர் அதுபற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாது தாம் அரசியலில் மீண்டெழும் வழிவகைகுறித்த சிந்தனையுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.
- ‘மீளாத்துயிலை’ நோக்கி ஜதேக.
ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவும் இந்த கலங்கிய குட்டைக்குள் ஜதேகவுக்கான ‘அரசியல் இலாபங்களை‘ அறுவடையாக்கிவிடலாம் என்ற நப்பாசையில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார். இந்த விசப் பரீட்சையில் அவர் வெற்றி பெறுவாரா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் இந்தப் பரீட்சை ஜதேகவை ‘மீளாத் துயிலில்‘ ஆழ்த்திவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மஹிந்த ராஜபக்ஷ – ரணில் அணியினருக்கு எதிராக நாட்டு மக்கள் ஓரணியில் நிற்க இதுபற்றிய எவ்வித கூச்சமும் இன்றி இந்த எதிர்ப்புகள் ‘ஜனநாயக சக்திகளுக்கு‘ எதிரானதென முழக்கமிட்டு நிற்கின்றனர்.
துரதிஸ்டவசமாக மக்கள் வழங்கிய தமது ஆணையை மீளப் பெறும் எவ்வித ஏற்பாடுகளும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை. ஆளும் வர்க்கத்துக்கு சார்பான எற்பாடுகளையே அரசியலமைப்பு கொண்டிருக்கின்றது. இதன் விளைவே மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மற்றும் ரணில்விக்ரமசிங்க தலைமையிலான பொம்மை அரசாங்கம் அமையக் காரணமாகியுள்ளது.
- மொட்டுக்குள் சங்கமித்த யானை
இன்றைய இந்த ஆடசியின் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கிளைவிட்ட பொதுஜன பெரமுன சுதந்திரக் கட்சியை விழுங்கி ஏப்பமிட்டே இன்று விருட்சமாக நிற்கின்றது. இதே கட்சி இன்று தென்னிலங்கையின் தாய்க் கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியையும் தன்னுள் இணைத்துக் கொண்டுள்ளது. இதனையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனக் கட்சியின் களுத்துறை மகாநாட்டில் தெரிவித்துள்ளார். ஜதேக ரணில் விக்ரமசிங்க தற்போது எங்களுடன் இணைந்துள்ளார் என்று மஹிந்த ராஜபக்ஷ இலங்கை மக்களுக்கு அறிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் இந்தக் கூற்றின் மறைமுக அர்த்தம் என்ன. ஜதேகவுக்கும் ரணில்விக்ரமசிங்கவுக்கும் அரசியல் எதிர்காலம் ஒன்றிருந்தால் அது பொதுஜன பெரமுன கட்சியுடன்தான் என ஆரூடம் கூறுவதுபோன்று உள்ளது. இதுவரை தாமரை மொட்டுடன் வரும் யானையைப் பார்த்திருக்கின்றோம். இப்போது மொட்டுக்குள் வீழ்ந்து கிடக்கும் யானையைப் பார்க்கின்றோம்.
- ரணில் – மஹிந்த அணியினருக்கு அரசியல் எதிர்காலம் உண்டோ?
உண்மையில் மக்கள் விரோதப் போக்கின் மொத்த உருவமான ரணில் – மஹிந்த அணியினர் இருவருக்குமே இலங்கையில் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை வரலாறு பதிவு செய்யும். ஏனெனில் மக்கள் பேசுகின்ற ‘ஜனநாயகத்திற்கும்‘ ரணில் – மஹிந்த அணியினர் பேசுகின்ற ‘ஜனநாயகத்திற்கும்‘ இடையில் எந்த ஒட்டும் உறவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் மக்கள் கோருகின்ற ஊழல் மோசடி திருட்டு எனபவைகளுக்கான நீதி குறித்து ரணில் – மஹிந்த அணியினர் பேச மறுக்கின்றனர்.
- ரணிலை பேசவைத்தது சமூக ஊடகங்களே!
இன்று சமூக ஊடகங்கள் குறித்து ரணில்விக்ரமசிங்க அவர்கள் பேசுகின்றார். ரணில்விக்ரமசிங்க அவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இதே சமூக வலைத் தளங்களையும் ஊடகங்களையும் வைத்துக் கொண்டே ‘இலங்கையின் மீட்பர்‘; ரணில்விக்ரமசிங்க என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டவர் என்பதை அவரும் அவர் சார்ந்த அணியினரும் மறுக்கமாட்டார்கள்.
அதேவேளையில் சஜித் பிரேமதாச மற்றும் அநுராகுமார திசாநாயக்க ஆகியோரின் நாளாந்த அரசியல் பரப்புரைகளும் மக்கள் சந்திப்புகளும் ரணில் – மஹிந்த அணியினருக்கு பெரும் தலைவலியாக இருப்பதாகவும் ஜதேக தரப்பிலும் மொட்டு தரப்பிலும் பேசப்படுகின்றது.
- மக்கள் ‘ஜனநாயக விரோதிகளா’? ‘பயங்கரவாதிகளா?
இலங்கை அரசியலின் ‘சிஷ்டத்தில் மாற்றத்தை‘ கோரி நிற்கின்ற தென்னிலங்கை மக்கள் ஊழலில் ஈடுபடுபவர்கள் மோசடிக்காரர்கள் நாட்டை சூறையாடுபவர்கள் நாட்டுக்கோ அரசியலுக்கோ வேண்டாம் எனக் கோரி நிற்கின்றனர். ஆனால் இந்த மக்களை ரணில் – மஹிந்த அணியினர் ‘ஜனநாயக விரோதிகளாக‘ ‘பயங்கரவாதிகளாக‘ முத்திரை குத்தியுள்ளனர்.
அதுமாத்திரமல்ல இன்றைய ஆட்சிமக்களை மென்மேலும் கஷ்டத்திற்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் வீழ்த்திவிட்டு நாட்டு மக்களை தொடர்ந்தும் பயபீதிக்குள்ளும் நிச்சயமற்ற எதிர்காலத்திற்குள்ளும் வைத்துக் கொண்டு எங்களாலேயே நாட்டையும் மக்களையும் மீட்க முடியும் என்ற சித்தாந்தத்துடன் ஆட்சி நடத்துகின்றனர்.
- மக்களிடம் ‘நலம்’ விசாரிக்கும் மொட்டு
ஜனநாயகத்தையும் மக்கள் வாழ்வையும் மக்களுக்கான சித்தாந்தத்தையும் இருட்டுக்குள் தள்ளி விட்டு மக்களை சந்திக்க செல்லும் மொட்டுக் கட்சியினர் மக்களிடம் ‘எப்படி இருக்கின்றீர்கள்‘ என கேட்பது மக்களின் நாளாந்த வாழ்வு பற்றி தெரியாமலா எனக் கேட்கத் தோன்றுகின்றது.
இன்றைய ஜனாதிபதி அன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் கதாநாயகனாக ரணில் – மைத்திரி அணியினர் மஹிந்த ராஜபக்ஷ அணியினரது ஊழல் மோசடி குறித்தே பெரிதாகப் பேசினர். ஆனால் நல்லாட்சியில் மஹிந்த அணியினரைக் காப்பாற்றியவர்களும் ரணில் விக்ரமசிங்க அணியினர்தான். இன்றும் அதேபாணியில் மஹிந்த தரப்புக்கெதிராக ரணில்தரப்பு வாய்மூடிமௌனமாக இருப்பதுடன் அவர்களை காப்பாற்றுவதிலும் குறியாக இருக்கின்றனர்.
சஜித் தரப்பும் அநுரா குமாரதிஸாநாயக்க தரப்பும் சீனி ஊழலில் இருந்து பல ஊழல்கள் குறித்து பேசுகின்றனர். ஆனால் அதனை நிரூபிக்க ஏன் இவர்கள் முன்வருவதில்லை என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. ஜேவிபி மஹிந்த அணியினர் குறித்த ஊழல் மோசடிகள் அடங்கிய நூற்றுக் கணக்கான கோப்புக்களை ஊடகவியலாளர் மகாநாட்டில் மக்கள் முன் வைத்தனர். ஆனால் அவை அணைத்தும்‘ பரபரப்புக்கான செய்திகளாகவே‘ போய்விட்டன.
நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்கு முன் ராஜபக்ஷ அணியினர் மீது பெரும் ஊழல்பட்டியலை முன் வைத்தே தேர்தல் பரப்புரைகளை hணில் – மைத்திரி அணியினர் மேற்கொண்டனர். ஆனால் தேர்தல் முடிவுடன் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மீதான ஊழல் பட்டியல் கிடப்பில் போடப்பட்டு நல்லாட்சியும் ‘ஊழல் சகதியில்‘ புரண்டது. அதுமாத்திரமல்ல மஹிந்த – கோத்தாபய அணியினரைப் பாதுகாப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.
- மக்கள் தோற்கடிக்கப்பட்டனர்
இதேபோல் தற்போதும் எதிரணியினர் மஷpந்த ராஜபக்ஷ அணியினர் மீது ஊழல் குற்றச் சாட்டுக்களை அடுக்கிக் கொண்டு போகின்றனர். தென்னிலங்கை மக்களும் ஓரணியில் திரண்டு நின்று ஊழல்வாதிகளுக்கு எதிராhகப் போராடிப் பார்த்தனர். ‘சிஷ்டம் சேஞ்‘ வேண்டுமென வீதியில் இறங்கி வெற்றிகளையும் பெற்றனர். இறுதியில் மக்கள் தோற்கடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கும் நீதிமன்ற வாசல் நோக்கியும் அலைந்து திரிகின்றனர். மக்கள் களைத்துப்போன நிலையிலும் இருட்டுக் குகைக்குள் வெளிச்சத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் எதிர்க் கட்சியினர் இன்றும் களைத்துப் போகாது ஊழல் மோசடி குறித்து உரக்கப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் ‘பேச்சுப் பரப்புரைகள்‘ அடுத்த தேர்தல்வரை உயிர் வாழும்இ தொடரும் என்பதுமட்டும்; நிச்சயமாகும்.
அப்படியானால்” ஊழல்‘ ‘மோசடி‘ என்பது ஆட்சியில் அமர்வோரின் அரசியல் சித்தாந்தமாகவும் எதிரணியினரின் அடுத்த தேர்தலுக்கான பரப்புரைக்கான மூலதனமாகவுமே உள்ளது. ஊழல் மோசடி அற்ற அரசையும் ஆட்சியளர்களையும் மக்கள் தரிசிப்பது என்பது பகல் கனவாகவே போய்விடுகின்றது.
மொத்தத்தில் ஊழல்வாதிகளும் அதற்கெதிராகப் பேசுகின்றவர்களும் ஓரணியில் நிற்கின்றார்களா என்றே கேட்கத் தோன்றுகின்றது.
- ஏனெனில் ஊழல்பற்றி பேசப்படுகின்றது. ஆனால் அது தொடர்ந்தம் பேசுபொருளாகவே உள்ளது ஏன்?
- ஊழல் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதில்லை அது ஏன்?
- ஊழலுக்கெதிராகப் பேசுகின்றவர்களால் ஏன் ஊழல்களை நீதியின் வெளிச்சத்துக்குக் கொண்டவர முடியாதுள்ளது?
- ஆப்படியானால் இது ஊழல்வாதிகளும் அதற்கு எதிராகப் பேசும் அரசியல்வாதிகளும் நடத்தும் கூட்டு அரசியலா? என்று கேட்கத் தோன்றுகின்றது. ஏனெனில் ஆட்சியாளர்கள் மாறினாலும் ஊழலும் மோசடிகளும் ‘சாகா வரம்‘ பெற்று நீடித்து நிலைத்து தொடர்கின்றனவே.
- இந்தக் கேள்விகளுக்கான பதில்களை மக்களே தேடியாக வேண்டும். இதற்கான பதிலை தேடப் போன மக்கள் இன்று ‘பயங்கரவாதிகளாக‘ ‘ஜனநாயக விரோத சக்திகளாக‘ முத்திரை குத்தப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டிய ஜீவன்களாக பிரகடனப்படுத்தும் அளவுக்கு ‘ஆட்சியாளர்களின் ஜனநாயகம்‘ புதுப் பிரசவம் எடுத்துள்ளது.
- ‘ஆட்சியாளர்களின் இந்த ஜனநாயக சித்தாந்தம்‘ மக்களால் தேர்தல் மூலம் ‘களை‘ எடுக்கப்படும்வரை ஊழல் மோசடிகள் ஒரு தொடர் கதைதான். ‘நல்லாட்சி‘ என்பதும் பகல் கனவுதான்.
Email : vathevaraj@gmail.com