(மன்னார் நிருபர்)
(10-11-2022)
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளுக்கும், இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனுக்கும் இடையில் யாழ்.துணைத் தூதுவராலயத்தில் இன்று வியாழக்கிழமை(10) மாலை விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (8) நிறைவு பெற்ற ‘வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான 100 நாள் செயல்முனைவு’ தொடர்பாக தெளிவுபடுத்தியது டன் நூறு நாள் செயல் முனைவின் கொள்கைப் பிரகடனம் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரனுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.
அத்துடன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் தேவைகள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது டன் இந்திய துணைத் தூதருடன் இன்றைய சந்திப்பு ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதி நிதிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லவகுகராசா மற்றும் ஏனைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.