தமிழ் சினிமாவில் நடிப்பு திலகமாக நடிப்பு பல்கலைக்கழகமாக விளங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் சினிமா பல்கலைக்கழகமாக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். சிவாஜியின் வாரிசு என்று சொன்னால் கூட அதில் எந்த ஒரு தவறும் இருக்காது. அந்த அளவுக்கு இருவரும் சினிமாவை தன் உயிருக்கும் மேலாக மதிப்பவர்கள். 5 வயதில் ஆரம்பித்த தன் திரைப்பயணத்தை 60 வருடங்கள் கடந்த நிலையிலும் ஒரு விக்ரமாக ஒரு இந்தியனாக காட்டி பிரமிப்பில் வியக்க வைக்கிறார் கமல். அவர் முதன் முதலில் ஹீரோவாக நடித்த படம் ‘பட்டாம்பூச்சி’ திரைப்படம்.
1975 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தை ஏ.எஸ்.பிரகாஷம் இயக்கியிருந்தார். படத்தில் கமலுக்கு ஜோடியாக ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் கமல் மிகவும் கோழையாக நடித்திருப்பார். படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டியது. படத்தின் கதைப்படி ஜெயசித்ராவை நான்கு பேர் கற்பழிக்கும் படியான காட்சி இருக்கும். ஆனால் கமல் கோழை என்பதால் அவர்களிடம் இருந்து ஜெயசித்ராவை காப்பாற்ற முடியாத ஒரு கோழையாக நிற்கும் சாதாரண மனுஷனாக நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி ஒரு பிரஸ் மீட்டும் ஏற்பாடு செய்திருந்தார்களாம்.
அந்த சந்திப்பில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் கலந்து கொண்டு கமலிடம் ‘சிவாஜி, எம்ஜிஆர் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஒரு பெண்ணை கற்பழிப்பதை வேடிக்கை பார்த்து நிற்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் மட்டும் ஏன் இந்த படத்தில் ஜெயசித்ராவை காப்பாற்ற வில்லை’ என்ற கேள்வியை கேட்டாராம். உடனே கமல் அந்த படத்தின் இயக்குனரிடம் மைக்கை கொடுத்து பேச சொல்லியிருக்கிறார். பிரகாஷும் படத்தின் கதையே அப்படித்தான். கோழையாக நடிக்கும் ஒரு ஹீரோ தன் காதலிக்கும் பெண்ணை கூட காப்பாற்ற முடியாதவனாக இருக்கிறான். இது தான் கதை என்று விளக்கமளித்திருக்கிறார். இந்த சம்பவத்தை அப்படியே நினைவில் வைத்திருந்த கமல் மேஜர் சுந்தராஜனின் படமான ‘அந்த ஒரு நிமிடம்’ படத்தில் ஒரு காட்சியில் உடற்பயிற்சி வைத்திருக்கும் பயில்வான் தன் நிலையத்திற்கு வரும் பெண்களிடம் தப்பாக நடக்கிறார். இதை எதிர்த்து கமல் பயில்வானிடம் சண்டை போடுவது மாதிரியான காட்சி. ஆனால் பத்திரிக்கை சந்திப்பில் பயில்வான் தன்னிடம் கேட்டதை மனதில் வைத்து மேஜரிடம் இந்த காட்சி வேண்டாம் என கூறிவிட்டாராம்.
அதன் பின் மதிய உணவு வேளையில் பயில்வானை அழைத்து கமல் ‘அன்றைக்கு சந்திப்பில் நீங்கள் கேட்ட கேள்வி நியாபகம் இருக்கிறதா? இன்றைக்கு என்ன நிலைமையில் இருக்கிறீர்கள் என தெரிகிறதா?’ என கேட்டாராம். ஒரு ஹீரோ நினைத்தால் என்னவேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பது மாதிரியான தோணியில் பேசியதாக பயில்வான் கூறினார். அதோடு இல்லாமல் அவ்வைசண்முகி படத்திலும் பயில்வானுக்கு நிறைய வசனங்கள் இருந்திருக்கிறது. இதையும் கமலே குறைக்க சொன்னதாக கே.எஸ்.ரவிக்குமார் பயில்வானிடம் கூறியிருக்கிறார். இப்படி பல வாய்ப்புகளை தட்டி பறித்திருக்கிறார் கமல் என்று பயில்வான் கூறினார்.