சிவா பரமேஸ்வரன்
இலங்கையில் புதிய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 ஆசனங்கள் கிடைக்க அடிப்படைக் காரணம் அந்தக் கூட்டணியிலுள்ள சிறுபான்மை கட்சிகளும் அம்மக்களுமே.
ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்குப் பக்கபலமாக இந்தச் சிறுபான்மைக் கட்சிகளே இருந்தன.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஐ.தே.கவிலிருந்து சஜித் பிரேமதாஸ வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை (தொலைபேசி) உருவாக்கினார். அந்தக் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி (ஏணி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(மரம்), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(மயில்) போன்ற சிறுபான்மைக் கட்சிகள் இணைந்தன.
இந்தத் தேர்தலில் மூவின மக்கள் வாழும் திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமே சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட தொலைபேசி கூடுதல் ஆசனங்களைப் பெற்றது. ஏனைய மாவட்டங்களில் தோல்வியைத் தழுவியிருந்தாலும் சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட மாவட்டங்களில் தான் படுதோல்வியிலிருந்து தப்பியது.
சிறுபான்மை மக்கள் அல்லது இந்த மூன்று கட்சிகளின் ஆதரவு இல்லையென்றால் தொலைபேசிக்கு ஏழு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருக்காது.
அப்படியிருந்தும் தேசியப் பட்டியலில் அக்கட்சிகளுக்குக் கிடைக்க வேண்டியதும் கிடைக்கவில்லை, கொடுக்க வேண்டியதும் கொடுக்கப்படவில்லை.
த.மு.கூட்டணி | மு. கா | அ.இ.ம.க | நுவா |
ம. திலகராஜ்
|
நிசாம் காரியப்பர்
|
எ.எல்.எம். சபீல்
|
ஆசாத் சாலி |
அ.லோரன்ஸ் | அஜ்மட் மௌலானா | ஹுசைன் பைலா
|
|
கே.டி.குருசாமி | எம்.நயிமுல்லாஹ் | ஏ.ஆர். மன்சூர் |
தேர்தலுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் பங்காளிக் கட்சிகள் சார்பில் இவர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். தேர்தலுக்கு பின்னர் தெரிவில் சிறுபான்மைக் கட்சிகள் புறக்கணிக்கப்பட்டன. அக்கட்சிகளின் கருத்துக்களைப் பெறாமல் ஏழு பெயர்களும் கட்சியால் அறிவிக்கப்பட்டன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்ணாண்டோ, எரான் விக்ரமரட்ண், மாயா திஸநாயக்க, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோருடன் தயானி கமகே எனும் பெண்மணிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த ஒரு சில நாட்களுக்குப் பின்பு இந்தப் பட்டியல் வெளியான போது கோபமடைந்த பங்காளிக் கட்சிகள் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தின. இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை. உரிய பங்கு தரப்படாவிட்டால் நாடாளுமன்றத்தில் தனிக் குழுவாக இயங்குவோம் என்று பங்காளிக் கட்சி வீரவசனமும் பேசின.
இறுதியில் ஐ.ம.சக்தி தலைவருடன் பங்காளிக் கட்சிகள் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தினாலும் தாங்கள் விட்டுக் கொடுத்ததாகக் கூறி சுய ஆறுதல் தேடினர். இது பங்காளிக் கட்சிகளின் விட்டுக் கொடுப்பா அல்லது இயலாமையா? எனும் கேள்வியை தற்போது எழுப்பியுள்ளது.
வீரவசனம் பேசிய பங்காளிக் கட்சிகளால் தற்போது அரசாங்க பக்கமும் தாவ முடியாது. தாவினாலும் அவர்களைத் தாங்கிப் பிடிக்க மாட்டோம் என்று அரசு முன்னரே அறிவித்துவிட்டது. மஹிந்த தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதால் இவர்கள் ஆதரவும் தேவையில்லை.
இந்த மூன்று கட்சிகளின் நிலை `திரிசங்கு சொர்க்க நிலை`யாக உள்ளதால் நல்லெண்ண அடிப்படையில் விட்டுக் கொடுத்ததாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்தவர்கள் `இலவு காத்த கிளி`யாகி விட்டனர்.
குறிப்பாக மு.கா. செயலர் நிசாம் காரியப்பருக்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தலில் தோல்வியடைந்த சிலருக்கு தேசியப் பட்டியல் வழியாக நாடாளுமன்றம் செல்லலாம் என்றிருந்த கனவும் தகர்ந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட மரம் சார்பாக ஏறாவூரைச் சேர்ந்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பெயரிடப்பட்ட வேட்பாளர்களில் ஒருவர். அவ்வேளை நாடாளுமன்ற உறுப்பினரான இருந்த அலி சாகிர் மௌலானாவும் ஏறாவூர் சேர்ந்தவர். ஒரே பிரதேசத்தைச் சேர்ந்த இரு பலமான வேட்பாளர்கள் இருப்பதைக் காரணம் காட்டி அலி சாகிர் மௌலானா தேர்தலில் போட்டியிட மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இறுதியில் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றால் தொலைபேசி மூலம் கிடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம் அளித்த உத்தரவாதத்தை அடுத்து பஸ், ரயில் வண்டியில் இடம் பிடிக்கத் துண்டு போடுவது போல் தனது சார்பாக தனது மகன் அஜ்மட் சாகிர் மௌலானவின் பெயரை தேசியப் பட்டியில் பெயரிட வைத்தார். தேர்தலுக்கு பிறகு துண்டும் கிடைக்கவில்லை இடமும் கிடைக்கவில்லை. இம்மாவட்டத்தில் இதுபோன்று `துண்டு போட்டு இடம் பிடிக்கும் முயற்சியில்` மயில் கட்சியும் தோல்வி கண்டது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி:
மனோ-திகா-ராதா கூட்டணியில் கடந்த தேர்தலில் நுவரேலியா மாவட்டத்திலிருந்து தெரிவான எம். திலகராஜ் இம்முறை தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்தார். நேரடித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாத நிலையில், அதிருப்தியடைந்த அவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் உறுதி மொழியையடுத்து தேசியப் பட்டியல் வேட்பு மனுவில் இறுதி நேரத்தில் ஒப்பமிட்டார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. தங்களுக்குத் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்திருந்தாலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாத திலகராஜுக்கு அது வழங்கப்பட்டிருக்க மாட்டாது என அவரதுக் கட்சித் தலைவர் பி. திகாம்பரம் கூறியிருப்பது அக்கட்சியில் மறைந்திருந்த உட்பூசலை அம்பலப்படுத்தியுள்ளது.
“தேசியப் பட்டியல் என்பது எமது உரிமை, அது எனக்குத் தான் கிடைக்க வேண்டுமென்பது அல்ல, மலையக மக்கள் முன்னணியின் செயலர் ஏ.லோரன்ஸ் அல்லது இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த விஜயகுமாருக்கு கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சியே“ என்கிறார் தலகராஜ்
`தேசியப் பட்டியல்’ ஆசனத்துக்காக “நாங்கள் உருவாக்கிய கட்சியை“ அழிக்க முடியாது என்பதால் விட்டுக் கொடுத்தோம் என்கிறார் மனோ கணேசன். மரமும், மயிலும் இந்த விடயத்தில் மௌனமாக இருந்தாலும் தேசியப் பட்டியலில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக மு.காவின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நசீர் அகமட் குற்றஞ்சாட்டுகிறார்.
2015 தேர்தலில் ஐ.தே.க பங்காளியாக இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தேசியப் பட்டியலில் அவ்வேளை ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மரம் மற்றும் மயில் முறையே இரண்டு, ஒன்று என ஆசனங்களைப் பெற்றன. அவ்வகையில் ஏணியைவிட இம்முறை மயிலுக்கும் மரத்துக்குமே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. வழமையாக தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற்றுப் பழக்கப்பட்ட இக்கட்சிகள் தமது சமூகத்துக்குப் பதில் கூற வேண்டிய நிலையிலுள்ளன. அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தனிவழிச் சென்று போட்டியிட வேண்டும் எனும் அழுத்தம் முஸ்லிம்களிடமிருந்து வருவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும்.
தேசியப் பட்டியல் விவகாரத்தில் சஜித்தை முற்றாகக் குறை கூற முடியாது. சிறுபான்மைக் கட்சிகள் விடயத்தில் தனக்கொரு கடப்பாடும் பொறுப்பும் உள்ளதையும் அவர் மறுக்கவும் முடியாது. அதேவேளை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வலுவான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டுமானால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஏழு பேரின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.
அவர்கள் அனைவரும் சஜித்துக்கு பக்கபலமாக இருப்பார்கள். அதேவேளைத் தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டவர்களில் ஓரிருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெற்றிருக்கவும் முடியாது.
பிரதான கட்சிகளுடன் தேர்தல் கூட்டு வைத்து சிறுபான்மை கட்சிகளுக்கு இம்முறை தேசியப் பட்டியல் விவகாரம் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது.
தொடரும் பிக்குகளின் மோதல்:
இதனிடையே பௌத்த கடும்போக்கு கட்சி அபே ஜன பல பக்ஷயவின் தேசியப் பட்டியல் நியமனம் நீயா…? நானா… ?இழுபறியில் சட்டச் சிக்கலாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் அதுரலிய ரத்திண தேரோவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கட்சியின் செயலர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் எடுத்தார்.
ஆனால் கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரான கலகொட அத்தே ஞானசார தேரர் தேசியப் பட்டியல் ஆசனம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். இந்நிலையில் இருவரையும் தவிர்த்து விமலதாஸ தேரர் தனது பெயரையே பரிந்துரை செய்துவிட்டுத் தலைமறைவானார். இதனால் ஆத்திரமடைந்த ஞானசார தேரர் அணியினர் விமலதாஸ தேரரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு சமன் பெரேரா என்பவரைச் செயலராக நியமித்தனர். அவர் ஞானசாரரின் பெயரைப் பரிந்துரை செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சமன் பெரேரா தனது பெயரை தேசியப் பட்டியலுக்கு பரிந்துரைத்துள்ளார். ஒரே கட்சியில் இரண்டு செயலர்கள் தமது பெயர்களைப் பரிந்துரை செய்துள்ள நிலையில் தேர்தல் ஆணைய சட்டச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இதேவேளை ஜே.வி.பியின் தேசியப் பட்டியல் ஆசனம் முதலிடத்திலிருந்த பிம்ல் ரத்நாயக்கவைத் தாண்டி ஆறாவது இடத்திலிருந்த சமூகச் செயற்பாட்டாளர் கலாநிதி ஹிரிணி அமரசூரிய என்ற பெண்மணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேசியப் பட்டியலுக்கான இறுதிப் பெயர்களை முன்வைப்பதற்கான காலக்கெடு இன்று (14.8.20) நண்பகலுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஐ.தே.க பட்டியலில் ஏற்கனவே முதலிடத்திலுள்ள முன்னாள் உறுப்பினர் ஜோன் அமரதுங்கவுக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.