சிவா பரமேஸ்வரன்-லண்டன்
விற்காத சரக்கிற்கே விளம்பரம் அதிகம் என்று ஒரு செலவடை உண்டு.
பட்டுப்புடவை வாங்கினால் யானை இலவசம், பலூன் வாங்கினால் கொண்டை ஊசி இலவசம், மூன்று காலி பாக்கெட்டுகளைத் திருப்பிக் கொடுத்தால் நான்காவது இலவசம், விளம்பரப்படுத்தப்படும் பொருளைப் பயன்படுத்தாத சினிமாக்காரர்களைக் கொண்டு அந்தப் பொருளுக்கு விளம்பரம் இப்படி அன்றாடம் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, ஏன் இப்போது சமூக ஊடங்களான யூடியூப் தொடக்கம் அனைத்திலும் விளம்பரம்….விளம்பரம்….விளம்பரம்.
ஒரு பொருளுக்கு விளம்பரம் தேவையா, அப்படியென்றால் எங்கு எப்படியான மக்களைக் கவர்ந்திழுக்க வேண்டும், அதற்கான உத்திகள் எப்படியிருக்க வேண்டும், யாரை இலக்கு வைத்து அந்த விளம்பரம் செய்யப்படுகிறது, அதற்காகச் செலவிடப்படும் பெருந்தொகையான பணத்தை விற்பனை மூலம் மீண்டும் ஈட்ட முடியுமா? இப்படி ஓராயிரம் கேள்விகள் கேட்கப்படும் ஒரு பொருளிற்கான விளம்பரத்தைச் செய்வதற்கு முன்னால். அதே நேரம் விளம்பரம் மக்களிடம் சரியாக சென்றடையவில்லை, எதிர்பார்த்த பலனைப் பெற்றுத்தரவில்லை, போட்ட காசு வரவில்லை என்றால், அந்த விளம்பரத்திற்குப் பொறுப்பான நபர் பதவி இழப்பது நிச்சயம்.
ஆனால், இப்படியான பொதுவான நிலைகள் ஏதும் இலங்கைக்குப் பொருந்தாது. பொறுப்புக்கூறல் என்பதற்கும் இலங்கைக்கு ஒவ்வாத ஒன்று என்ற விமர்சனம் சர்வதேசளவில் உள்ளது. இதில் இந்த பொறுப்புக்கூறல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இது அனைத்து துறைகளுக்கும், அனைத்து மக்களுக்கும் பொருந்தும் ஒன்று.
உதாரணமாக, அரச நிறுவனம் ஒன்றிற்கு விளம்பரம் செய்யப்படுகிறது என்று வைப்போம். எடுத்துக்காட்டாக இலங்கை போக்குவரத்து சேவை (ரயில் மற்றும் பேருந்து) அல்லது சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்த பன்னாட்டளவில் விளம்பரம் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டு அது செய்யப்படுகிறதென்றால் அரசு ஒரு விளம்பர நிறுவனத்தை அணுகி உத்திகளை வகுத்து பல வகையான விளம்பரங்களைத் தயாரித்து அதை பல ஊடகங்களில் பயன்படுத்துவார்கள். அதற்கான ஒப்பந்தத் தொகை அந்த விளம்பர நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுவிடும். ஆனால் அதன் மூலம் வர்த்தகம் பெருகியதா என்பதற்கு அந்த நிறுவனம் பொறுப்பாகாது, அரசும் முயன்றோம் முடியவில்லை என்று கூறி கைகழுவி விடும். அதாவது எவ்வகையிலும் யாருக்கும் பொறுப்புக்கூறல் இல்லை.
இதேவேளை, ஒரு தனியார் நிறுவனம் இப்படியான ஒரு விளம்பர பிரச்சாரத்தை முன்னெடுத்து அது தோல்வியில் முடிந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி சில தலைகள் உருளும். அரச துறைகளில் அது நிகழாது. அதன் காரணமாகவே அரசின் பணம் விரயமாகிறது. இது இலங்கை மட்டுமல்ல, இந்தியா உட்பட பல நாடுகளில் நிலவுகிறது.
ஆனால் இதில் மிகவும் முக்கியமாக ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். பெரும்பாலும் நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை அல்லது சேவைக்கே மிகப்பெரிய அளவில் பணம் செலவிடப்படும். இப்படியான சூழலில் இப்போது எழுந்துள்ள கேள்வி இலங்கை தேயிலை அல்லது சிலோன் டீ உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில் அதை ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஊக்குவிக்கும் வகையில் அரசு 1.5 மில்லியன் டாலர்களைச் செலவிடும் என்று அரசு கூறியுள்ளது.
இலங்கைக்கு பன்னாட்டளவில் அங்கீகாரத்தையும் பெருமையையும் பெற்று தந்தது அதன் தேயிலை. இந்திய வம்சாவளி தமிழர்கள் தமது முதுகு முறிய, ரத்தத்தை நீராக்கி, உழைப்பை உரமாக்கி வளர்த்தெடுக்கும் தேயிலை நாட்டிற்கு பெருமை தேடித்தந்தாலும், அவர்கள் இன்னும் நவகாலனித்துவ அடிமைகளாகவே உள்ளனர். உள்நாடும் வெளிநாடும் அவர்களை எவ்விதமான சிந்தனையோ கரிசனையோ இல்லாமல் கைவிட்டது. இலங்கையின் தேயிலைத் தோட்டங்கள் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. அவர்கள் வாழும் லயங்கள் எனப்படும் குதிரை லாயங்கள் ஒன்று மட்டுமே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அவ்வகையில் விமர்சனங்கள், விதி மீறல்கள், மனித உரிமை மதிக்கப்படாத நிலையிலும், அதற்கு பன்னாட்டளவில் ஒரு மதிப்புள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய அரசு, இப்போது அதற்கான சந்தையை ஊக்குவிக்க 551,137,210 ரூபாவை செலவிடப் போவதாக அறிவித்துள்ளது. இது யாருடைய பணம்? இந்த முன்னெடுப்பிற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா? விளம்பர முன்னெடுப்பு தோல்வியடைந்தால் அதற்கு யார் பொறுப்பு? மௌனமே பதிலாக இருக்கும்.
இப்போது `சிலான் டீ` என்ற வர்த்தக பெயரின் கீழ், இலங்கை தேயிலையை அமெரிக்க-ஐரோப்பிய சந்தைகளில் பரப்புவதற்கு அப்பாற்பட்டு அந்தப் பெயரில் உடனடியாக பருகக் கூடிய மென்பானங்கள் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக அரசு கூறுகிறது.
இயற்கை விளை பொருளான தேயிலையை ஊக்குவிப்பதில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் மென்பான விற்பனையில் அரசு ஈடுபட வேண்டுமா? அதுவும் தனது பிரஜைகளுக்கு இரண்டு வேளை உணவைக்கூட முழுமையாக அளிக்க முடியாத அரசு அகலக்கால் வைப்பது முறையானதா? மௌனமே பதிலாக இருக்கும். அடுத்த ஆண்டு (2023) அமெரிக்க உட்பட இதர மேற்குல நாடுகளில் இந்த முன்னெடுப்பு செய்யப்படும் என்று தேயிலை ஊக்குவிப்பு வாரியத்தின் பணிப்பாளர் பவித்ரா பீரிஸ் கூறியுள்ளார்.
இலங்கை தனது தேயிலை உற்பத்தியில் 95% ஏற்றுமதி செய்கிறது என்று கூறும் அவர் மேலும் 20 நாடுகளில் தமது விளம்பர முன்னெடுப்புகளைச் செய்யவுள்ளதாகக் கூறுகிறார். எனினும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மீதே அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. நானறிந்த வகையில் `சிலோன் டீ` அந்த இரண்டு பிரதேசங்களிலும் ஏற்கெனவே பிரபலமாக உள்ளது. அதிலும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள், பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இலங்கை தேயிலை நன்கு அறியப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலையில் 50% அளவிற்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதியாகிறது. மேலும் 17% ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்கு செல்கிறது என்று கூறும் பீரிஸ் இதர ஐரோப்பிய நாடுகளில் தமது தேயிலைக்கான கேட்பை அதிகரிக்கச் செய்யவே 1.5 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படுகிறது.
இலங்கையைப் போலவே மனித உரிமைகளை துச்சமாக மதிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளிற்கு சுமார் 67% தேயிலை உற்பத்தியை செய்யும் அரசு அதையே மேலும் 90% அளவிக்கு ஏற்றுமதி செய்ய முன்வரலாமே என்ற கேள்விக்கு மௌனமே பதிலாக இருக்கும்.
மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எந்த பொருளும் மனித உரிமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என்பது இலங்கை அரசு அறிந்த ஒரு விஷயமாகவே இருக்கும். அப்படியிருக்கும் போது எதன் அடிப்படையில் மேற்குலக நாடுகளை இலக்கு வைத்து பல்லாயிரம் கோடி ரூபாவை இலங்கை அரசு இந்த முன்னெடுப்பைச் செய்கிறது?
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் ஜி எஸ் பி + விஷயத்தில் அரசு ஏற்கெனவே கையைச் சுட்டுக்கொண்டது. அதற்கான பதிலையே இன்னும் பொறுப்புக்கூறல் மூலம் அளிக்கவில்லை. இச்சூழலில் தமது தேயிலையை என்னதான் விளம்பரம் செய்து ஊக்குவித்தாலும், ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள மேற்குல நாடுகள் எதன் அடிப்படையில் இலங்கை தேயிலையை வாங்க முன்வரும் என்பது சற்று ஐயமாகவே உள்ளது.
உள்நாட்டில் இரத்தத்தைச் சிந்தி உழைக்கும் மக்களை சற்றேனும் கண்டுகொள்ளாத அரசு அவர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் பற்றிய உண்மைகளை ஏற்கெனவே அறிந்துள்ள அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அதைப் புறந்தள்ளி எப்படி சிலோன் டீயை வாங்க முன்வரும் என்பதெல்லாம் அரசுக்கும் புரியாமலும் தெரியாமலும் இல்லை.
ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்தில் அல்லது தவறான வழிகாட்டலில் அரசு 1.5 மில்லியன் டாலர்களைச் செலவிட முன்வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சிங்க இலச்சினையைக் கொண்ட `சிலோன் டீ` இலங்கையில் பறிக்கப்படும் தேயிலைக்கு மட்டுமே அளிக்கப்படும், அப்படிச் செய்யப்படும் போது அது பன்னாட்டளவில் மேலும் வரவேற்பை பெறும் என்று அரசு கூறுகிறது. எதன் அடிப்படையில் அந்த நம்பிக்கை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஜப்பான் மற்றும் சவுதி அரேபியாவிற்கான ஏற்றுமதியையும் மேலும் அதிகரிக்க அரசு எண்ணியுள்ளது. கோவிட்-19 சமயத்தில் அந்த நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை இஸ்லாமிய மரபுகளின்படி புதைப்பதற்கு பதிலாக எரித்தே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நின்று முஸ்லிம் மக்களின் விரோதத்திற்கு ஆளாகி பின்னர் அதிலிருந்து பின்வாங்கிய அரசு எப்படி சவுதி போன்ற நாடுகளிடமிருந்து வர்த்தக ரீதியான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும். அதே போன்று சீனாவுடன் கொஞ்சி குலவுவதை எந்தளவிற்கு ஜப்பான் சாதகமாக ஏற்றுக்கொள்ளும் என்பதிலும் கேள்விகள் உள்ளன.
மூன்று கால் சிங்க இலச்சினையை பதித்து- குளிரூட்டப்பட்டு உடனடியாக குடிக்கும் தேயிலை மென்பானம் போன்றவற்றைத் தயாரித்து அதை பன்னாட்டளவில் சந்தைப்படுத்த அரசு விழைகிறது.
சின்னம் மட்டுமே வெற்றியைத் தேடித் தராது என்பதை இலங்கை ஆட்சியாளர்களுக்கு தேர்தல் உணர்த்தியிருக்க வேண்டும். அதை தொடர்ச்சியாக எந்த ஆட்சியாளர்களும் உணர்ந்ததாக தெரியவில்லை.
பல பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தேயிலை உற்பத்தித்துறையில் ஈடுபட்டுள்ளோரிடம் இந்த விஷயம் குறித்துப் பேசிய போது அனைவரும் கருத்தும் அநேகமாக ஒன்றாகவே இருந்தது. அதாவது வெளிநாட்டிற்கு மேலும் ஏற்றுமதிகளை அதிகரித்து அதன் மூலம் வர்த்தகத்தை பெருக்கி பல மில்லியன் அளவிலான டாலர்களை நாட்டிற்குக் கொண்டுவந்து அதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என்று அரசு என்னுகிறது. அது பிழையானது-காணல் நீர் போன்றது. நாடு இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியில் 1.5 மில்லியன் டாலர்களைச் செலவிடுவது சரியான வழிமுறை கிடையாது; அது எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாது என்றே கருத்து தெரிவித்தனர். ஆனால் இதை அரசிற்கு அவர்கள் எடுத்துக்கூறியும் அதை ரனில்-ராஜபக்ச அரசு கேட்பதாக இல்லை.
இந்த 1.5 மில்லியன் டாலர்களை தோட்ட தொழிலாளிகள் மீது முதலீடு செய்தால் உற்பத்தி அதிகரிக்கும். அது தானாகவே இலாபத்திற்கான கதவுகளை திறக்கும். ஆனால் மூடிய கண்களுடன் செயல்படும் அரசு பணத்தை விரயமாக்குவதிலேயே குறியாக உள்ளது என்ற குற்றச்சாட்டை புறந்தள்ள முடியவில்லை.