எமது யாழ் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர் திரையரங்கை வலிந்து கைப்பற்றி அதன் தமது தலைமையகமாகப் பயன்படுத்திவரும் ஈ.பீ.டி.பி கட்சி, மின் கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டிருந்த இணைப்பு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 நாட்களாக இருளில் மூழ்கியிருந்த ஸ்ரீதர் திரையரங்கத்தில் வியாழக்கிழமை (22) முதல் விளக்குகள் மீண்டும் எரிகின்றன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கிற்கான மின் இணைப்பு இந்தாண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அன்று துண்டிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு முதல் இலங்கை மின்சார சபைக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை வட்டியுடன் செலுத்த தவறியதால் அங்கு மின் இணைப்பு நிறுத்தப்பட்டது.
அந்த வளாகத்திற்கான மின் கட்டணம் 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது.
அவ்வகையில் செலுத்தப்படவேண்டிய தொகைக்கான மின் இணைப்பின் கணக்கிலக்கமான 1698170408 இன் மீதி 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் 85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சதம் காணப்பட்டதாகவும் 2014ஆம் ஆண்டிற்கு பின்பு தற்போது 2022 ஆம் ஆண்டுவரையில் மாத சிட்டைக்கான கொடுப்பனவு மட்டுமே செலுத்தப்பட்டபோதும் பழைய நிலுவைப் பணம் செலுத்தாத காரணத்தினாலேயே மின் துண்டிப்புத் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவித்தது.
தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் கட்டணத் தொகையான 85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சதத்திற்கும் 8 ஆண்டுக்கால வட்டிப் பணத்துடன் ஒரு கோடி ரூபாவினை தாண்டியதாகக் கணக்கிடப்பட்டது.
எனினும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இயங்கிய காலத்தில் அமைச்சராக செயல்பட்ட பணிகள் கருதி மின்சாரக் கட்டணத்தை மட்டும் செலுத்தவும் வட்டிப் பணத்தை இரத்துச் செய்யவும் அமைச்சு மட்டத்தில் பேசப்பட்டு செலுத்த வேண்டிய தொகையில் முதல் கட்டமாக 25 லட்சம் உடனடியாகச் செலுத்தப்பட்டதன் அடிப்படையில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியிலுள்ள ஸ்ரீதர் சினிமா தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் மஹேந்திரராஜவிற்கு சொந்தமானது.
உள்நாட்டுப் போர் 1990களின் தொடக்கப் பகுதியில் உச்சகட்டத்தை எட்டியிருந்த நிலையில்1991 ஆம் ஆண்டு ஸ்ரீதர் சினிமாவை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவனம் ஒன்று அதை தமது கிடங்காகப் பயன்படுத்தி வந்தது. அந்த தனியார் நிறுவனம் அங்கிருந்து வெளியேறிய பிறகு தனிப்பட்ட பாதுகாப்பு நபர்களை தான் நிறுத்தியிருந்ததாகவும், அவர்களை துப்பாகி முனையில் மிரட்டி வெளியேற்றி 1996 ஆம் ஆண்டு தமது பூர்வீகச் சொத்தான அந்த இடத்தை ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வலிந்து ஆக்கிரமித்ததாக அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதை காலி செய்யுமாறு 25 கடிதங்கள் மற்றும்1000 தொலைபேசி அழைப்புகளுக்கு மேலாகச் செய்தும் அமைச்சர் அதை மீண்டும் தம்மிடம் கையளிக்கவில்லை என்று மஹேந்திரரவிராஜ் ஆதங்கப்படுகிறார்.
அந்த இடத்தில் யாரும் இல்லை என்பதால் அதை கட்சி அலுவலகமாக தான் பயன்படுத்துவதாகவும், வலிந்த ஆக்கிரமிப்பு ஏதும் இடம்பெறவில்லை, அதை உரிமையாளரிடம் மீண்டும் கையளிப்பதில் தங்களுக்குத் தயக்கம் ஏதுமில்லை இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேற்கோள் காட்டி ஈ.பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.