நடராசா லோகதயாளன்
தமிழர்கள் இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதை கண்டு சீனா அநாவசியமாக அஞ்ச வேண்டியதில்லை என்று தமிழர் தரப்பு ஒன்று சீனாவிற்கு தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்கள் இந்தியாவின் கலாச்சாரத்தை ஒத்தவர்கள் என்பதனால் தாங்கள் இந்தியாவை நாடி நிற்பதால் அது தொடர்பில் சீனா அஞ்ச வேண்டிய தேவை கிடையாது என சீனத் துணைத் தூதுவரிடம் யாழ்ப்பாணம் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு 28ஆம் திகதி மாலை வந்த சீனாவின் துணைத் தூதுவரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுபேர் ஓர் விடுதியில் சந்தித்தனர். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதேநேரம் போரின்போது பாதிக்கப்பட்ட தரப்புடன் அன்றி பாதிப்பை ஏற்படுத்திய தரப்புடனேயே சீனா நின்றமை வருத்தமளிக்கின்றது என்றும் சீனக்குழுவை சந்தித்தவர்கள் கூறியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின்போது சீனா மட்டுமல்ல இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் அரசிற்கு உதவியமையும் எமக்குத் தெரியும் ஆனால் அவர்கள் தற்போதேனும் மாற்றிக்கொண்டாலும் சீனா இன்றுவரை அதனை மாற்றவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ தயார் இல்லை என்பதுதான் தமிழர்களின் கவலை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவிற்கும் இலங்கைக்குமான உறவு என்பது அரசிற்கு அரசு என்பதாகவே இருக்கும் என்பதே சீனத்தரப்பு தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது என தெரிவித்துள்ளனர். அதன்போது இலங்கை வாழ் மக்களிற்கு தம்மாலான உதவிகளை அரசினூடாக தாங்கள் செய்து வருவதாகவும் சீனாவின் துணைத் தூதர் சுட்டிக்காட்டியதாக அறிய முடிகிறது.
எனினும், தற்போது இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் பேச்சுவார்த்தை ஏற்பாடுகள் வேகமாக இடம்பெறுகின்ற சூழலில் அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்றாவது ஓர் அறிக்கையை சீனாவால் வெளியிட முடியுமா எனக் கேட்டபோதும் சீன அதிகாரிகள் மறுத்து விட்டனர் என அந்த கலந்துரையாடலில் பங்குபெற்ற வல்வெட்டித்துறையை சேர்ந்த மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை வடக்கிலே இயங்கும் பல ஊடகங்கள் பக்கச் சார்பான அல்லது சில தவறான புரிதலுடன் செய்திகளை வெளியிடுகின்றனர் என்ற கவலையை சீன அதிகாரி வெளியிட்டபோது தெல்லிப்பளையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் அது தவறானது என்றும் மக்கள் சார்ந்த விடயங்களை ஊடகங்கள் தமக்குரிய நெறிமுறைகளின்படி வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். எனினும் வெளியாகும் செய்திகள் தவறாகவோ அல்லது உண்மைக்குப் புறம்பாகவோ இருப்பதாகக் கருதினால் அல்லது அறியப்பட்டால் அதனை உடன் தூதரகம் சுட்டிக்காட்டும் சமயம் வெளியான செய்திக்கு வழங்கிய அதே முக்கியத்துவம் வழங்கப்பட்டு சீனத் தூதரகம் அனுப்பும் செய்தியும் உரிய கவனம் அளிக்கப்பட்டு வெளியிடப்படும். ஆனால் இன்றுவரை தூதரகம் அவ்வாறான அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்று வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு தூதரகம் மறுப்பு அறிக்கை அனுப்பியும் ஊடகம் அதனை வெளியிடாத சந்தர்ப்பத்திலேயே தூதரகம் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்க முடியும் அதுவரை இதனைக் கருத்தாக கொள்ளமுடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
வடக்கிற்கு இரு நாள் பயணமாக வருகை தந்த சீனக் குழுவினர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டிருந்தனர். முதலில் மன்னார் பகுதிக்குப் பயணித்த அவர்கள் அங்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் 300 குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியை வழங்கி வைத்தனர். நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு சிலருக்கு மட்டுமே உதவிகளை வழங்கியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது என்று தமிழர் தரப்பு சிவில் சமூகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் சீனக் குழுவுடன் மன்னாரில் மதிய உணவுடன் கூடிய ஓர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு மன்னார் மாதோட்டப் பகுதியில் ராஜமகா விகாரையில் குடிநீர்த் தாங்கி அமைக்க அத்திவாரம் இடும் நிகழ்வு விகாராதிபதியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போதும் 150 குடும்பங்களிற்கு உதவிப்பொதி வழங்கப்பட்டது. அதில் அதிகமாக பெரும்பான்மை இன மக்களே கலந்துகொண்டனர்.
சீனக் குழுவினரின் உதவியளிக்கும் நிகழ்ச்சி திட்டமிட்ட வகையில் விளம்பரப்படுத்தப்பட்டது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
மன்னார் நிகழ்வுகளையடுத்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த சீனக் குழுவினர் யாழ்ப்பாணம் கோட்டைக்குப் பயணித்து அதைப் பார்வையிட்டனர். இதனையடுத்து இரவு உணவுடன் யாழ் விடுதியில் ஓர் சந்திப்பும் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பிலேயே முன்னர் கூறிய கருத்துக்களும் பரிமாறப்பட்டன. 29ஆம் திகதியும் சீன தூதரக அதிகாரிகள் குடாநாட்டிலே பல நிகழ்வுகளில் பங்குகொண்டிருந்தனர்.
இலங்கையில் போரின் பின்னர் பல நாடுகள் தமது ஆளுமை மற்றும் ஆதிக்கத்தைச் செலுத்த முயல்வதைக் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக வடக்கு-கிழக்கில் ஆதிக்கத்திற்காக இந்தியாவும் சீனாவும் போட்டிப் போட்டு நன்கொடைகளை இறைக்க முயல்கின்றனர். இரு நாடுகளுமே குறிப்பாக மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் தமது பிடியை இறுக்க முயன்றாலும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் இந்தியாவின் ஆதிக்கம் பலமாகவுள்ளதோடு தற்போதைக்கு அதனை பலவீனப்படுத்த சீனாவால் முடியவில்லை. ஆனாலும் அந்த பிடியைத் தளர்த்த அல்லது தகர்க்க சீனா கையாலும் உத்திக்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியுமா என்கின்ற கேள்வியும் தற்போது எழுகிறது. சீனாவின் முன்னெடுப்பைத் தடுக்கும் வகையிலோ அல்லது அதற்கு ஈடு கொடுக்கவோ இந்தியா வடக்கில் மேலும் அதிக உத்திகளையும் முயற்சியினையும் கையாலும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் நடவடிக்கையே இந்த விடயத்தில் வெற்றியை தீர்மானிக்கும்.
இதேநேரம் மன்னார் மாவட்டத்தின் நிலைமை வேறாகவுள்ளது. அங்கே சீனாவின் பிடி அல்லது தந்திரம் மேலோங்கவும் வாய்ப்பு காணப்படுகின்றது இதனை இந்தியாவும் உணர்ந்திருக்கலாம் இதனால் இராஜதந்திர நெருக்கடிகள் அதிகரிக்கலாம் என்றே கருதப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதிக்குச் சென்ற சீன துணைத் தூதுவர் அதையும் சுற்றியுள்ள பகுதிகளையும் படமாக்கி தமது டிவிட்டரில் பதிவேற்றியுள்ள இரு படங்களில் யாழிலே இந்திய நிதியில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தை குறிவைத்துள்ளமையும் புலனாகின்றது.
சீனா வடக்கே காத்திரமாகக் காலூன்ற காய்களை நகர்த்தினாலும், தாங்கள் கலாச்சாரத்தையோ மதத்தையோ அன்றி நட்பையே வளர்க்க விரும்புவதாக யாழ். மாவட்டச் செயலகத்தில் உலருணவுப் பொதி வழங்கும்போது சீன உதவித் தூதுவர் உரையாற்றியதும் கவனிக்கத்தக்கது.
அதுமட்டுமின்றி வடக்கு கிழக்குப் பகுதிகளிற்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் விஜயம் செய்வதைவிட சீனத் தூதரக அதிகாரிகள் கூடுதலாக தொடர்ந்து பயணிக்கின்றனர் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். சீனவிற்கு அப்பாற்பட்டு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் அண்மைய காலத்தில் வடக்கிற்கான விஜயத்தை அதிகரித்துள்ளனர். சீனா மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கடலிற்கும் இறங்கி குறிப்பிட்ட தூரம் பயணித்துள்ளனர் என்பதையும் அவதானிக்க முடிகிறது.
அடிக்கடி வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்வது, பொதுமக்களிற்கு நேரடியாக உதவிகளை வழங்குவது அரச அதிகாரிகள் மற்றும் தொண்டு அமைப்புடன் கலந்துரையாடுவது போன்ற நகர்வுகளை சீனா திட்டமிட்டு முன்னெடுக்கிற அதேவேளை சீனாவின் இப்படியான நகர்வுகளை இந்தியா அவதானித்துள்ளதா, அப்படியென்றால் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது அல்லது எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
மொழி, இன, மத மற்றும் கலாச்சார தொடர்புகளிற்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதையும், இந்தியாவின் பாதுகாப்புடன் தமிழர் தாயக பெருநிலப் பரப்புடன் தொடர்பு கொண்டது என்பதை இந்தியா முழுமையாக உணர்ந்துள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் அதை உணர வேண்டும், அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று பலதரப்பினர் கருதுகின்றனர்.
இலங்கை தொடர்ச்சியாக கேந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறி வருகிறது. அதே வேளை ஆசியப் பிராந்தியத்தில் வல்லரசுகளாகத் திகழும் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான கேந்திர ரீதியான ஆளுமையைப் பரிசோதிக்கும் ஒரு களமாக மாறி வருகிறது. அதில் குறிப்பாகத் தமிழர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.