எமது யாழ் செய்தியாளர்
யாழ் மாநகர சபையில் ஆதரவை இழந்ததையடுத்து மாநகர முதல்வர் பதவி விலகும் நிலைக்கு ஆளாகி அதிலிருந்து விலகியுள்ளார். அவர் சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் முதல் முறை சபையில் தோல்வியடைந்தது. இரண்டாவது முறையும் அதற்கு ஆதரவு கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்ட நிலையில் அவர் பதவி விலக நேரிட்டது.
வட மாகாணத்தில் மிகவும் முக்கிய உள்ளூராட்சி அமைப்பான யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது மாநகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் அறிவித்தலை உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநகர சபை தேர்தலில் அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினராக அவர் மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2020 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிற்கு பிறகு கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர் மாநகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதே சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநகர எல்லைக்குள் வசிக்காத எவரும் உள்ளூராட்சி சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயலாகும் என்று மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் வாழும் ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் ஊடாக வழக்கு தொடர்ந்ததையடுத்து அவர் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. எனினும் அவர் மீதான வழக்கை வழக்குத் தொடுநர் மீளப்பெற்றதை அடுத்து அவர் மீண்டும் சபை அமர்வுகளில் பங்குபெறும் வாய்ப்பு கிட்டியது.
இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்டினால் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 மற்றும் 27 ஆம் திகதிகளில் சமர்ப்பித்து தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஏற்பட்ட மாநகர முதல்வர் வெற்றிடத்திற்கு 2020-12-30 அன்று முதல்வராக வி.மணிவண்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்விற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள் ஆகியோருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவளித்தனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் 2021, 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றி சபையை நடாத்தியபோதும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை 2022-12-21 அன்று முதல் தடவை சபையில் தாக்கல் செய்த நிலையில் ஆதரவாக 11 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். எதிராக 18 வாக்குகள் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் இரண்டாவது தடவை வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பித்தாலும் வரவு செலவுத் திட்டம் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படாத நிலையில் முதல்வர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.