எமது யாழ் செய்தியாளர்
இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், பல கட்சிகள் அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டன.
அவ்வகையில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள 3 கட்சிகளும் இணைந்தே போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதை இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் கனடா உதயனிடம் உறுதிப்படுத்தினார். வேறு யாருடனும் கூட்டு இல்லை என்பதை இதன் மூலம் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மாறிவரும் அரசியல் சூழல்கள் மற்றும் கடந்த தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்கள் என்று பலர் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்கான சாத்தியம் இல்லை என்பதை சிவஞானம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த முடிவின்படி கூட்டமைப்பிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி, புளட், மற்றும் ரெலோ ஆகியவை மட்டுமே தேர்தலில் ஒரே குடையின் கீழ் போட்டியிடும் என்று தமிழரசுக் கட்சியின் அரசியல்க் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்று வந்தால் தமிழ் அரசுக் கட்சி மட்டும் தனித்துப் போட்டியிடுவதா என்ற விடயம் ஆராயப்பட்டபோதே இந்த விடயமும் தீர்மானமாகக் கூறப்பட்டது. அதாவது தமிழ் அரசுக் கட்சி மட்டும் அல்ல தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளுடன் மட்டும் கூட்டுணைந்து போட்டியிடுவதாகவே தீர்மானிக்கப்பட்டது”.
சூம் வழியில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராயாவுடன் அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.சாணக்கியன் மற்றும் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், கொழும்புக் கிளைத் தலைவர் கே.வி.தவராசா, திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர் எஸ்.குகதாசன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகிய ஒன்பதுபேர் பங்குகொண்ட கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்றார் சிவஞானம்.
“இவ்வாறு தீர்மானிக்கப்படவில்லை என்ற ஒரு கருத்து இன்று முன்வைக்கப்பட்டதனால் இக் கருத்தைப் பகிரங்கமாக கூறும் நிலை ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே இக்கருத்தை பொது வெளியில் கூற முன்பு கட்சியின் பதில் செயலாளர் மற்றும் நிர்வாகச் செயலாளர் ஆகியோருடன் இதனை கூறுவதற்கான ஒப்புதலையும் பெற்றேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்”.
`உதிரிக் கட்சிகள்` என்று மக்களால் விமர்சிக்கப்படும் சில கட்சிகள் இணைந்து போட்டியிட தொடர்ச்சியாக முயன்று அதற்கான வேண்டுகோளை விடுத்து வருகின்றன. அவர்கள் தேர்தலில் போட்டியிட முயன்றாலும் அது பெரியளவில் வெற்றியளிக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னர் அங்கம் வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோரும் அனந்தி சசிதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இப்போது தனிக்கட்சியில் உள்ளனர். இவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியில் சி வி விக்னேஸ்வரன் தலைமையில் போட்டியிட்டனர். எனினும் அதில் விக்னேஸ்வரன் மட்டுமே வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.