வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- தமிழ் மக்களுடன் கைகோர்த்துப் பயணிக்க எவரும் இல்லை
- தாயகத்திலும் புலத்திலும் பிரிந்து நின்று அரசியல் செய்கின்றனர்.
- தாமே பாதை வெட்டிப் பயணிக்க வேண்டிய நிலையில் தமிழ் மக்கள்
போர் முடிந்தவுடன் அதாவது விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததுடன் எல்லாம் முடிந்தவிட்டன என்ற தோற்றப்பாட்டை தென்னிலங்கை அரசியல் சக்திகள் உருவாக்கின.
- ‘வெற்றி மமதையில்’ வீழ்ந்தது தென்னிலங்கை
போர் தந்த ‘வெற்றி மமதை‘ தென்னிலங்கை மக்கள் ‘வெற்றிப் போதை‘யில் வழங்கிய அதீத மக்கள் ஆணை என்பன தாம் எதையும் செய்யலாம் தாம் சட்டத்திற்கு மேலானவர்கள் என்ற நிலைப்பாட்டில் ஆளும் வர்க்கம் செயற்படத் தொடங்கியது. குறிப்பாக ராஜபக்ஷ அணியினர் நாட்டையே மக்கள் தமக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்கள் என்ற பாணியில் செயற்பட்டதன் விளைவு நாடும் மக்களும் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.
- கடவுளாலும் காப்பாற்ற முடியாது
தமிழ் மக்களை தென்னிலங்கையிடம் இருந்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென தந்தை செல்வா அன்று குறிப்பிட்டார். ஆனால் இன்று இலங்கையையும் ஒட்டு மொத்த மக்களையும் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலையை தென்னிலங்கை அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டனர். நாடு மீள முடியாத நெருக்கடி நிலைக்குள் வீழ்ந்து கிடக்கும் இவ்வேளையிலும் ஆளும் அரசியல்வாதிகளினதும் அவர்கள் சார்ந்த அணியினரதும் ஊழல்களும் கொள்ளையும் சூறையாடுதலும் சாகா வரம்பெற்று நாட்டையும் மக்களையும் வதைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த ஒரு சூழ்நிலையில் ‘மாற்றம்‘; வேண்டும் தமக்கென ஒரு லீ குவான் யூ தேவைஎன தென்னிலங்கை எதிர்பார்க்க இலங்கையின் ஆளும் வர்க்கம் சளைக்காது ‘ஹிட்லர்களையும் நாஜிகளையுமே‘ பிரசவித்துக் கொண்டிருக்கின்றது.
- ஆட்சி அதிகாரத்துக்கான போட்டிக் களமாக தென்னிலங்கை
அது மாத்திரமல்ல
சிங்களத் தலைமைகள் மீண்டும் பிரிந்து நின்று ஆட்சி அதிகாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.தென்னிலங்கையின் ‘சிஸ்டம் சேன்ஜ்‘ ஊழலுக்கெதிரான போர் என்பதெல்லாம் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது மாத்திரமல்ல நாஜிகளும் ஹிட்லர்களும் கை கோர்த்துக் கொண்டு ஆட்சியைக் கொண்டு நடத்துகின்றனர். மறுபுறம் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கான போட்டிக் களமாக தென்னிலங்கை அரசியல் களம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் களத்தில் ‘சிஸ்டம் சேன்ஜ்‘ ஊழலுக்கெதிரான போர் என முழக்கமிடுபவர்களையும் கலந்து கொள்ளுமாறு பாரம்பரிய அரசியல்வாதிகள் அழைப்புவிடுத்துள்ளனர். மொத்தத்தில் ‘சிஸ்டம் சேன்ஜ்‘ ஊழலுக்கெதிரான போர் என்பதெல்லாம் ஆளும் ரணில் – ராஜபக்ஷ அரசியல் அணியினருக்கு எதிரான அரசியல் சக்திகளின் கைகளில் பிரமாஸ்திரமாக அடைக்கலமாகியுள்ளது.
- ‘ஆரகலயாக்கள்’ வெறுங்கையுடன் வீழ்ந்து கிடக்கின்றனர்.
தென்னிலங்கையின் ‘சிஸ்டம் சேன்ஜ்‘ கருத்தியலுக்குச் சொந்தக்காரர்கள் தமது பிரமாஸ்திரத்தைப் பறி கொடுத்த நிலையில் வெறுங்கையுடன் வீழ்த்தப்பட்டுக் கிடக்கின்றனர்.
இதன்விளைவு பாராளுமன்றத்தில் நடக்கும் சில நடவடிக்கைகள்இ ஆளும் வர்க்கம் தாம் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நம்பும் சட்டத்தின் ஆட்சிக்கு தொடர்ந்தும் வழிவகுப்பதாக அமைந்துள்ளது.
பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைக் கையாள்வதில் எவருக்கும் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. அது தமிழர் விவகாரத்தடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் அல்லது இன்று தென்னிலங்கை பேசுகின்ற ‘சிஸ்டம் சேன்ஜ்சாக‘ இருக்கலாம் அணைத்து விடயங்களுமே ஏறெடுத்துப் பார்க்கத்தக்க விடயங்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத விடயங்களாக உள்ளன.
- நாட்டு மக்களை தண்டிக்கும் அரசியல் கலாசாரம்
– பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கான தீர்வு மார்க்கம் குறித்த ஒளிக் கீற்றைக் காண முடியாதிருக்கின்றது.
– மொத்தத்தில் நாட்டையும் மக்களையும் படுகுழிக்குள் தள்ளியவர்கள் தொடர்ந்தும் எஜமானர்களாக ஆட்சியில் இருந்து கொண்டு பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களை தண்டிக்கும் அரசியல் கலாசாரம் தலைதூக்கியுள்ளது.
– இதுபற்றி பேசினால் அது பயங்கரவாதமாக முத்திரை குத்தப்படும் அரசியல் பயங்கரவாதமாக தலைதூக்கியுள்ளது.
– உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற இத்தகைய பிரச்சனைகளை அங்கீகரித்துஇ ‘நம்மிடையே அமைதியாக பதுங்கியிருக்கும் தீமைகளை கண்டனம் செய்வது போதாது…அதிகமான கண்டனங்கள் நாம் பிரச்சனையைத் தீர்த்துவிட்டோம் என்ற மாயையைக் கொடுக்கலாம்‘ என்று போப் தனது நத்தார் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
– அத்தகைய ஒரு நிலையே இலங்கையில் இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கு எதிரான தீர்க்கமான முடிவுகளை எடுக்க மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. நாடு தேர்தலை சந்திக்கும்போதே மக்கள் உறுதியான முடிவினை நோக்கி நகரக் கூடியதாக இருக்கும்.
- தென்னிலங்கையில் மாற்று அரசியல் தலைமை?
துரதிஸ்டவசமாக தென்னிலங்கையில் மாற்று அரசியல் தலைமைகளை கண்ணுக்கெட்டிய தூரம்வரை காண முடியவில்லை. ‘புதிய மொந்தையில் பழைய கள்‘ என்ற போர்வையிலேயே தென்னிலங்கையில் அரசியல் சக்திகள் நடமாடிக் கொண்டிருக்கின்றன. இவை அணைத்தும் ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே‘. நாடு உருப்பட வேண்டுமாயின் ‘பழைய கள்‘ அல்ல புதிய பாணியிலான அரசியல் சக்திகளின் அரசியல் பிரவேசமே தேவை. இதனை தென்னிலங்கை மக்களும் மாற்றத்தை நோக்கி அணி திரண்டுள்ள சக்திகளும் உருவாக்க முன் வரவேண்டும்.
- தென்னிலங்கையில் தேர்தலே பேசுபொருள்.
தென்னிலங்கையில் தற்போது தேர்தல்குறித்தே பேசு பொருளாக இருக்கின்றது. ‘அரகலய புரட்சி‘ தோற்கடிக்கப்பட்டதையடுத்து தேர்தல் கள பலப் பரீட்சைக்கு தென்னிலங்கை தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்த தேர்தல் பலப் பரீட்சையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 75 வது; சுதந்திர தினத்திற்குள் அதாவது 2023 பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இன விவகாரத்துக்கான தீர்வு என்ற தனது அஸ்த்திரத்தை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் மற்றும்; தமிழ்த் தலைமைத்தவங்களின் முன்னிலையில் வீசியுள்ளார்.
நாடு தேர்தலை எதிர் நோக்கியுள்ள நிலையில் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலை நோக்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நகர்வானது தமிழ் வாக்குகளை எதிர் பார்த்துக் காத்திருக்கின்ற தென்னிலங்கையின் பெரும்பாலான அரசியல் சக்திகளை தீர்வுக்கு ‘ஆமாம்‘ போட வைத்துள்ளது.
- ரணில் விக்ரமசிங்கவிற்கு பச்சைக் கொடி
வழமையாக தென்னிலங்கை அரசியல் சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்காக பிரிந்து நின்று போராடுபவர்கள் தமிழர் விவகாரத்தில் ஒன்றுபட்டு எதிர் நிலைப்பாட்டில் இருப்பர். ஆனால் தற்போது தென்னிலங்கையின் பெரும்பாலான அரசியல் சக்திகள் தேர்தலை எதிர் நோக்கிய நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் தீர்வு நோக்கிய திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
அதே வேளையில் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு கணிசமான எதிர்ப்பும் உள்ளது. அதுமாத்திரமல்ல பேராசிரியர் திஸ்ஸவிதாரன போன்ற தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமிழ்த் தலைமைகளுடன் தமிழர் விவகாரத் தீர்வுகுறித்து பேசத் தயார் என அறிவித்துள்ளனர்.
- தமிழ்த் தலைமைகள் பிரிந்து நின்று அரசியல் செய்கின்றனர்.
ஆனால் துரதிஷ;டவசமாக தமிழர் விவகாரத்தில் ஒன்றுபட வேண்டிய தமிழ்த் தலைமைகள் பிரிந்து நின்று அரசியல் செய்கின்றனர்.
- போரின்போது பார்வையாளர்களாக இருந்தவர்கள்
2009 ஆம் ஆண்டு போரின்போது பார்வையாளர்களாக இருந்தவர்கள்தான் இன்றைய தமிழ்த் தலைமைத்துவங்கள். 6வது திருத்தச்சட்டத்தை மீறி இவர்களால் ஏதும் செய்ய முடியுமா என்பதற்கு அவர்களே பதில் கூறவேண்டும். நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமானத்தின்போது இவர்கள் மேற் கொண்ட சத்தியப்பிரமானமும் இவர்களுக்கு மறந்திருக்காது. எனவே 6வது திருத்தச்சட்ட கவசத்திற்குள் தமிழ்த் தலைமைகளின் வீரவசனம் எடுபடாது.
எனவே பிரிந்து நின்று நாடாளுமன்ற மாகாண சபைகளுக்கான நாட்காலிகளுக்காக தமிழ்த் தலைமைகள்; நடத்தும் அரசியல் நாடகம் போதும். இதற்குப் பிறகாவது மக்களுக்கான அரசியலை நடத்த முன் வருவதே சிறந்தது..
- தென்னிலங்கை பக்கம் பந்து
இப்பொழுது பந்து ஜனாதிபதி ரணில் விகரமசிங்க – ராஜபக்ஷ அணியினரின் கைகளில் உள்ளது. அதற்கு பச்சைக் கொடி காட்டி நிற்கின்ற தென்னிலங்கை சக்திகளுக்கும் அதில் பங்குள்ளது. இவர்கள் இணைந்து தரப்போகும் தீர்வு என்னவென்று பார்ப்போம். ஏனெனில் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் குறைவு. ஆனால் பரவலான எதிர்பார்ப்பு உள்ளதை மறுப்பதற்கில்லை.
இன விவகாரத் தீர்வு நோக்கிய பயணத்தில் முன்னைய தலைவர்கள் ஏறக்குறைய 75 வருடங்கள் தோல்வியடைந்தாலும் அடுத்த வருடம் பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் சாதிப்பேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். அது ரணில் விக்ரமசிங்கவைப் பொருத்தவிடயம்.
- தமிழ் மக்கள்.
– தமிழ் மக்களைப் பொருத்து புதிய அரசியல் பாதை வெட்டி பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
– தற்போதைய தமிழ்த் தலைமைகளில் ஒரு பகுதியினர் மறைமுக இணக்க அரசியல் நடத்துபவர்களாகவும் மறு பகுதியினர் வெளிப்படையான இணக்க அரசியல் நடத்துபவர்களாகவும் உள்ளனர். இவர்கள் அணைவருமே தென்னிலங்கை அரசியல் சக்திகளின் நண்பர்களாகவும் நேசக்திகளுமாகவுமே உள்ளனர்.
– இவர்களது அரசியல் தமிழ்மக்களுக்கானதல்ல.தமக்கானதும் தென்னிலங்கை அரசியல் சக்திகளின் நலன் கலந்ததுமாகும். தமிழ் மக்களின் வாக்குகளுக்காக தீவிர தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் திரைமறைவு இணக்க அரசியலுக்குச் சொந்தக்காரர்கள். தமிழ்த் தேசியத்திற்கு எதிராகப் பேசிக் கொண்டு தென்னிலங்கை சக்திகளின் மனங்குளிர நடந்தும் பேசியும் வெளிப்படையான இணக்க அரசியலுக்கு உரித்துடையவர்கள். மொத்தத்தில் இருபகுதியினரும் நடத்தும் இணக்க அரசியலால் தமிழ் மக்கள் தென்னிலங்கை அரசியலில் ஏலம் விடப்படுகின்றனர் விலை பேசப்படுகின்றனர் என்று கூறுவதே பொருந்தும்.
இதற்கும் அப்பால் சர்வதேச சமூகங்களின் கைப் பிள்ளையாகவும் தமிழ்த் தலைமைகள் மாறியுள்ளன என்பதும் பரமரகசியமல்ல.
- உரிமைப் பயணத்தை ஒரு அங்குலமேனும் நகர்த்த முடியுமா?
அதுமாத்திரமல்ல வடக்குக் கிழக்கில் தமிழ் கட்சிகள் தாம் கைப்பற்றிக் கொண்ட பிரதேச சபைகள் மாகாண சபைகளில் தமிழ் மக்களின் நலன்களுக்காக அன்றி ‘தமக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும்‘; என்ற தமிழ்ப் பழ மொழிக்கேற்ப நடந்து கொண்டதை தமிழ் மக்கள் மாத்திரமல்ல நாடே அறியும். இந்தத் தமிழ்த் தலைமைகளால் தமிழ் மக்களின் உரிமைப் பயணத்தை; ஒரு அங்குலமேனும் நகர்த்த முடியும் என்பது கேள்விக்குறியே.
- புலம்பெயர் அமைப்புக்கள்
– தாயகத்தில் தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள்தான் இப்படியென்றால் தமிழ்மக்கள் பெரிய அளவில் நம்பிக் கொண்டிருக்கின்ற புலம்பெயர் அமைப்பக்களும் தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தடைக்கற்களாக இருப்பதான செய்திகள் வெளிவருகின்றன. இந்த அமைப்புக்களும் தமக்கான நிகழ்ச்சி நிரல்களை வைத்துக்; கொண்டு செயற்படுவதுடன் தாயகத்தில் உள்ள தமிழ் அமைப்புக்களையும் தமது நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
- தமிழ் மக்களுடன் கைகோர்த்துப் பயணிக்க எவரும் இல்லை
இவை அணைத்துமே தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தமிழ் மக்களுடன் கைகோர்த்துப் பயணிக்க எவரும் இல்லை என்ற நிலையே உள்ளது.
எனவே தமிழ் மக்கள் தாமே பாதை வெட்டிப் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.இந்தப் பயணத்தில் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் புதிய சக்திகள் மேல் எழும்ப வேண்டும். இது தாயகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் உள்ள தேசியத்தை நேசிக்கின்ற சக்திகளிடம் தமிழ் மக்களின் சார்பில் முன் வைக்கின்றோம்.
Email: vathevaraj@gmail.com