(மன்னார் நிருபர்)
(04-01-2023)
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு’ அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
‘ஒன்றிணைவோம் ஒருமித்த குரலில் உரக்கச் சொல்வோம்’ எனும் தொனிப் பொருளில் நாளை வியாழக்கிழமை (5) தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
வடக்கு- கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
நாளைய தினம் வியாழக்கிழமை (05) காலை 9 மணிக்கு திருகோணமலை மக்கேசர் விளையாட்டு அரங்கம் முன்பாகவும்,மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவும் ,அம்பாறை முதல் நாள் திருக்கோயில் வைத்தியசாலை முன்பாகவும் மற்றும் ஏனைய நாட்கள் கல்முனை பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவில் முன்பாகவும் இடம்பெறும், அதே நேரம் வவுனியா நகர் பகுதி, யாழ்ப்பாணம் ஏ-9 நாவட் குழி சந்தி மற்றும் மன்னார் நகர சுற்றுவட்டம் அருகாமையிலும்,கிளிநொச்சி ஏ9 பழைய வைத்தியசாலை முன்பாகவும், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது