(13-01-2023)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.
வட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளான முன்னாள் முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவுகை வண்டி மூலம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கலந்துரையாடப் பட்டுக் கொண்டிருந்த வேளை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டதாக களுத்துறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
947 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றினார்.
1994 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுகளில் களுத்துறை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
2016 ஆம் ஆண்டு வட மாகாண ஆளுநராகவும், 2018 ஆம் ஆண்டு மத்திய மாகாண ஆளுநராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.