(ஆகஸ்ட் 18, நேதாஜி நினைவு நாள் சிந்தனை)
-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.17:
‘சுயராஜியம்’ என்னும் இதழை நடத்திய பத்திரிகையாளர், விரிவுரையாளர், காந்தியையே வீழ்த்திய அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர், மலாயா சிங்கப்பூர் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர்(அதில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் இளம் வயதிலேயே தொண்டு மனப்பான்மையுடன் இணைந்து லெப்டினண்ட் பதவிவரை உயர்ந்தது இங்கே குறிப்பிடத்தக்கது), இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவை உருவாக்கி அதில் ஏராளமான மலாயா இந்தியப் பெண்களைச் சேர்த்து இராணுவத்திலேயே பெண்களுக்கு சம மரியாதை அளித்தவர், ஜவஹர்லால் நேருவின் உற்றத் தோழர், பிரிட்டீஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இடைக்கால இந்திய அரசாங்கத்தை ஆஃப்கானிஸ்தானில் நிறுவி வழிநடத்தியவர், அதில் மலாயா தோட்டத் தொழிற்சங்கத் தலைவர் அ.கணபதிக்கு அமைச்சர் பதவி வழங்கியவர், விவேகானந்தரின் நன்னெறிசார் ஆன்மிகத்தை ஏற்றுக் கொண்டவர், காந்தி அடிகளின் சண்டித்தனத்தை பொறுக்கமாட்டாமல் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி முத்து ராமலிங்கனார் போன்றோருடன் இணைந்து ஃபார்வர்ட் பிளோக் என்னும் அரசியல் கட்சியைத் தோற்றுவித்தவர், உலகையே கட்டி ஆண்ட இங்கிலாந்து சாம்ராஜியத்திற்கே சிம்மக் கனவாகத் தோன்றி மருட்டியவர், இலக்கியத்திற்-காக நோபல் பரிசு வென்ற இரவீந்திர நாத தாகூரால் ‘நேதாஜி’(தளபதி, தலைவர்) என்று பட்டம் சூட்டப்பட்டவர், இலண்டன் ஐசிஎஸ் தேர்வில் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றவர், நிருவாக மேலாண்மை மிக்கவர், ஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லருடன் சமமாகப் பழகியவர், ‘அஞ்சா நெஞ்சன்’ ஜெய் ஹிந்த் செண்பகராமனிடம் நீர்மூழ்கிக் க்ப்பல் தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தவர், ஜப்பான் ஆஸ்திரிய நாடுகளின் தலைவர்களுடன் அரச தந்திர உறவு கொண்டிருந்தவர் என்றெல்லாம் இன்னும் ஏராளமான சிறப்புக்கும் பெருமைக்கும் உரிய சுபாஷ் சந்திர போஸிற்கு, 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களின் பிற்பகுதியில் என்ன நேர்ந்தது என்று இதுவரை இந்த உலகுக்குத் தெரியவில்லை.
இத்தனைக்கும் வலிமைமிக்க உலகத் தலைவர்களுடன் பழகியதுடன் உலக நாடுகளையும் சுற்றி வந்தவர் நேதாஜி; அப்படிப்பட்ட விவேகமிக்கத் தலைவரான அவர், 1945 ஆகஸ்ட் 18-ஆம் நாளில் இராவல்பிண்டிக்கு விமானப் பயணம் மேற்கொண்டார்; அதன் பின்னர் என்ன ஆனார் என்றேத் தெரியவில்லை என்று தகவல் பரப்பப்பட்டது. இராவல்பிண்டி என்ற நகரம் பாகிஸ்தானின் பழைய தலைநகரம்.
ஏறக்குறைய 35 – 40 ஆண்டுகளுக்கு முன் கசியவிடப்பட்ட இத்தகவலின் மையப் புள்ளி – மூலம் எதுவென்று தெரியவில்லை.
அடுத்த சில ஆண்டுகளில், ‘இல்லை, இல்லை, 1945 ஆகஸ்ட் மாதத்தில் நேதாஜி இராவல்பிண்டிக்கு போகவில்லை. மாறாக கராச்சிக்குத்தான் பயணமானார். அவர் பயணம் செய்த அந்த விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்றுதான் எவருக்குமேத் தெரியவில்லை என்று வேறொரு கதை அளக்கப்பட்டது. கராச்சி என்னும் துறைமுகப்பட்டினம் பாகிஸ்தானின் புதிய தலைநகரமாக உருவாக்கப்பட்டது.
பல்லாயிர ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்தம் தொல்நாகரிகத்தின் புவிப் பெட்டகமான சிந்து நாகரிகம் தழைத்த பூமி இன்றைய பாகிஸ்தான்; அது மட்டுமல்ல.., பெருவாரியான இந்துக்கள், இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கிய மரபினர், மங்கோலியர், துருக்கியர், ஆஃப்கானிய மக்கள் எல்லம் பரந்து வாழ்ந்த அந்த நிலத்தை மௌரிய மன்னன் சாம்ராட் அசோக சக்கரவர்த்தி, மாசிடோனிய மன்னன் மகா அலெக்சாண்டர் எல்லாம் ஓரொரு கட்டத்தில் ஆட்சி செய்துள்ளனர். அப்பொழுதெல்லாம் அந்தப் பகுதி இஸ்லாமிய நிலமாக இருந்ததில்லை.
மொகலாயப் படையெடுப்பின்போது, தைமூர், பாபர் போன்றவர்களுக்கு அந்த இடம் ஓய்வு தளமாக இருந்திருக்கிறது. அதன் பின்னர்தான் அந்தப் பகுதியில் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து, பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் அந்தப் பகுதியை அதன் போக்கிலேயே ஆங்கிலேயர்கள் கையாண்டனர்.
1945-இல் நேதாஜி அங்கு சென்றதாக சொல்லப்படும் நேரத்தில் பாகிஸ்தான் என்ற நாடு உருவாகவில்லை. பிரிட்டீஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்களின் ஆளுகையின்கீழ்தான் இருந்தது. நேதாஜி அங்கு சென்றதாக புனைத் தகவலை வெளியிட்டவர்கள் எந்த ஊரில் இருந்து அங்கெல்லாம் அவர் பயணமானார் என்ற விவரத்தை தெளிவாகக் குறிப்பிடுவதில்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு ஒரு நாள் முன்னதாக 1947 ஆகஸ்ட்14-இல் பிரிக்கப்பட்ட பாகிஸ்தானின் தற்போதைய தலைநகரம் இஸ்லாமாபாத். அதனால், நேதாஜியின் பயணம் குறித்த எந்த விவரமும் அந்த நாட்டில் இருக்கப்போவதில்லை என்ற துணிவில்தான் இப்படிப்பட்ட பொய்த் தகவலை ஒரு கூட்டம் அவ்வப்பொழுது கசியவிட்ட வண்ணம் இன்றளவும் உள்ளது.
உண்மையில் பாகிஸ்தான் என்ற நாடு உருவாக, பாகிஸ்தானின் தந்தை என புகழப்படும் முகமஹு அலி ஜின்னா காரணமல்ல; சிறுபான்மை சமயத்தினர் என்ற அடிப்படையில் இஸ்லாமியர்களுக்காக சில சலுகைகளை அவர் வலியுறுத்தினார் என்பதுதான் உண்மை.
காந்தியை சுட்டுக் கொன்ற வினாயக கோட்சே போன்றவர்கள் தீவிரப் பங்காற்றிய இந்து மகா சபைபினர்தான், இந்தியா, ஒரு புனித இந்து நாடாக உருவாக வேண்டும். அதற்கு ஏதுவாக சிறுபான்மை முஸ்லிம்களும் மற்றவர்களும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்ததன் விளைவாகத்தான் பாகிஸ்தான் உருவானது என்பது வரலாற்று உண்மை.
ஆக, பாகிஸ்தானுக்கு பயணப்பட்டார் நேதாஜி என்னும் தகவல் புளித்துப் போகவே, அண்மைக் காலமாக தைவான் நாட்டில் 1945, ஆகஸ்ட் 18-இல் நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் நேதாஜி மறைந்து விட்டார் என்று புதுச்சரடு விடுகின்றனர். அந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 14முதல் 20-ஆம் நாள் வரை தைவானில் எந்த விமான விபத்தும் நிகழவில்லை என்று அந்நாட்டு அரசு தெளிவுபடுத்திய நிலையில், இன்னுமொரு புதுக் கதை உலாவரத் தொடங்கியது.
அதே நாளில் நேதாஜி ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபொழுது, பார்மோசா தீவுக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டார் என்பதுதான் அந்தப் புதுக் கதை.
இப்படி புனைசுருட்டையும் பொய்த் தகவலையும் பரப்புவோர், நேதாஜியுடன் பயணம் செய்தவர்கள், அவரை வழி அனுப்பி வைத்தவர் யார்யார் என ஒருவரையும் அடையாளம் காட்டுவதில்லை.
இதில் இன்னும் சில இடைச்செருகலும் உண்டு. இரஷ்யாவிற்குச் சென்ற நேதாஜி, அங்கு கமுக்க வாழ்க்கை வாழ்ந்து கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் (இந்தத் தரப்பினருக்கு மட்டும் தகவல் தெரிவித்துவிட்டு) இறந்தார் என்றும் அல்ல.. . அல்ல, வட இந்தியாவில் ஒரு துறவியைப் போல வாழ்ந்து மடிந்தார் என்று வேறு விதமாகவும் பரப்பிவிட்ட புனைத்தகவல், வரும் ஆண்டுகளில் இன்னும் வேறுவகையில் வலம் வரலாம்.
உலக இலக்கிய மேடையில் தமிழுக்கு இருக்கையை ஏற்படுத்தித் தந்த பொய்யாமொழியார் திருவள்ளுவப் பெருந்தகையின் தந்தை ஓர் ஆரியன் என்றும் தாயார் ஒரு புலைச்சி என்றும் திருவள்ளுவரை சிறுமைப் படுத்துவதுடன் அவர் தமிழரல்லர் என்றும் இழிபிறவியர்க் கூட்டம் கதைகட்டியதைப் போல, பிறவிப் போராளியாகத் தோன்றி வாழ்ந்த நேதாஜியை சிறுமைப்படுத்தும் விதமாக அவர் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டிருந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த கயமைத்தனம்.
தன் வாழ்வை துச்சமென எண்ணி, உயிரைப் பணயம் வைத்து ஜெர்மனி, ஜப்பான், தென் கிழக்காசிய நாடுகள் என்றெல்லாம் அலைந்து திரிந்து இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்து, இடைக்கால சுதந்திர இந்திய அரசாங்கத்தையும் நிறுவி அதை வழிநடத்திய ஒரு கோமகன், யாருக்கும் தெரியாமல் துறவியாக வாழ்ந்து மறைந்தார் என்பதெல்லாம் கலப்பில்லாத பித்தலாட்டம். தன் அன்பிற்குரிய காதல் மனைவியான ஆஸ்திரியப் பெண் எமிலியையும் ஒரே அன்பு மகள் அனிதா போஸையும் விட்டுப் பிரிந்து தனி வாழ்க்கை வாழ்ந்தார் நேதாஜி என்பவர்கள், ஆளைத் தள்ளிவிட்ட குதிரை எட்டியும் உதைத்ததைப்போல நேதாஜியை வஞ்சம் தீர்த்துவிட்டு அவதூறும் பரப்புவதைப் போன்றது.
மொத்தத்தில், நேதாஜி சதிகாரர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டார் என்பதுதான் வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.
1939-இல் நேதாஜி இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அந்த இயக்கத்தில் ஒருவித பேரெழுச்சி தென்பட்டது. ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன் பகத்சிங் தூக்கில் இடப்பட்டபோது எழுந்த எழுச்சிக்கு இணையாக பார்க்கபட்ட இந்த எழுச்சியைக் கண்டு விவேகி ஜவஹர்லால் நேரு, இராஜேந்திர பிரசாத் போன்றவர்களெல்லாம் ஒதுங்கிக் கொண்டபோது, காந்தி மட்டும் அதை யெல்லாம் புறந்தள்ளிவிட்டு நேதாஜியை எதிர்த்தார்; தோற்றார்.
அத்துடனாவது காந்தி கண்ணியமாக ஒதுங்கி இருந்திருக்கலாம்; ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேதாஜி வெற்றிபெற்றதற்கு எதிராக எந்தக் காரணமுமின்றி உண்ணாவிரதம் இருந்து சண்டித்தனம் புரிந்தார். இதற்குப் பெயர்தான் ‘ஆசை வெட்கம் அறியாது’ என்பது போலும்.
நேதாஜியோ அமைதியாக பதவி துறந்து, காங்கிரசில் இருந்தும் வெளியேறினார். அவருக்கு, தேச விடுதலைதான் இலக்கேத் தவிர, காங்கிரஸ் தலைவர் பதவி அல்ல;
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், காங்கிரஸ் மதவயப்பட்டு விட்டதாகக் கூறி, முன்னமே காங்கிரஸ்மீது அவர் அதிருப்தியில்தான் இருந்து வந்தார்.
இரண்டாம் உலகப் போர் முடிந்துவிட்ட நிலையில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பது என்ற முடிவுக்கு பங்கிங்காம் அரண்மனையும் வந்துவிட்டது. அதேவேளை, நேதாஜியைப் பற்றி 2-ஆம் உலகப் போர் முடிவுக்குப்பின்னர் குறிப்பிடும்படியான எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அவரின் நகர்வும் எண்ணமும் என்னவாக இருந்தன என்பதும் தெரியவில்லை.
ஆனால், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு மட்டும் நேதாஜிமீது தீராத வஞ்சம் தொடர்ந்தது. அவர், இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்ததைவிட, பிரிட்டீஷ் படைகளுக்கு எதிராக ஜப்பானியர்களுடன் கைகோத்ததைதான் அவர்களால் சீரணிக்கவே முடியவில்லை.
அதேவேளை, முன்புபோல இராஜதுரோக குற்றம் சுமத்தி மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்ட பொம்மனைப் போல தூக்கிலிடவும் முடியாது; ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரிடம் செய்ததைப் போல வலிய சண்டைக்கும் செல்லமுடியாது. இந்தப் புள்ளியில்தான் ஒன்றைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
சூழ்ச்சியிலும் பிரித்தாள்வதிலும் கைதேர்ந்த ஆங்கிலேயர்கள், நேதாஜியின் உள்நாட்டு விரோதிகள் மற்றும் காட்டிக் கொடுப்பவர்கள் துணை கொண்டு ஏதோவொரு சதி வேலையை நேதாஜிக்கு எதிராக நிறைவேற்றி இருக்க வேண்டும்.
இந்திய வரலாற்றில் ஏராளமான சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன; அதைப்போல எண்ணிலங்கா இருட்டடிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று அவ்வளவுதான்.
திருவருள்மிகு அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளை நாம் ஆன்மிக எல்லையிலேயே வரையறுத்து விடுகிறோம். உண்மையில் அவர் தமிழ் மேதை, பெரும்பாவலர்(ஆசு கவி, சித்திர கவி, வித்தார கவி என்றெல்லாம் ஐவகை கவித் திறமை வாய்ந்தவர்), சொற்பொழிவாளர், நூலாசிரியர், நூல் வெளியீட்டாளர், இலக்கியவாதி, சமூக சீர்திருத்தவாதி, கல்வெட்டு ஆய்வாளர், சமூக அறிஞர், புரட்சிகர எண்ணமும் போக்கும் கொண்டவர், சித்த மருத்துவ வித்தகர், இரசவாத சாகசம் அறிந்தவர், வாடிய பயிருக்கும் களையெனப்படும் புல்லுக்கும்கூட மனமிறங்கிய ஜீவகாருண்ய சிந்தனையாளர், ஆன்மிகத்தில் அறத்தையும் நன்னெறியையும் நிலைநாட்ட விழைந்தவர், எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மிகத்தில் பரிகார பூசனையை எதிர்த்தவர் வள்ளலார் சுவாமிகள்.
சோதி வடிவான இறைவனை தூய்மையான மனத்தாலும் நலிந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாலும் எட்ட முடியும் என்றார். அப்படியானால், தர்ப்ப் புல்லை ஏந்திக் கொண்டு பாமரனிடம் வசூல் வேட்டை நடத்தவும் பிழைக்கவும் ஆகாதே என்று மருண்டக் கூட்டத்தின் சதிக்கு ஆளானார் வள்ளலார்.
பசித்த வயிறும் வாடிய பயிரும் இன்றளவும் தொடர்கின்றபோதில், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பூட்டிய அறைக்குள் காற்றோடு கலந்தார் வள்ளலார் என்பது, நந்தன் ஜோதியுடன் ஜோதியாக ஐக்கியமானார் என்று கட்டிவிட்ட செப்படு வித்தையைப் போன்றதுதான்.
பச்சையாக சொல்ல வேண்டுமெனில், சிவ நேசனான நந்தன் வஞ்சகமாக தீயில் தள்ளப்பட்டு கொல்லப்பட்டான்.
பத்தாயிரம் சமணர்களை ஒருசேரக் கழுவேற்றிக் கொன்றதைக் கருதினால், நந்தனின் கொலை சாதாரணம். ஆனால், வள்ளலாருக்கு அவ்வாறு நேர்ந்ததை அவர்தம் சீடர்களால் ஏற்க முடியாததைப் போல நேதாஜிக்கு நேர்ந்ததையும் அவருடைய பற்றாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்படி திரைமறைவில் அரங்கேற்றப்பட்ட அரசியல், ஆன்மிக சதிகளைவிட, இன்னொரு வகையான வஞ்சகமும் உண்டு. இது, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்துவரும் திராவிட – ஆரிய பண்பாட்டுப் போரின் பக்க விளைவாகும்.
உண்மையில், இது ஆன்மிகத்தின் பெயரால் நடைபெறும் இனச் சண்டை; இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் மதத்தின் பெயராலும் இன்னும் பிற வகையாலும் தமிழர்க்கு எதிராக ஆரியம் மேற்க்கொள்ளும் தொடர் சூழ்ச்சி.
இரண்டாவது உலகப் போர் தொடங்க இருந்த சமயத்தில், போர்க்கால அமைச்சரவை ஆலோசகராக நியமிக்கப்பட்ட சர். ஏ.டி. பன்னீர்செல்வம், சத்தியப் பிரமாணம் ஏற்கவும், மூன்றாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ளவும் குறிப்பாக திராவிட நாட்டு கோரிக்கையை பிரிட்டீஷ் மகாராணி முன்பு எடுத்துரைக்கவும் விழைந்து மூன்றாவது முறையாக இலண்டனுக்கு அதுவும் இராணுவ விமானத்தில் பயணம் செய்தபோது ஏமன் வளைகுடா பகுதியில் 1940 மார்ச் முதல் நாள் மர்மமான முறையில் பன்னீர் செல்வம் மறைந்தார்.
அரசியல்-சமூக மேதையான சர் ஏ.டி. பன்னீர் செல்வம், ஆங்கிலேயர்களே வியந்த நிருவாக நிபுணர். அப்படிப்பட்ட பன்னீரின் மரணத்திலும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சு இன்றளவும் தொடர்கிறது.
எல்லாவற்றுக்கும் காலம் என்னும் நல்லாசிரியரிடம் இருந்து உரிய பதில், உரிய நேரத்தில் கிடைக்கும்.
நக்கீரன் – Nakkeeran 013-244 36 24