கதிரோட்டம் 03-02-2023
உலகெங்கும் நீதிக்கும் நியாயத்திற்குமாக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் இனம் மொழி நாடு என்ற பேதங்கள் எது நோக்கப்படாமல் பாதகர்களால் கொன்றொழிக்கப்பட்டு வருகின்றார்கள். இவ்வாறாக கொன்று குதறப்படும் ஊடகவியலாளர்களை குறி வைப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காகவே தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள்.
இவ்வாறான கொலையாளிகளுக்கு பின்புலமாக பலவேறு சக்திகளும் அதிகார பலம் கொண்டவர்களும் உள்ளார்கள் என்பது வெளிச்சமாக நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் தெரிந்திருந்தாலும். நியாயங்கள் தோற்கடிக்கப்படுவதும் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல. அரபு நாடுகள் தென்னாசிய நாடுகளாக பாகிஸ்தான் பங்காளதேஸ் மற்றும் ரஸ்யா சீனா போன்ற நாடுகளிலும் ஊடகவியலாளர் தொடர்ச்சியாக குறி வைக்கப்படுவதும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட அவர்களோடு சேர்த்து ஜனநாயக விரோதிகளால் கொல்லப்படுவதும் தொடர்ந்து இடம் பெறும் அநீதிகளாக விளங்குகின்றன. ஆனால் அதிகார வர்க்கத்திற்கும் இந்த கொலைகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளதால் அந்த அதிகார பீடங்களுக்கு கீழ் இயங்கும் நீதித்துறைகள் வெறும் ஊமைகளாகவே நிலை கொள்கின்றன.
இவ்வார எமது உதயன் உட்பக்கங்கள் ஒன்றில் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் வி. தேவராஜ் எழுதிய கட்டுரை பிரசுரமாகியுள்ளது. சாதாரணமாக ஒரு சிறுகதையோ அல்லது கவிதையோ பிரசுரமாகின்ற போது, அதை பத்திரிகை ஆசியர்கள் தங்கள் குறிப்பில் “.. என்னும் கவிதை அல்லது சிறுகதை இவ்வாரப் பக்கங்களை அலங்கரிக்கின்றன என்று குறிப்பிட்டு விடலாம்.
ஆனால் எமது தொடர் எழுத்தாளர் வி. தேவராஜ் எழுதும் கட்டுரைகள் எமது பத்திரிகைப் பக்கங்களுக்கான ‘அலங்காரங்களாக’ நாம் பார்க்கவில்லை. அநியாயங்களை அரங்கேற்றிய பேய்கள் உலாவிய நாட்களின் பயங்கரமான பொழுதுகளை எம் கண்கள் முன்பாக காட்சிப்படுத்துகின்றன.
‘உண்மைகளை’ சாகடிப்பதற்காகவே ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்ப்ட்டார்கள் என்று அன்பர் தேவராஜ் அவர்கள் ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றார். ஆமாம்! உண்மைகளைத் தேடிய வண்ணம் அல்லது உண்மைகளை அறிந்த நிலையில் தங்கள் ஊடகப் பணியை ‘உண்மை’யாக மேற்கொள்ளும் போது அநீதி இழைக்கப்பட்டமைக்கான உண்மைக்காட்சிகளை எழுத்திலோ அன்றி ஒலிவடிவத்திலோ பதிவு செய்கின்ற ஊடகத்துறை தோழர்கள் தெருநாய்களைச் சுட்டுத் தள்ளுவது போன்று குறி வைக்கப்படுகின்றார்கள்.
இலங்கையில் ஊடகத்துறை இன மத மொழி ரீதியாக பிரிந்து கிடக்கின்றது.இந்த பிளவு பிரிவு என்பன இன்று நேற்று உருவாகியதல்ல. சுமார் 100 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பிளவுகளும் முரண்பாடுகளும் கோலோச்சி வருகின்றன. துரதிஸ்டவசமாக இந்த முரண்பாடுகளும் பிளவுகளும் சாகா வரம் பெற்றதாக ஊடகத்துறையையும் ஊடகவியலாளர்களையும் தின்று கொண்டிருக்கின்றன என்று இன்னுமொரு இடத்தில் குறிப்பிடுகின்றார் எங்கள் தேவராஜ்
“இதுபற்றி ஊடகத்துறை சார்ந்தோர் சிந்தித்ததாக இல்லை” என்ற ஆதங்கத்தையும் அவர் தொடர்ச்சியாக பதிவு செய்கின்றார்.
இந்த சிரேஸ்ட பத்திரிகையாளர் தேவராஜ் அவர்கள் தனது பத்திரிகை வாழ்க்கையில் அல்லது அந்த பயணத்தின்போது உண்மையை நேசித்தவர். பணத்தில் புரள வேண்டும் என்பதற்காக பத்திரிகைத்துறையை தேர்ந்தெடுக்கவில்லை.
எப்போது? யாருக்கு? எதற்காக? குரல் கொடுக்கும் வகையில் தனது எழுத்துக்களை வடிக்க வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு தனது பத்திரிகைப் பணியை ஆற்றியவர். ஆனால் தற்போது இவரை தமது நண்பர் என்று குறித்துச் சொல்வதற்கு கூட இலங்கையின் பத்திரிகைத் துறை சார்ந்தவர்கள் தயங்குகின்றார்கள் என்பது அவருக்;கு மட்டுமல்ல, எம்போன்ற நண்பர்களுக்கும் நம்பிக்கைகளோடு செயற்படுகின்றவர்களுக்கும் மனதை உறுத்தும் பக்கங்களாகவே விளங்குகின்றன.
காட்டில் நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன.அதுபோல் ஊடகத்துறையில் நேர்மையானவர்கள் உண்மைக்காக சமூகத்திற்காக ஊடகத்தறையில் சத்திய வேள்விக்குள் வாழத்தலைப்பட்டவர்கள் குருதி வெள்ளத்திற்குள் வேருடன் பிடுங்கிச் சாய்க்கப்படுகின்றனர்.
தமிழ் ஊடகத்துறையில் பலரது உயிர்கள் பறிக்கப்பட ‘எம்மவர்களும்’ காரணமாக இருந்துள்ளார்கள் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றேன்;’ என்;பதையும் நண்பர் தேவராஜ் குறிப்பி;டத் தவறவில்லை.அத்துடன் தமிழ் ஊடகவியலாளர்களை வஞ்சிப்பதில் பழிவாங்குவதில் ‘மிதவாதத் தமிழ்த் தலைமைகளின்’ பங்களிப்பும் அளப்பரியது என்பதையும் இங்கு பதிவ செய்ய விரும்புகின்றேன். என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இவற்றுள் பல விடயங்களில் அவரும் பாதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவராக இருந்தாலும். தனது சொந்தக் கரங்களால் அவற்றை இன்னும் துணிச்சலாக பதிவு செய்கின்றார்.
ஆனால் அநியாயத்திற்கு துணை நின்ற ‘மிதவாதத் தமிழ்த் தலைமைகள், தொடர்ந்து அரசியலையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சுகபோகங்களை அனுபவித்த வண்ணம் இவ்வாறன நேர்மையான ஊடகவியலாளர்களை உதாசீனம் செய்வதும் தேவையானால் “அவரை கவனி” என்று செய்தி அனுப்புவதும் நேற்று மட்டுமல்ல எப்போது இடம்பெறுகின்ற கொடுமைச் சாயங்களில் ஊறவைக்கப்பட்ட அநியாயங்களாகவே தொடர்கின்றன. ஜனநாயக விரோத குழக்கள் நான்கு திசைகளிலும் கோலோச்சுவதால் உண்மைக்கு மாறாக பேசவோ எழுதவோ மறுப்பவர்களால் நிம்மதியாக வாழ முடியாத சோகம் யுகம் எங்கும் தொடர்கின்றது. அவற்றுள் எங்கள் நண்பர்கள் வாழும் இலங்கையிலும் அச்ச ஒலி கேட்கின்றது.