சிவா பரமேஸ்வரன்
இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்புகள் 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையடுத்து விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தங்களை அரசியல் கட்சிகளாகவும் பதிவு செய்து கொண்டன.
அந்த வரிசையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) `பூ`சின்னத்தில் 28.04.1988ல் நடைபெற்ற வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிருந்தது. இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்துக்கான முதலும் கடைசித் தேர்தலும் அதுவேயாகும். இப்போது இரு மாகாணங்களும் தனித்தனியாக உள்ளன.
1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் த.வி.கூவின் உதயசூரியன் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, ஈ.என்.டி.எல்.எப் ஆகியவை இணைந்து போட்டியிட்டன. அதில் த.வி.கூட்டணிக்குக் கிடைத்த 10 ஆசனங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட ஆறு பேர் தெரிவாகினர். இதர நால்வரில் டெலோ-03, த.வி.கூ-01 என உறுப்பினர்கள் தெரிவாகினர்.
இந்தத் தேர்தலில் தான் சுயேச்சைக் குழுக்களாக `கலங்கரை விளக்கு` சின்னத்தில் போட்டியிட்ட ஈரோஸ் 13 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது.
அந்தத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, ஈ.என்.டி.எல்.எப் போன்ற கட்சிகளுக்கு அவ்வேளை வடக்கு-கிழக்கில் நிலை கொண்டிருந்த இந்தியப் படையின் பின்புலம் இருந்ததாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதே போல் ஈரோஸுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவும் இருந்தது.
1989 தேர்தலில் முதல் தடவையாக த.வி.கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குக் கிடைத்த ஆசனங்கள் ஆறு.
அடுத்து வந்த 1994 மற்றும் 2000ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிவழி சென்ற அவர்களால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை.
2001 தேர்தல் தொடக்கம் 2015 வரை நான்கு தேர்தல்களில் த.வி.கூ/த.தே.கூ என்று ஏனையத் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு ஓரிரு ஆசனங்களைப் பெற்று வந்தது.
இறுதியாக 2015 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் த.தே.கூவின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியடைய வன்னியில் சிவசக்தி ஆனந்தன் மற்றும் டாக்டர் சி.சிவமோகன் ஆகியோர் தெரிவாகியிருந்தனர். சிவமோகன் பின்னர் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.
2015 தேர்தலுக்குப் பிறகு த.தே.கூவில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மாற்றுத் தலைமை தேவை எனும் கருத்து வலுவடைந்தது. அதன் வெளிப்பாடாக 2020 தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு தமது கட்சியையும் சின்னத்தையும் விட்டுக் கொடுத்து அக்கட்சியில் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எப். போட்டியிட்டது
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கவில்லை. அதன் பங்காளிக் கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப் மட்டுமே அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2020 தேர்தலில் போட்டியிட விக்னேஸ்வரனுக்கு ஒரு அரசியல் கட்சி தேவைப்பட்டது. எனினும் கைவசம் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற கட்சியின் பெயரிலோ அல்லது அவர்களின் பூ சின்னத்திலோ கூட்டணிக் கட்சிகள் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் பெயரும் பூ சின்னமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக தற்காலிக மாற்றம் பெற்றது. அதாவது தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பெயர் த.ம.தே.கூட்டணியாகவும் பூ சின்னம் மீனாகவும் மாறியது.
இதற்கான புரிந்துணர்வின்படி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைச் சேர்ந்தவர் தலைவராகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்தவர் பொதுச் செயலராகவும் இருப்பார். அந்த அடிப்படையில் மீன் கட்சியின் பொதுச் செயலராக சிவசக்தி ஆனந்தன் நீடிக்கிறார்.
கட்சியும் சின்னமும் மாறினாலும் இறுதியாக 2015 தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வன்னி மாவட்டத்தில் பெற்ற இரு ஆசனங்களில் தக்கவைக்கப்பட்டிருந்த ஒரு ஆசனமும் (சிவசக்தி ஆனந்தன்) ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கு இல்லாமல் போயிற்று. ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைப் பொறுத்தவரை கூட்டணியே தமது பலம் என்று கருதுகிறது. 2015 தேர்தலைப் போலவே இம்முறையும் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் விருப்பு வாக்குப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
வடக்கு கிழக்கில் பிரதான தமிழ்க் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் இம்முறை தனித்தும் கூட்டாகவும் தமது பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் த.வி.கூ ஆகிவை மட்டுமே பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கின்றன.
மூத்த அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான த.வி.கூட்டணிக்கு 2004 தொடக்கம் பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளது. அதே போன்ற நிலை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பி தேர்தலில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி, டெலோ, புளொட் ஆகியக் கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ள நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு அந்த வாய்ப்பு பறிபோனது. 2015 தேர்தலில் வீடு சின்னத்தில் தோல்வி கண்ட அவர் 2020ல் மீன் சின்னத்தில் தோல்வியடைந்தார்.
1987 காலப் பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியிலிருந்து பிரிந்து ஈ.பி.டி.பி கட்சியை ஆரம்பித்த டக்ளஸ் தேவானந்தா ஏதோ ஒரு வகையில் வெற்றிப் பாதையில் பயணிக்கிறார். அவர் 1994 முதல் தொடர்ந்து நாடாளுமன்ற அரசியலில் இருக்கிறார், அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
இன்றைய சூழலில் கட்சியையும் சின்னத்தையும் மாற்றுத் தலைமை என்ற கோட்பாட்டுக்காகத் தாரை வார்த்த ஈ.பி.ஆர்.எல்.எப் இன்று கட்டியிருந்த வேட்டியும் உருவப்பட்ட நிலையில் உள்ளது.