எமது யாழ் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களிற்கு பச்சிளைப்பள்ளியில் நிலம் வழங்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்று தற்போது மீள் குடியேறிய முஸ்லீம் மக்களில் 300 பேரிற்கு இன்றுவரை சொந்த நிலம் இன்மை காரணமாக வதிவிடத்தை அமைக்க முடியவில்லை எனவும் அதற்காக பச்சிளைப்பள்ளியில் உள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவின் ஆளுகையில் உள்ள நிலத்தில் இருந்து 300 குடும்பங்களிற்கு நிலம் வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
இவ்வாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கை வடக்கு மாகாண ஆளுநரினால் பரிசீலிக்கப்பட்டு பச்சிளைப்பள்ளியில் காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவின் கீழ் இனம் காணப்பட்ட 45 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து குடும்பம் ஒன்றிற்கு தலா 2 பரப்புக் காணி வீதம் வழங்க ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.
இதற்கமைய இந்த 300 குடும்பங்களிற்கும் தலா 2 பரப்புக் காணி வீதம் வழங்க நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதனால் இந்த 45 ஏக்கரும் விரைவில் பகிர்ந்தளிக்கும் வகையில் வரைபடம் தயாரிக்கும் பணிகள் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமைப் பணிமனையால் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வாறு பச்சிளைப்பள்ளி காணிகளை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநரே காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவைக் கோருவதாகவும் பச்சிளைப்பள்ளியிலேயே பிறந்து வளர்ந்த 640 குடும்பங்கள் குடியிருக்க நிலம் இன்றி கடந்த 12 ஆண்டுகளாக நிலம் கோருகின்றபோதும் அது தொடர்பில் எவருமே சிந்திக்கவில்லை என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.