சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர்
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு வியாழக்கிழமை (20/08/20) சம்பிரதாய ரீதியில் தொடங்கியது. முதல் நிகழ்வாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவைச் சேர்ந்த மஹிந்த யாப்பா அபேயவர்த்தன சபாநாயகராகப் போட்டியின்றி தெரிவானார். துணை சபாநாயகராக ரஞ்சித் சியம்பலபிட்டிய தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தெரிவை அடுத்து நாடாளுமன்ற மரபுப்படி கட்சித் தலைவர்கள் தமது வாழ்த்துரைகளை வழங்கினர்.
முதலாவதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிங்களத்தில் அவரை வாழ்த்தி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆங்கிலத்தில் வாழ்த்தினார். வழமையாக நாடாளுமன்றத்தில் சிங்களத்தில் உரையாற்றும் சஜித் பிரேமதாஸ இந்த அமர்வில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாற்றும் வழக்கத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஆங்கிலத்தில் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஏனைய சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, த.சித்தார்த்தன், சி.சந்திரகாந்தன் ஆகியோர் தங்கள் கட்சியின் சார்பில் தமிழில் சுருக்கமாகச் சபாநாயகரை வாழ்த்தினர். மற்றுமொரு சிறுபான்மைக் கட்சித் தலைவரான ஏ.எல்.அதாவுல்லாஹ் தமிழில் தொடங்கி சிங்களத்தில் முடித்தார். அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்களான தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் எதிரணியைச் சேர்ந்த அனுரகுமர திஸநாயக்க ஆகியோர் தமது தாய் மொழியான சிங்களத்தில் சபாநாயகரை வாழ்த்தி உரையாற்றினர்.
சி.வி.யின் முதல் உரை ஆங்கிலத்தில்:
நாடாளுமன்ற அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், “மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் ”……என்று ஒரு வரியை மட்டும் தமிழில் கூறி சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு தான் ஆங்கிலத்தில் எழுதி வந்ததை வழமை போல் படித்தார். உரையின் முடிவில் “ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை இருக்கும்-(கல கல பே பல பே)” என்று சிங்களத்தில் சுட்டிக்காட்டி “கௌரவ சபாநாயகர் அவர்களே “(கரு கதா நாயக்க தூம) மிக நன்றி (போம ஸ்துதிய் )
என்று சிங்களத்தில் கூறி முடித்தார்.
இன்றைய அமர்வில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து அவருக்கு தங்கள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்த நிலையில் விக்னேஸ்வரன் மட்டும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து ஆங்கிலத்தில் பேசினார். “சர்வதேச சட்டங்களுக்கு அமைய” இந்த உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது என்று அவர் ஆங்கிலத்தில் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு என்பது சபாநாயார் தெரிவு மற்றும் அவரை வாழ்த்துவது மட்டுமே மரபாக உள்ள நிலையில் அவர் அந்த மரபுக்கு ஒவ்வாத வகையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்து இந்தச் சந்தர்ப்பத்தில் பேசுகிறார் என்பதை ஏனைய உறுப்பினர்களின் முக பாவனையில் காண முடிந்தது.
சபாநாயகரை வாழ்த்தும் ஓரிரு நிமிட உரையக் கூட அவர் தாய் மொழியான தமிழில் பேசாமல் தமிழ்த் தேசியம் மற்றும் சுயநிர்ணயம் குறித்து ஆங்கிலத்தில் பேசியது சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. வாழ்த்துச் செய்தியைக் கூட தமிழில் அவரால் துண்டு சீட்டு இல்லாமல் பேச இயலாதா? எனும் கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ் மக்களின் உரிமைகள் குறித்துப் பேசுவதற்குக் கட்சித் தலைவர் எனும் வகையில் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஏராளமான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ள நிலையில் முதலாவது அமர்வில் அவரது பேச்சு சபை நடைமுறைகளுக்கு ஒவ்வாததாகவே பார்க்கப்படுகின்றது. மேலும் ஒரு மாகாண முதலமைச்சராக இருந்தவருக்குச் சபை நடவடிக்கைகள் குறித்துத் தெரியாதா? எனும் வினாக்களுக்கும் அவர் ஆளாகியுள்ளார்.
சபாநாயகர் பாரபட்சமின்றி நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டு அனைத்துத் தரப்புக்கும் தமது கருத்துக்களை முன்வைக்க உரிய நேரம் ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு கோரவில்லை. இறுதியாகச் சிங்களத்தில் ஒரு வசனமும் பேசி உரையை முடித்தார். அதுவும் பொருத்தமற்றதாகவே பார்க்கப்படுகிறது.
அவர் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமர்வைப் பயன்படுத்தியுள்ளார். சி.வி.யைப் போலவே தமிழ்த் தேசியத்தை முன் வைத்து வாக்குக் கேட்டுத் தெரிவான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் முற்றாக ஆங்கிலத்திலேயே முழுமையாக உரையாற்றினார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆங்கிலப் புலமைப் பெற்றவர்கள் குறைவு. அவையில் தமிழில் உரையாற்றினாலும் அது சிங்களத்தில் மொழி பெயர்க்கப்படும். ஆங்கிலத்தில் பேசினால் அதுவும் மொழி பெயர்க்கப்படும்.
முதலாவது அமர்வில் தமது ஆங்கிலப் புலமையைக் காட்டியதைவிட தங்கள் தாய் மொழியான தமிழின் அடையாளத்தைக் காட்டியிருந்தால் அது சிறப்பாகஇருந்திருக்கும்.
சபையில் பிள்ளையான் :
சபாநாயகரை வாழ்த்தி உரையாற்ற தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் எழுதி வைத்து வாசிக்காமல் சரளமாகத் தமிழில் உரையாற்றினார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.
சிறையிலிருந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தனக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து தடங்கல்கள் ஏற்படுவதாக அவர் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். ஒவ்வொரு முறையும் சபை அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சபாநாயகரை வரவேற்றுப் பேசிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் போது சிறுபான்மைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சபாநாயகர் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதே கருத்தை புளொட் தலைவர் சித்தார்தனும் வலியுறுத்தினார்.
இதேவேளை இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவர் பதவி நான்காவது தடவையாகத் தொடர்ந்து ஏகமனதாக தமிழர் ஒருவருக்கு இம்முறையும் கிடைத்துள்ளது. யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவான அங்கஜன் இராமநாதன் இதற்குத் தெரிவாகியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் இல்லாத வேளையில் சபை அமர்வுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு இவருக்கு உண்டு. இதற்கு முன்னர் இராமலிங்கம் சந்திரசேகரன்-ஜே.வி.பி (2006-2010), முருகேசு சந்திரகுமார்-ஈ.பி.டி.பி (2010-2015) , செல்வம் அடைக்கலநாதன் த.தே.கூ (2015-2020) ஆகியோரும் இந்தப் பதவியில் இருந்துள்ளனர்.
`19` ஒழிக்கப்படும் கோத்தா சூளுரை
சபாநாயகர் தேர்வுக்கு பிறகு மாலையில் நாடாளுமன்றம் கூடியது. இதில்
நாடாளுமன்ற மரபுப்படி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது கொள்கைப் பிரகடன உரையை ஆற்றினார். அதில் அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தம் நீக்கம், புதிய அரசியல் யாப்பை உருவாக்குதல், தேர்தல் முறையில் மாற்றம், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி ஆகியவை முக்கியமாக அதில் இடம்பெற்றன.
யானை-மனித மோதலை தவிர்ப்பது பற்றி தனது உரையில் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரப் பகிர்வு, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணுவது போன்ற விடயங்கள் எதையும் தனது உரையில் குறிப்பிடவில்லை. என்றாலும் அவரது உரையில் ஒரே நாடு ஒரே சட்டம், ஒற்றையாட்சி என்று கூறப்பட்டுள்ளதைச் சிறுபான்மையினருக்கான செய்தியாக இருக்கலாம். பின்னர்
அவரது உரை தொடர்பான விவாதம் நடைபெற்றது.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையின் கீழ் இருந்த ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் போது தேசிய உடையிலேயே கலந்து கொள்வார்கள்.
ஆனால் அதற்கு மாறாக கோத்தாபய ராஜபக்ச கோட், சூட், டை என்று மேற்கத்தியப் பாணியில் உடையணிந்து கலந்து கொண்டார். இது தன்னை ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்ளாமல் நாட்டின் தலைமை நிர்வாகியாக காட்டிக் கொள்ளும் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது. மேலும் ராஜபக்ச குடும்பத்தினர் அணியும் குரக்கன் நிற சால்வையும் அவர் அணிவதில்லை.
அரசியலும் சரி, ஆடைகளிலும் சரி அவரது பாணி தனியானது` என்பதையே இது காட்டுகிறது.