டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா 2 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த சாதனையை இதுவரை பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியாக பெரும்பாலான ஆட்டங்களில் ரன்களை குவித்து வரும் புஜாரா இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். கடந்த சில போட்டிகளில் அவர் அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய அவர், அந்த அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் ரன்களை இன்று கடந்தார். முன்னதாக இதே சாதனையை சச்சின், விவிஎஸ் லக்ஸ்மன், ராகுல் டிராவிட் ஆகியோர் மட்டுமே ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் வரிசையில் தற்போது புஜாராவும் இணைந்துள்ளார். இதையொட்டி வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமூக வலைளதங்களில் பதிவிட்டுள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் உஸ்மான் கவாஜா 422 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் இளம் வீரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். 121 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்றைய 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.