மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் யு.பி. வாரியர்ஸ் அணி வெற்றி பெற 128 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. முந்தைய போட்டிகளில் இல்லாத அளவுக்கு பேட்டிங்கில் மும்பை அணி இன்று தடுமாறிய நிலையில், 127 ரன்களில் அந்த அணி ஆல் அவுட்டானது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 ஆவது லீக் போட்டி மும்பை டி.ஒய். பாட்டில் மைதானத்தில் மும்பை மற்றும் யு.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற யு.பி. வாரியர்ஸ் அணி மும்பையை முதல் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. இதையடுத்து மும்பையின் தொடக்க பேட்டர்களாக ஹேலி மேத்யூஸ், யஸ்திகா பட் ஆகியோர் களத்தில் இறங்கினர். 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் அதிரடியாக 35 ரன்களை சேர்த்து ஹேலி மேத்யூஸ் ஆட்டமிழந்தார். யஸ்திகா 7 ரன்னிலும், நேட் சீவர் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 25 ரன்களும், இஸி வாங் 32 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. யு.பி. வாரியர்ஸ் அணியில் சோபி எக்லஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகயும் வீழ்த்தினர். வலுவான பேட்டிங் வரிசை கொண்டுள்ள மும்பை அணி கடந்த சில போட்டிகளில் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. இதையத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி யு.பி. வாரியர்ஸ் அணியின் பேட்டர்கள் விளையாடி வருகின்றனர்.