நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்துள்ளது. இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த நிலையில், இரண்டிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் போவ்ஸ் 14 ரன்னும், ஃபின் ஆலன் 51 ரன்களும் எடுத்தனர். வில் யங் 26 ரன்களும், டேரில் மிட்செல் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து விளையாடிய கிளென் ஃபிலிப்ஸ் 39 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 49 ரன்களும் சேர்க்க நியூசிலாந்து அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் சமிகா கருணாரத்னே 4 விக்கெட்டுகளையும், ரஜிதா மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் வீரர்கள் விக்கெட்டை அடுத்தடுத்து பறி கொடுத்தனர். தொடக்க வீரர்கள் பதும் நிசாங்கா 9 ரன்னும், நுவைனிது ஃபெர்னாண்டோ 4 ரன்னும், குசால் மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப் பிடித்த ஏஞ்செலோ மெண்டிஸ் 18 ரன்கள் எடுத்தார். சமிகா கருணாரத்னே 11 ரன்னும், லஹிரு குமாரா 10 ரன்னும் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 76 ரன்கள் மட்டுமே எடுத்து 198 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹென்றி ஷிப்லே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.