— பானு சுதாஹரன்
இடைவெளிகளில் நுழைந்தெழுந்து, இடைமறிப்போரை இழுத்தெறிந்து, சங்கீதக்கதிரையில் சாதுரியமாக சட்டென்று அமர்ந்து விட்டால், தாம் வெற்றியாளர், விவேகவீரர் என்றெண்ணுகின்ற குறுகிய மனப்பாங்குகளின் குவியலினுள் நம்முலகு!
கடந்த பெப்பிரவரி 14 அன்றிரவு, இலங்கையின் ‘வெலிப்பென்ன‘ பகுதியில், மூன்று 16 வயது பாடசாலைப் பையன்கள் சேர்ந்து, நல்ல வார்த்தை கூறவந்த, (ஒரு குழந்தைக்குத் தந்தையான), 34 வயதுடைய பெரியவரை ‘தலைக்கவச‘த்தினால் தாக்கி படுகொலை செய்த சம்பவமானது, ‘பெரியவர்கள் சமூக‘த்தை ஒருவித பதற்றமான சூழலில் பீதியுடன் வாழும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளதோடு, தொடர்ந்தும் ஆங்காங்கே தலைக்கவசங்கள் தலைதூக்க முயல்கின்ற கலாச்சாரமொன்று, நீறு பூத்தாலும் நூர்ந்து போகாத நெருக்கடியுணர்வொன்றுடனேயே வாழ, பெரியவர்களை நிர்ப்பந்தித்துள்ளது!
எப்படி நெருக்காமல் போகும்? சிறுவர்கள் என்றெண்ணி ஒரு நல்ல வார்த்தை சொல்லப்போக முடியாத காலமாகி விட்டது! ஆனால் அந்த சம்பவத்தின் படுகொலை, அறிவுரை செய்ய வந்ததன் விளைவு அல்ல; அதாவது தூண்டப்பட்டதன் விளைவு அல்ல; முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த ‘படுகொலை‘ என இலங்கைப் பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. அதிர்ச்சி தருகின்றது? 16 வயதிலா இது?!
“எங்கள் காலத்தில், பையன்கள் பெரியவர்களைக் கண்டாலே ஓரமாக ஒதுங்கி மரியாதை செய்வர்; லுங்கி மேலே மடிந்திருந்தால், நீளமாக்கி நிமிர்ந்து நிற்பர், முடி சற்றே கலைந்திருந்தால், முன்னால் மெதுவாய் மூடி விடுவர். எப்படியெல்லாம் இருந்த காலம். இப்போ இளையோர்கள் தறிகெட்டு; தமை மறந்து; வழி கெட்டு; வாழ்க்கை தொலைந்து… அப்பப்பா என்ன கலிகாலம் சாமீ…!” என ‘பெரியோர் சமூகம்‘ சலித்துக்கொள்கின்ற முடிவிலி இது.
அவ்வாறெனின், எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; ஆனால் அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே மட்டும் என, ஒட்டுமொத்த பொறுப்புக்களையும் அன்னைமேல் போட்டு, ஏனைய அனைத்து தரப்பினரும் தப்பித்துக் கொள்வதற்காகத் தான், ஒரு நாட்டில், பாடசாலைகள், சமூக நிறுவனங்கள், சிறுவர் பராமரிப்பு உத்தியோகஸ்தர்கள், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்கள், உளவளத்துறை உத்தியோகஸ்தர்கள், இளைஞர் விவகார அமைச்சு, சிறுவர் (மற்றும் பெண்கள்) விவகார அமைச்சு மற்றும் இவை யாவற்றுக்கும் மேலால், இவையனைத்தையும் பெருமையுடன் நிர்வகித்து வருகின்ற அரசாங்கம், அதற்கொரு தலைவர் என்றெல்லாம் நியமிக்கப்பட்டுள்ளனரா?!
குழந்தையின் வளர்ப்பினில் அதன் தாய்க்கு அதிக பங்களிப்பு உள்ளது என்பது எந்த அளவுக்கு உறுதியான உண்மையாகுமோ, அதே அளவுக்கு மேற்கூறப்பட்ட ஏனைய அனைத்து தரப்பினர்களுக்கும் கூட, பங்கு உள்ளது என்பதும் உறுதியே தான்!
இலங்கை, யாழ்ப்பாணத்தின் ஆண்கள் பாடசாலை ஒன்றின் மாணவனொருவன் அண்மையில் தற்கொலை முயற்சியில் ஈடுபடத் துணிந்துள்ளார். அவன் கல்வியில் திறமை பெற்றவன்; ஆற்றுப்படுத்தலுக்கான அவசியம் கொண்டவனாயிருக்கையில், ஏன் இந்த இறுக்கம் அவனுக்கு என ஆராய்கையில், பலவந்தமாக தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாமென சந்தேக்கப்படுவதாய் ஆரம்ப கட்ட விசாரணைகள் கூறுகின்றன எனவும்; போதைக்கு அடிமையாயிருக்கலாமென அனுமானிக்கப்படுன்றதெனவும் கடந்த வாரங்களில் இலங்கையின் பத்திரிகையொன்று கூறியது.
பாடசாலைகளிலும் ‘உளவள‘ ஆசிரியர்கள் உள்ளார்களே! மாணவர்களின் ஒவ்வொரு அசைவுகளும், இவர்களின் பார்வைகளிலும், கணிப்புக்களிலுமிருந்து தொலைதூரத்தில் மறைந்து போவதற்குக் காரணமென்ன?!
ஒன்று, இரண்டு நாட்களில் ஏற்படுகின்றதொரு மனநிலை அல்லவே தற்கொலையே முடிவு என்ற துணிவு! ஒவ்வொரு இளைஞரின் அன்றாட நகர்வுகள், அவனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரச சமூக மேம்பாட்டு செயற்பாட்டாளர்களின் ‘அறிந்திருத்தல்களுக்குட்பட்டிருத்தல்‘ இன்றியமையாதது என்பது ஏன் அவர்களால் உணரப்படாமலுள்ளது??
‘புறக்காரணிகளின் பாதிப்பு‘ என்பது, இளைஞர் தமது உயிரை மாய்க்க முடிவெடுக்கும்வரை தொடர்ச்சியாகத் தாக்கி வதைத்துக்கொண்டிருப்பது அவதானிப்புகளில் அகப்படாத ‘தொலைதூரத்திலிருக்கின்றமை‘ என்பது, மேற்படி தரப்பினர்களின் அவதானிப்புகள் வேறெங்கே மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன?? என்ற பாரியதொரு வினாவை எழுப்புவதும், வினவப்படாடாமலிருப்பதுமான ‘ஆபத்தான சமிக்ஞைகள்‘, சமூகத்தில் இளைஞர் வாழ்விற்கு ‘சாவு மணி‘யாய் அடிக்கின்ற போதும் கூட, மேலுள்ள தரப்பினரின் துரித அவதானிப்புகளுக்கும், செயற்பாடுகளுக்கும் அவை வழிவகுக்காமலிருப்பதும், பிரதேசமாட்டங்களில் அரச நிர்வாக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஆளுமைகளும், ஆளுகைகளும் எவ்வெவற்றுடன் மட்டுப்படுகின்றன?? என்பதும், தீவிர வினாப்படுத்தல்களுக்குரியவைகளாகின்றனவே!!
இரவும் பகலும் உணர்வுகளால் நிறுத்தி, இளைஞரைத் தம் இறக்கையுள் இருத்தி, நடவடிக்கைகளில் நம்பிக்கையைப் பொருத்தி, தளர்கையில் தைரியத்தை செலுத்தி, அன்பே அனைத்தும்; பண்பே உயர்த்தும் என, தலைவராய் வாழும் தகைமை பெற, தரப்படுத்தி நிரல்படுத்தி வளப்படுத்தி வாழவைக்கும் பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவதற்கு மேலும் என்னென்ன வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் மேற்படி அனைத்து தரப்பினரும்?!?!
துடித்துத் தூள்கிளப்ப, தடைகளைத் தகர்த்துத் தாண்டி, நினைத்தவற்றை நினைத்தவாறே பற்றிவிடத் தவிக்கின்ற ‘பருவ வயது’ என்பது, புலன்களில் புதியனவாய்ப் புகுவனவற்றிலெல்லாம் தம்மை ஈடுபடுத்தி இணைந்து செயல்பட ஆர்வம் கொள்கின்ற ‘காலப்பகுதி’ என்பது உளவியல் நிபுணர்கள் மட்டுமே அறிந்திருப்பதொன்றல்ல. அடிப்படையறிவும், பகுத்தறிவும் கொண்ட எந்தவொரு மானுடரும் தெரிந்து புரிகின்றதொரு சாதாரண விடயம் தான் அது!
அந்த வகையில், ஒரு குழந்தை பிறந்துவிட்டால், அது வளர்ந்து, பருவங்களை ஒவ்வொன்றாகக் கடக்கின்ற காலகட்டங்களில், அது காண்பவை, கேட்பவை, அறிபவை, தெரிபவை எல்லாமே அந்தக்குழந்தையின் ஒவ்வொரு ஒவ்வொரு சிந்தனை மற்றும் செயற்பாடுகளை நிர்ணயிக்கின்றன என்பதை நாம் ஒத்துக்கொண்டு தானே ஆகவேண்டும்!
பெற்றோர் தமது குழந்தையின் ஒவ்வொரு கணங்களையும் கட்டமைத்துக்கொடுப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பது போல், தொடர்புள்ள ஒவ்வொரு தரப்பினரும் தமக்குரிய பெரும்பொறுப்பைப் பெற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும்.
அர்ப்பணிப்புடன் ஆசிரியர்களும்; சிறுவர்களின் சிறப்பான வாழ்விற்கான உளநல, உடல்நல அக்கறையுடன் சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்களும், சமூக நிறுவனங்களும்; மேலும், சிறுவரும் இளையோரும் சிக்கிச்சிதறிச்சிதைந்தழிந்தாலும், வளம் தரும் வர்த்தகமே வாழ்வு தரும் என, வலையமைப்புகளை வீசிவிரிக்கின்ற அற்பத்தனத்தை நீக்கி, அதே தொழிநுட்பத்தை இளையோரும் மாண்புற்று தாமும் தனம்பெற்று வாழும் யுக்தியறிகின்ற வர்த்தக வர்க்கங்களும்; அவற்றுக்கு ஆதரவளித்து வரவேற்கின்ற அரசாங்கமும்; தொழிநுட்பங்கள் விவேகங்களை விருத்தி செய்வதற்கேயன்றி வீழ்ந்து போவதற்கல்ல என்பதை குழந்தைகளுக்கு வலியுறுத்தி வாழவைக்கின்ற பெற்றோர்களும்; நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து வெற்றிக்கொடி கட்டினார்களாம், கேவலம் போதை வஸ்துக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம் என்று நாடகமாடாத அரசும் அரசின் காவல்துறையினரும் என்பவர்களெல்லோரும் அமைந்து விடும்போது, ஒரு குலக்கொழுந்து, தன் வாழ்வில் கொடிகட்டிப் பறப்பதை எவரால் தடுத்துநிறுத்திவிட முடியும்??!
இளைஞரை வழிநடத்தும் சேவைப் பொறுப்புடையோரில் ஆகக்கூடியது சுமார் 50% வீதத்தினர் தவிர்ந்த ஏனையோரின் (அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின்) ‘இருக்கைகள்’ அர்த்தமின்றிய சம்பளம் பெறுவனவே.
“கடலாய், மலையாய், காற்றாய், மழையாய்.. முன்னால், முன்னால், முன்னால், முன்னால் வாடா.. உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா.. எங்கள் வேர்வைக்கு வெற்றிகள் வேர்வைக்குமே; நம்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே …!” என்றெலாம் கனவுகளின் காட்டாறாய் வல்லவராய் வானுயர்ந்து மெல்லவொரு ‘மேரு’ செய்து கள்ளமிலா வாழ்வுதனை சொல்லினிக்க வாழ்ந்து விடத்துடிக்கும் இளையோர்க்கு, வாழ வழிசெய்து கொடுப்பது, தொடர்புள்ள அனைத்து தரப்பினரதும் தவிர்க்க முடியாத பொறுப்பு என்ற உயிராய உறுதிப்பாட்டினை உயரத்தே பறக்க விடுவதில் ‘சாதாரண’த்தைக் காண்கின்ற ‘இளைஞர் பாதுகாவலர்கள்’, உரிமைகளுக்கு உத்தரவாதமற்ற, உண்மையற்ற வாழ்வினுள் தள்ளி விட்டு இளைஞர் சமுதாயத்தை இழிவு படுத்துவது இன்று நேற்று நடப்பதொன்றல்ல!
அது ஒரு சாபக்கேடெனில், ஈர்ப்புள்ள ஏதோ ஒரு துறையில் இளைஞர் ஈடுபட விரும்பும்போதெல்லாம் “இல்லை, இல்லை” என்பதே பதிலாகின்றது இக்காலத்தில்!
பொதுவாக இளைஞர் விளையாட்டுத்துறையை நாடினால், விளையாட்டுப்பொருட்களின் எட்ட முடியாத விலையதிகரிப்பு! விளையாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்ற சாதாரணமாக ரூ.1,500/- பெறுமதி கொள்ளும் சப்பாத்துக்கள் தற்போது ரூ.4000/- க்கு மேல் விற்கப்பட, இலங்கை அரசின் அண்மைக்கால ‘பொருளாதார மறுசீரமைப்பு’ நிர்ப்பந்தித்துள்ளது! இவ்வகையிலேயே ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் ஓராயிரம் அழுத்தங்கள்!
கல்வியை நாடினால், கடந்த வரவு செலவுத்திட்டத்தின் ஒரு ‘சிறப்புப்பகுதி’யான, பாடசாலை உபகரணங்களின் அதீத விலையதிகரிப்பானது, சாதாரணமாக ஒரு உயர்தரமாணவனின்/மாணவியின் கற்கைகளுக்கு மாதமொன்றிற்கு குறைந்தது ரூ.20,000/- வரை அறவிடுகின்றது! அதிலும் கூட அலையலையாய் அதிருப்திகள்!
வேண்டாமே, தொழிநுட்ப பயிற்சி பெற்று தொழிலொன்றை முயற்சிப்போம் என்று முடிவெடுத்தால், அவற்றுக்கான செலவினங்களும் தொழில் முதலீடுகளுமானவை, ‘அசைக்கமுடியாத அசாத்தியங்க’ளாகியுள்ள நிலை!
ஆகக்குறைந்தது, ஆரோக்கியம் தரும் அறுசுவை உணவைக்கூட எத்தனை பெற்றோர்களால் பெற்றுக்கொடுக்க முடிகின்றது தம் குழந்தைகளுக்கு என்பதனை அழுகுரல்களின் அதிர்வுகள் நமக்கு அன்றாடம் கூறிவருகின்றன!
எனில், இளைஞர் தமது பெறுமதியுள்ள வாழ்வை வரையறுத்துக்கொண்டே வாழ்வதற்கு பலாத்காரமாக நிர்ப்பந்திக்கப்படுவதன் விளைவுகளும் அவர்கள் வாழத்தகாத வாழ்வொன்றில் வீழ்த்தப்படுவதும், கடந்த மற்றும் தற்போதைய அரச தலைமைத்துவங்களின் ‘முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளும், சீர்குலைப்புகளும்’ என்பதும் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவது நிராகரிக்க முடியாததாகின்றது.
குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவது போல், நாட்டின் தலைமைத்துவம், ஜனங்களின் ‘நாயக’த்தை நகர்த்தி, அவர்களின் ‘வாழ்வுரிமை’யை, தான் கொண்ட தனிவழியே உடைத்துத் துளைத்துத் துகள் தெறிக்கத் தூர்த்தெறியும் போது, நாட்டின் இரும்புத் தூண்களாக இளைஞர்கள் மட்டும் உருவாகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்னவொரு வில்லத்தனம்??!
பானையில் நிறைந்திருந்ததையெல்லாம் பகற்கொள்ளைக்காரர் பறித்தெடுத்ததை பார்க்க கேட்க பலமில்லாமல் அதையெல்லாம் ‘பணயம்’ வைத்துப் பதவி கொண்ட ‘பல்லக்கு யானை’, IMF (‘சர்வதேச நாணய நித்திய’த்தி)ன் ‘வரி’ அமுலாக்க நிபந்தனைகளைக் கனகச்சிதமாய்க் கையாளத்தெரிந்தும், ஊழல் விசாரணைகளுக்கும், ஊழல் தடுப்பு திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் நேரமின்றிய ‘நரி விளையா’ட்டில், நாட்டிலுள்ள இளைஞர்களுடன் ‘பொருளாதார மீள்கட்டமைப்பும், பொருளாதார அபிவிருத்தியும்’ கலந்துரையாடல் ஒரு கேடு! இது ஒற்றையாட்சியல்ல, ஒளிந்திருக்கும் ஓரவஞ்சனையாளருடன் கூட்டாட்சி!
IMF/EFF கடன்பொதி (முதல் பகுதி US $ 330மில்லியன்) கிடைக்கபெற்றதில் அதிகூடிய பங்களிப்பு செய்தது ஜனாதிபதியின் திறமையா? ஜனங்களின் தாங்கொகொணாத தியாகமா?!
ஊழல் விசாரணைகளை உத்தியோகபூர்வமாக மேற்கொண்டு; கொள்ளையடித்தவர்கள் கொண்டுபோனதில் கொஞ்சத்தையேனும் கொண்டு வந்து சேர்த்திருந்தால், கொளுத்திப்போட்ட வெடிகள் நம்மைக் கொண்டாடத் தூண்டியிருக்கும்.
“கடன் வாங்கி வாழ்வாரே வாழ்வார் அஹ்திலார்
விடந்தாங்கி வேரறுவார்”
என்றவாறான கருத்துக்களே இளைஞர் சிந்தையில் அரசினால் விசிறப்படும் வீணான விதைகளாகும்!
“Change it or leave it!”என்பது சிறார்களும் சொல்லிச்செய்யும் கொள்கையாகும். சிக்கல்களை சீர் செய்து சரி செய்தல் வேண்டும்; இல்லையேல் விலக வேண்டும்!
இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் துணைச்செயலர், மருத்துவர் (Dr) வாசன் ரத்தினசிங்கம் கடந்த வாரங்களில் தெரிவித்திருந்தவை:
“சாதாரண வைத்தியர் ஒருவர் PAYE வரி செலுத்தும் போது, வருடமொன்றில் பன்னிரண்டு மாதம் பணி செய்தும், பத்துமாத சம்பளமே பெறுகின்றார்”;
“அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (Medical Association) கணக்கெடுப்பினடிப்படையில், மாதமொன்றுக்கு 50 முதல் 60 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்;மேலும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக நற்சான்றுப்பத்திரம் கோரி சங்கத்திடம் 4,000 விண்ணப்பங்கள் மருத்துவர்களிடமிருந்து.”
என்பவையாகும். இலவசக்கல்வியை இலங்கையில் பெற்ற நிபுணர்களும், மூளைசாலிகளும் வெளிநாடுகளில் சென்று சம்பளம் பெற்று வரி செலுத்துவது, இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகின்றது.
அதுமட்டுமல்லவே PAYE வரி மூலம் அரசாங்கம் எதிர்பார்ப்பது மாதமொன்றுக்கு 100 மில்லியன் ரூபா என்ற நிலையில், கடந்த மார்ச் 15 ஆம் திகதியன்று ‘தொழில்வல்லுனர்களுக்கான தொழிற்சங்க’ங்களின் நாடுதழுவிய போராட்டத்தினால் அந்த ஒரேநாளில் அரசிற்கான வருமான இழப்பு 46 மில்லியன் ரூபா என அரசாங்கமே அறிவித்திருந்தது. அரசு எதிர்பார்த்த மேலதிக (வரி) வருமானத்தில் ஏறக்குறைய பாதிப்பங்கினை அந்த ஒற்றை நாளில் அரசு இழந்தது!
இத்துடன் முடிந்துவிடவில்லையே! வரி நீக்கம், வட்டி வீத அதிகரிப்பு நீக்கங்களுக்கான கோரிக்கைகளுக்கு, ஏற்றுகொள்ளும்வகையிலான தீர்க்கமானதொரு பதில் அரசு கூறும்வரை, மீண்டும் ‘தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கம்’ பெருந்திரள் போராட்டங்களை தொடர எண்ணியுள்ளமை, அரசின் ‘பொருளாதார மறுசீரமை’ப்பில் பொருத்தமற்ற போக்குகளைத் தொடர்சியாகத் தோற்றுவிக்கபோகிறதே!
இலங்கையில் மேலும் அரச அதிகாரிகள், பிரமுகர்கள் சிலர் கடந்த வார ஊடக அறிக்கைகளில் குறிப்பிட்டவற்றில் சில:
“கடந்த (2023) ஜனவரி மாதம் மட்டும் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் US $ 1 பில்லியன்; ஆனால் 100 மில்லியன்கள் வழங்க முடியாததால் தேர்தல் நடத்தப்படவில்லை; அவசிய ஒதுக்கீடுகள் அரசினால் அகற்றப்படுகின்றன” — இலங்கை ‘ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சி’ உறுப்பினர் பிரபா கணேஷன்.
“நடந்து முடிந்த உயர்தரப்பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி, கடந்த பெப்பிரவரி 29ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும், ஆனால் இப்பணிக்காக அரசாங்கத்தின் கொடுப்பனவு அதிருப்பதிகளால், பணி இன்னுமே ஆரம்பிக்கப்படாமல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டுக்கொண்டிருக்கின்றன”
“இலங்கையின் 43 லட்சம் மொத்த மாணவர் தொகையில் 20 லட்சம் மாணவர்க்கு ‘உணவு உதவித்திட்ட’மொன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தும் இன்று வரை அமுல்படுத்தப்படவில்லை” — இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர், யோசப் ஸ்டாலின்.
“அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ளூராட்சி சபையை நடத்துவது உகந்ததல்ல என SCFR 35/1, 2016 வழக்கில் கூறப்பட்டுள்ளது”– முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும், தற்போதைய எல்லை நிர்ணயத்திற்கான தேசியத் தலைவருமான மஹிந்த தேசப்ரிய.
மேலும், ‘உள்ளூராட்சி சபை’, கடந்த மார்ச் 19 நள்ளிரவில் காலாவதியாகி காணாமலாக்கப்பட்டதிலிருந்து, இலங்கையின் 29 மாநகரசபைகள், 36 நகரசபைகள், 275 பிரதேச சபைகளும் ‘மக்கள் தேர்வு’ தவிர்க்கப்பட்டு, ஜனாதிபதியின் நிர்வாக பரப்பினுள் கட்டுப்படுகின்றன.
லாபமீட்டும் நிறுவனங்களை விபரங்களின் வெளிப்படைத்தன்மை மறைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முற்படும் அரசிடம், விபரம் வெளிப்படுத்தக்கோரிய சத்தியகிரகத்திலீடுபட்டமைக்காக ஊழியர்களுக்கு அரசிடமிருந்து கட்டாயலீவு.
நாட்டில் மதங்களை வளர்த்து, மனித நேயத்தை உயர்த்த வேண்டிய தார்மீக பொறுப்பினைக்கொண்டிருக்கின்ற அரச தலைவனின் தலைமையில் அல்லது நிர்வாகத்தில் சைவர்களின் சரித்திரம் கூறும் சைவத்தமிழ் செம்மண்ணில் சிவனின் சிற்பங்கள் சிதறடித்துத் தகர்த்தெறியப்பட்டு, ஆதிசிவனும், ஆத்மீகமும் அனாதைகளாகியுள்ளனர்.
மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுத்து, நிவாரணத்திற்காக நீதிமன்றம் வரை சென்ற அரச அதிகாரி, பதவி நீக்கப்படுவதற்கான ‘குற்றப்பத்திரிகை’ பெற்றுள்ளார்.
நாட்டின் இளைஞர், காண்பவையும், கேண்மைகளும் எல்லாமே எங்கிலுமே ஆரோக்யமும், அமைதியும் பிரவகிக்கின்றனவா?? ஜனநாயகத்தின் குரல்களும், கோரிக்கைகளும் கொளுத்தப்பட்டு; அரசினால் வளர்த்து வாழவைக்கப்பட வேண்டிய இளைஞர்கள் களைத்துக்கட்டிழந்து போகும்வரை ஆட்சிசெய்து, விளைவு கண்ட ஆர்ப்பாட்டம், போராட்டம், சத்தியாகிரகம், நித்திய கரகம் வரை, அனுதினமும் அழுத்தங்கள், அழுத்தங்கள் என்ற அலங்கோல வாழ்வு, இளைய சமுதாயம் ‘வன்முறை’யில், அல்லது ‘தன்னிழப்’பில் செல்வதைத் தடுப்பது, தவயோகத்தாலும் முடியாததே!!!
நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணிப்பதும், பாராளுமன்ற சிறப்புரிமையை சீரழிப்பதும் குற்றமல்ல; மக்கள் ஆணை பெற்ற அரசியல் தலைவர்கள் அவசியமல்ல; ஊழல்களை உலவ விட்டு, வறியோர் மீது ‘வரி’களைச் சுமத்தி வதைசெய்வது பாவமல்ல; மனித நேயத்தை மறப்பது பிழையல்ல; மதங்களை சிதைப்பது சிதைவல்ல; கல்வியைக் கலைப்பது கவலையல்ல; நியாயமான அவசியங்களை நிராகரித்து ஆடம்பரங்களுக்கு அனுமதியளித்தல் தவறல்ல; ஆளுமை என்பது சுயநல சூட்சுமங்களைக் கச்சிதமாய்க் கையாள்வதிலேயே தங்கியுள்ளது என்பதொன்றும் ஏற்புடையதாகாததல்ல!! என்று இவ்வாறெல்லாம் தினம் தினம் இளைஞர் சமுதாயத்திற்கு கணங்கள் தோறும் கற்றுக்கொடுப்பது யார்??
தேடிச் சோறுநிதந்தின்று, பல சீரழியும் சிறுகதைகள் பேசி, வாடித் துன்பமிக உழன்று, பிறர் வாடப்பல செயல்கள் செய்து, நரைகூடிக் கிழப்பருவ மெய்தி, கொடுங்கூற்றுக்கிரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தீரோ? என, நேரியதாய் சீரியதாய் நாடுகாணும் நற்பணிகளில் வேகங்கொண்டு வினைத்திறன் காட்ட விழையும் ‘இளைஞர் சமூக’மொன்றை வழிநடத்துவதில் வெற்றி கண்டு வேர் கொடுப்பதில், ‘சிறுவர், இளைஞர்களுக்கான மேற்படி பாதுகாவலர்க’ளின் ‘ஆர்வமின்மை’யானது, வரட்சியான அலட்சியங்களாகவே தொடர்வது இலங்கையில் தொலைந்து போகாத தொடர்கதையாகும்!