16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 23 ரன்களும் கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். 3வது வீரராக களமிறங்கிய பனுக்கா ராஜபக்சா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த அவர் ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்திருந்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் திம் சவுதி 2 விக்கெட்டும் உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். 2வது ஓவரை வீசிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பஞ்சாப் அணி பந்துவீச்சை எதிர்கொள்ள சற்று தடுமாறிய கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்கள் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்தது.
சற்று நிதானமாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் நித்திஷ் ராணாவும் 24 ரன்களுக்கு நடையை கட்டினார். 16 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்திருந்தது. 24 பந்துகளில் 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் ஆட்டம் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.