ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இதில், சென்னை அணி குஜராத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுற்ற போதும், இரண்டாவது ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது. இந்நிலையில், தனது 3-வது ஆட்டத்தில் மும்பை அணியை அதன் சொந்த மைதானமான வான்கடே-வில் இன்று எதிர்கொள்கிறது. சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த இரு போட்டிகளிலும் அரை சதம் அடித்து நம்பிக்கை அளிக்கிறார்.
சென்னை அணியின் பந்துவீச்சு சற்றே கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக, அதிக உதிரிகள் வழங்குவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சாளர்களும் கைகொடுக்கும் பட்சத்தில் மும்பை அணி கடும் சவாலை சந்திக்க நேரிடும்.
அதேவேளையில், மும்பை அணி தனது முதல் போட்டியில் பெங்களூருவிடம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், இன்றைய போட்டியில் வெற்றிக்கணக்கை தொடங்க போராடும் என்பதில் சந்தேகமில்லை. மும்பை அணியிலும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன், திலக் வர்மா என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சிலும் ஆர்ச்சர், கேமரூன் கிரீன், பெஹ்ரன்டர்ஃப், அர்ஷத் கான் என மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே, சமபலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை அணியில் இன்று விளையாடும் வீரர்கள்- டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஷிவம் துபே, டுவைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், சிசண்டா மகலா, துஷார் தேஷ்பாண்டே.
மும்பை அணியில் இன்று விளையாடும் வீரர்கள் – ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அர்ஷத் கான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்