நடராசா லோகதயாளன்.
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) அன்று அத்துமீறி நுழைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மதபோதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டமைக்காகவே உதயன் பத்திரிகை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் தலைமையில் வந்த சுமார் 30 பேர் கொண்ட கும்பலே இதில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரால் தீவிர விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே அந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடு புகுந்து தாக்குதல்
அச்சுவேலியில் உள்ள ’அசெம்ளி ஒஃப் ஜீவ வார்த்தை’ என்ற கிறிஸ்தவ ஜெபகூடத்தில் அதிக ஒலி எழுப்பப்பட்டமையால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மதக்குழுவின் போதகர் உட்பட மூவர் சபைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களை கழுத்தை நெரித்துத் தாக்கினர் என்ற முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.பாதிப்புக்குள்ளான பெண் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஆனால் தமது சபை மீது கற்கள் வீசப்பட்டமையாலேயே அந்த வீட்டுக்குச் சென்றோம் என்று போதகரும், ஏனைய இருவரும் பொலிஸ் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான செய்தி ஞாயிறு காலையில் உதயன் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இதையடுத்து அன்று மதியம் உதயன் பத்திரிகை தலைமையகத்துக்கு சுமார் 30 பேரைக் கொண்ட கும்பல் வாகனங்களில் வந்திறங்கியது. அலுவலக பாதுகாப்பு உத்தியோகத்தரை மீறி அந்தக் கும்பல் வரவேற்பறைக்குள் அத்துமீறி நுழைந்து “போதகரைப் பற்றி எப்படிச் செய்தி போடுவீர்கள்?” “யார் இந்தச் செய்தியைத் தந்தார்கள்?” என்று சத்தமிட்டு, தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து, அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், அங்கு பணியில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஆசிரியர் பீடத்துக்கு அறிவிக்கப்பட்டு ஆசிரிய பீடத்தினர் வரும் முன்னர் அலுவலக வாயிலை மறைத்து, எவரும் உள்ளே செல்லமுடியாத வகையில் தரையில் அமர்ந்து அவர்கள் மறியல் செய்தனர்.
உதயன் ஆசிரியர் பீடப் பணியாளர்கள் இருவர் தீர்வொன்றைக் காணும் வகையில் அவர்களுடன் கலந்துரையாட முற்பட்டனர். ஆனால் அதற்கு அந்தக் கும்பல் இணங்கவில்லை.
“போதகர் தொடர்பாக வெளியான செய்தியை எவ்வாறு வெளியிடுவீர்கள்?” என்று கேட்டு அந்தக் கும்பல் ஆசிரிய பீடப் பணியாளர்களைச் சுற்றிவளைத்து அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டது.
“போதகரும் ஏனைய இருவரும் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுவே உரிய ஆதாரங்களோடு செய்தியாக்கப்பட்டுள்ளது ’ என்று அவர்களிற்கு விளக்கப்பட்டது.
“செய்தியில் தவறு ஏதேனும் இருக்குமானால் அது தொடர்பான ஆதாரங்களையும் விளக்கதையும் சமர்ப்பித்தால், உரிய வகையில் அதை ஆராய்ந்து முடிவெடுப்போம். அவ்வாறில்லாவிட்டால் சட்டரீதியாக இந்தவிடயத்தை அணுகுங்கள்” என்று பக்குவமாக ஆசிரியபீடத்தினரால் அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பங்களில் ஈடுபட்டனர் என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
உதயன் பத்திரிகை நிறுவனப் பணியாளர்களை அந்தக் கும்பலைச் சேர்ந்தோர் அனுமதியின்றி, கைத்தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்ததுடன், காணொலிப் பதிவும் மேற்கொண்டனர்.
மறைந்திருந்த போதகர்
‘இந்த விடயத்துடன் நேரடியாகத் தொடர்புடைய எவரேனும் இருந்தால் முன்வந்து பேசுங்கள்’ என்று உதயன் ஆசிரிய பீடத்தினர் கோரியபோது எவரும் முன்வரவில்லை. நீண்ட நேரத்தின் பிறகு ஒருவர் ’தானே அந்தப் போதகர் ’ என்று வெளிவந்தார். ‘ஏனையோரை வெளியே அனுப்பிவிட்டு உங்களின் பிரச்சினை தொடர்பில் நீங்கள் பேசுங்கள்’ என்று கேட்டபோது, ‘என் மீதுள்ள விசுவாசத்தில் அவர்கள் கதைக்கின்றார்கள் ’என்று கூறிய போதகர், உதயன் ஆசிரியர் பீடத்தினருடன் பேசுவதை தவிர்த்தார்.
தாக்க முயற்சி
ஒருகட்டத்தில் அந்தக் குழு ஆசிரியர் பீடப் பணியாளர்களைச் சுற்றிவளைத்து அவர்களைத் தாக்கும் வகையில் செயற்பட ஆரம்பித்தது. அதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வருவதை அவதானித்த அவர்கள் அங்கிருந்து நழுவத்தொடங்கினர். இறுதிவரையில் உதயனில் வெளியான செய்தியில் தவறு உள்ளதா? என்பது தொடர்பில் அவர்கள் எதுவும் கூறவில்லை.
போதகரின் பின்னணி
’அசெம்ளி ஒஃப் ஜீவ வார்த்தை’ என்ற இந்த மதச்சபையின் போதகர் ஆரம்பத்தில் இன்னொரு சபையின் போதகராகவே இருந்தார். ஆயினும் அந்தச் சபையினர் குறித்த போதகரை இடைநிறுத்தியதால், தனியாக ’அசெம்ளி ஒஃப் ஜீவ வார்த்தை’ என்ற பெயரில் மதக்குழுவை தொடங்கி நடத்தி வருகிறார். இந்தச் சபைக்கு சொந்தமான தேவாலயம் , பொதுக்காணியொன்றை அடாத்தாகப் பிடித்தே அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குவியும் கண்டனங்கள்
கிறிஸ்தவ புனிதநாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் குறித்த மதச்சபை மிலேச்சத்தனமாக நடந்து கொண்டமைக்கும், ஊடக நிறுவனத்துக்குள் அத்துமீறி, அச்சுறுத்தி நிகழ்த்திய அட்டூழியத்துக்கும் பல தரப்புகளும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
போதகர் ஒருவர் தலைமையிலான மதக்கும்பல் ஒன்று உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் உதயன் நிர்வாக இயக்குநர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இந்தவிடயம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படுமென்றும் ஜனாதிபதி செயலர் சமன் எக்கநாயக்கவால், உதயன் நிர்வாக இயக்குநருக்கு தெரிவிக்கப்பட்டது.
உதயனுக்குள் புகுந்த மதக்குழு தொடர்பில் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
வன்முறையைத் தூண்டுவோரை, சட்டங்களை அப்பட்டமாக மீறுவோரைத் தளையிட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
முந்தையநாள் கோப்பாயில் சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்த குற்றச்சாட்டின் கீழ் பாதிரி ஒருவர் தேடப்படுகின்றார். அச்சுவேலியில் அடுத்த வீட்டு அணங்கின் தலையில் கல் வீசிக் கடுங் காயம் ஏற்படுத்திய போதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மை காலங்களில் சைவ மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உதயன் பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் மேல் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டதை உருத்திர சேனை வன்மையாக கண்டிக்கின்றது. தாக்குதல் முயற்சியானது ஊடக சுதந்திரத்தின் மேல் தொடுக்கப்பட்ட போர் ஆகு என்று அந்த அமைப்பின் தலைவர் ஆர்.சுஜீவன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்.