ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 212 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் விராட் கோலி, டூப்ளசிஸ், மேக்ஸ் வெல் ஆகியோர் அரைச்சதம் அடித்து அணியின் ஸ்கோ உயர உதவினர். 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ அணியின் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்தில் இறங்கினர். டூப்ளசிஸ் நிதானமாக விளையாட மறுமுனையில் விராட் கோலி சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இதனால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 11.3 ஓவரில் அணி 96 ரன்களை எடுத்திருந்தபோது விராட் கோலி 61 ரன்னில் வெளியேறினார். 44 பந்துகளை எதிர்கொண்ட கோலி 4 பவுண்டரியும், 4 சிக்சர்களையும் அடித்திருந்தார்.
ஒரு விக்கெட் விழுந்தபோது டூப்ளசிசுடன் மேக்ஸ்வெல் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தார். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 29 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 6 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 59 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கேப்டன் டூப்ளசிஸ் 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் நின்றார். 2 ஆவது விக்கெட்டிற்கு டூப்ளசிசும் – மேக்ஸ்வெல்லும் 50 பந்துகளுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.