சிவா பரமேஸ்வரன்
அவரது பணி அளப்பரியது. அவரது வாழ்க்கை பயனுள்ளது. அவை போற்றப்பட வேண்டும்.
உள்ளூரில் மாணிக்கவாசகர், பொதுவாக பொன்னையா மாணிக்கவாசகம், பிபிசியின் சிங்கள மொழி ஒலிபரப்பான ‘சந்தேஷ்ய’ நண்பர்களுக்கு அவர் மாணிக், தமிழோசை சகாக்களிற்கு அவர் ‘மாணிக்ஸ்’ என்று பல பரிமாணங்களில் அவர் அறியப்பட்டவர். ஆனால் அன்பின் நிமித்தம் அவரை ‘வன்னித் தளபதி’ என்றும் நாங்கள் அழைப்பதுண்டு.
அவரை எப்படி அழைத்தாலும், அவர் அவராகத்தான் இருந்தார். அதுதான் அவரது தனிச்சிறப்பு.
உலகளவில் அவர் ‘பிபிசி தமிழோசை’ மாணிக்கவாசகம் என்றே பரவலாக அறியப்பட்டார்.
இலங்கையின் வலி மிகுந்த போர்க்காலத்தில், நேரடியாக களத்திலிருந்து உள்ளதை உள்ளபடி தமிழோசை மூலம் உலக மக்களிற்கு அறியத்தந்த்வர். நெருக்கடிகளிற்கு இடையில் ‘உள்தகவல்களை’ ஆதாரத்துடன் பெற்று உலகறியச் செய்தவர். ’அவரச கோலத்தில் எதையும் அள்ளித் தெளிக்காமல்’ மறுப்பேதும் தெரிவிக்க வேண்டிய நிலையையோ அல்லது செய்தியை மறுதலிக்கவோ தேவையின்றி செய்திகளை வழங்கி தனக்கும், தமிழோசைக்கும் பெருமை சேர்த்தவர்.
ஆனால் அதே தமிழோசை அவரை எப்படி அவமரியாதை செய்தது, மோசமாக நடத்தியது என்பதை பின்னால் சொல்கிறேன்.
மாணிக்கவாசம் ‘மாணிக்ஸ்’ அவர்கள் ஊடகத்துறையின் பலம், பலவீனம், நெளிவு சுழிவுகளை நன்றாகப் புரிந்து கொண்டவர். ஒவ்வொர் ஊடகத்திற்கும் ஒவ்வொரு சிறப்புத்தன்மை உள்ளது என்பதை நன்கு அறிந்தவர். வானொலிக்கும் மற்ற ஊடகங்களிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களை நன்கு உணர்ந்தவர். வானொலி அவர் சுவாசத்துடன் இணைந்தது. ஒலிபரப்பை தனது கைப்பிடியில் வைத்திருந்தவர் மாணிக்ஸ்.
வானொலிச் செய்தி அல்லது பெட்டகம் என்றால் என்ன, அதற்கான இலக்கணம் என்ன, அது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருந்தால் மக்கள் அதை விரும்புவார்கள், நேசிப்பார்கள் என்பதை அவர் தனது அனுபவத்தின் மூலம் நன்கு உணர்ந்திருந்தார். அதுவே அவரது வெற்றிக்கும், போர்க்காலத்தில் தமிழோசையின் வெற்றிக்கும் வழிவகுத்தது.
பேசுவது, எழுதுவது இரண்டிலும் அவர் வல்லவர். அதனால் தான் அவரால் இறுதிவரை ஈழத் தமிழ் ஊடக்த்துறையில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பெற முடிந்தது. 30 நிமிட நிகழ்ச்சியில் அவரது பங்களிப்பு 3-4 மட்டுமே இருந்தாலும் அது முத்தாக இருந்தது. வானொலிக்கே உரிய குரல்களை, ஒலிகளை, இயற்கை சப்தங்களை அவர் எங்கு எந்தளவில் சேர்க்க வேண்டும் என்று புரிந்தவர். அதனால் அவரது செய்தித் தொகுப்பும் பெட்டகங்களும் சிறப்பு பெற்றன. அதேவேளை தனது பணியின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் திறமை காரணமாக அவருக்கு அந்த தொழில்ரீதியான தற்பெருமையும் இருந்தது. அதில் தவறேதும் இல்லை.
பல ஆண்டுகள் அவருடன் அன்றாடம் பேசும் வாய்ப்பு எனக்கிருந்தது. அது அன்றாட பிபிசி தமிழோசை செய்திகளிற்காக மட்டுமல்ல, போர், உள்நாட்டு-வெளிநாட்டு அரசியல் ஆகியவற்றில் தொடங்கி, இராணுவத்தின் பொய்களைத் சீரணித்து, உள்ளூரில் வவுனியா பேருந்து நிலையப் பிரச்சனையும் தாண்டி, தமிழ் அரசியல்வாதிகளின் உளரல்களையும் கடந்து, பிட்டு, இடியப்பம், சொதி, சம்பல், சாம்பார், இட்லி, தோசை, பிள்ளைகளின் நலன்கள் என்று பல விடயங்கள் எமது உரையாடலில் இருக்கும்.
தமிழோசை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட நாளைக் கடந்து அடுத்த நாள், அடுத்த வாரம் என்ன செய்யலாம், செய்ய முடியும் என்பது போன்ற ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் எங்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்றன. உங்கள் மனங்களில் ஒரு கேள்வி எழலாம்!
”ஒரு செய்தியாளர் அடுத்த நாள், அடுத்த வாரம் என்ன செய்யலாம்” என்று எப்படி இன்றே திட்டமிட முடியும்? எதையும் முடியும் என்று நாங்கள் இருவரும் செய்து காட்டியவர்கள் என்பதில் மகிழ்ச்சி. அது எப்படி?
ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். நார்வே அல்லது ஜெனீவாவில் சமாதனாப் பேச்சு நடைபெறுகிறது. அதற்கான திகதிகள் தெரிந்தவுடனேயே நாங்கள் இருவரும் அது தொடர்பில் பேச ஆரம்பித்துவிடுவோம். என்னவோ நாங்கள் தான் அந்த இருதரப்பு மாதிரி. பேச்சுவார்த்தை தினத்திற்கு முதல் நாள் எப்படியான ஒரு முன்னோட்டத்தை தயாரிக்கலாம். கடந்த முறை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தளவிற்கு பலனைத் தந்தது, அது வெற்றியா தோல்வியா, இம்முறை என்னென்ன விடயங்கள் புதிதாகத் முன்வைக்கப்பட்டுள்ளன, யாரெல்லாம் பேச்சுவார்த்தைகளிற்குச் செல்கிறார்கள், அவர்களிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும், மக்கள் இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் என்ன சொல்கிறார்கள், அரசியல் அவதானிகளின் கருத்துக்கள் என்ன என்று இப்படி பல விடயங்கள் எமது விவாதத்தில் இடம்பெற்று அதன் அடிப்படையில் எப்படி அடுத்துவரும் நாட்களில் நிகழ்ச்சிகளை திட்டமிடலாம் என்பதெல்லாம் எமது அன்றாட தொழிற்சார் உரையாடல்களின் ஒரு பகுதியாக இருந்தது.
இப்படி தமிழ் மக்களின் நலன்களை மனதில் நிறுத்தி, செய்திகளை பக்கச்சார்பின்றி வழங்கினாலும், உரிய பாராட்டோ அல்லது கொடுப்பனவோ- அவர் உட்பட- இலங்கைச் செய்தியாளர்களாக தமிழோசைக்கு இருந்த யாருக்குமே அளிக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. அதற்கு தலைமையால் கூறப்பட்ட காரணம் அவர்கள் நமது ‘முழு நேரப் பணியாளர்கள் இல்லை’ பகுதி நேர செய்தியாளர்கள், எனவே அவர்களுக்கு அன்றாடம் கொடுக்கப்படும் ‘உழைப்பிற்கேற்ற ஊதியம்’ போதுமானது என்று தலைமை மிகச்சாதாரணமாகத் தெரிவிக்கும். அவருக்கு தாளமடிக்க சிலர். “மாஸ்டர்” நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் நாட்களில் மாணிக்ஸ் மற்றும் உதயகுமார் (மட்டக்களப்பு) ஆகியோருக்கு கொண்டாட்டம் தான் என்று எங்களை இடித்துரைபார்கள் தலைமையும் அவரது கைதடிகளும். “மாஸ்டரின்” தினங்களில் மட்டும் எப்படி மாணிக்ஸும் உதயகுமாரும் தேடித் தேடித்தேடி செய்திகளை அளிக்கின்றனர்? என்றெல்லாம் ஏளனம். என்னை தமிழோசையில் மட்டுமல்ல சகோதர சேவையான பிபிசி சிங்கள ஒலிபரப்பான சந்தேஷ்யவிலிருந்த நண்பர்களும் என்னை “மாஸ்டர்” என்றே அழைத்தனர். அது ஏனென்று அவர்களிற்கே வெளிச்சம்.
எனினும் இந்த விமர்சனங்களைக் கடந்து நான் துணிவாக மாணிக்ஸ் அவர்களை எமது வட இலங்கைச் செய்தியாளர் என்றும் திரு உதயகுமார் அவர்களை எமது கிழக்கிலங்கைச் செய்தியாளர் என்றும் எனது கடைசி நாள் ஒலிபிரப்பு வரை கூறினேன்.
“நீங்கள் எப்படி அவரை எமது செய்தியாளர் என்று கூறலாம்” இது தலைமையின் வலுவில்லாத வாதம்.
“ஏன் கூறக்கூடாது. அவர்கள் நமக்காத்தானே செய்திகளை பெரும் நெருக்கடிகளிற்கு இடையில் அளிக்கிறார்கள், அதில் என்ன தவறு” இது எனது நியாயம்.
“வவுனியாச் செய்தியாளர், மட்டக்களப்புச் செய்தியாளர் என்றுதான் இவ்வளவு ஆண்டுகளாக கூறி வருகிறோம், அதுவே மரபு”
”ஒருவருக்கு பெருமை சேர்க்கும் என்றால், மரபுகளை மீறுவதில் என்ன பிரச்சனை. இவ்வளவு நாள் செய்த தவறிற்கு பிராயச்சித்தம் தேடுவது போல் அந்த மரபை மீறி, அவர்களிற்குரிய அங்கீகாரத்தை அளிப்போம்”
இந்த விவாதம் ஒரு கட்டத்தில் அன்றாட நிகழ்வாகியது.
நான் எனது நிலைப்பாட்டில் இறுதி நாள் வரை உறுதியாக இருந்தேன். அதன் காரணமாக சிலவற்றை இழந்தேன். எனினும் எமது செய்தியாளர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்ததில் மகிழ்ந்தேன். எனினும் தலைமையும் அவரது கைதடிகளும் எனது நிலைப்பாட்டுடன் உடன்படவில்லை, நானும் அதுபற்றி கவலைபப்டவில்லை.
தமிழோசையில் அன்றாடம் முதல் தொலைபேசி அழைப்பு மாணிக்ஸ் அவர்களுக்குத்தான் இருக்கும். அந்த அழைப்பிற்கு அவரும் தயாராகவே இருப்பார். “என்ன மாணிக்ஸ்… என்ன நடக்குது நாட்டிலே”. அன்றாடம் லண்டனில் நாங்கள் காலை அலுவலகம் வருவதற்கு முன்னரே, அவர் உள்ளூர் செய்திகள் பற்றிய குறிப்புகளை தயாராக வைத்திருப்பார். பிபிசி தமிழோசை என்ன எதிர்பார்க்கும், எப்படிச் சொனால் அது எடுபடும் என்பது அவருக்கு கைவந்த கலை. சில நேரங்களில் ஒலிபரப்பிற்கு ஒரு மணி நேரமே இருக்கும் போது ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று மிக முக்கியமான செய்தி இருந்தாலும், அந்த ஒரு மணி நேரத்திற்குள் அதை செய்தியாக்கி தமிழோசைக்கு அவர் தந்த நாட்கள் ஏராளம் ஏராளம்.
மாணிக்ஸ் அவர்களின் செய்தி சேகரிப்பிற்கு மிகவும் முக்கியமானது அவர் பேணிவந்த தொடர்புகள். அந்த தொடர்புகள் காரணமாக அவர் பல இன்னல்களையும் எதிர்கொண்டார். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. அவரது ஒரே சிந்தனை; செய்தி…..செய்தி…..செய்தி.
போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, பல ஊடகவியலாளர்களைப் போன்று அவருக்கும் கடும் அச்சுறுத்தல் இருந்தது.. உயிராபத்துக்கள் அவரை சூழ்ந்திருந்தன. அதே நெருக்கடியில் மட்டக்களப்பிலிருந்த எமது செய்தியாளர் உதயகுமார் அவர்களிற்கும் இருந்தது. பாதுகாப்பு கருதி அவர்கள் இருவரையும் லண்டனிற்கு சிலகாலம் அழைத்து வந்து, காலம் சீராகும் போது மீண்டும் இலங்கைக்கு அனுப்பலாம் என்ற ஒரு கருத்து எழுந்தது. ஆனால் தமிழோசை தலைமையோ அதே பல்லவி , “ அவர்கள் நமது செய்தியாளர்கள் இல்லை, நமக்கும் செய்திகளை அளிக்கிறார்கள், அவ்வளவே.
ஒரு நாள் தமிழ் மற்றும் சிங்கள சேவையின் பொதுவான கூட்டமொன்றில் இது விவாதிக்கப்பட்டது. சிங்கள சேவையின் தலைவரும் பெரும்பாலானவர்களும் ‘நமது’ செய்தியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். விஷயம் மேலிடம் வரை சென்றது. மேலிடமும் நியாயத்தை உணர்ந்து தமிழ்-சிங்களச் செய்தியாளர்களை லண்டனிற்கு அழைத்து வரலாம் என்றது. ஆனால் தமிழோசை செய்தியாளர்களிற்கு அந்த பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
இதில் முக்கியமான மற்றொன்றையும் இந்த சமயத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் அந்த உள்நாட்டு யுத்தத்தை மையப்படுத்தியே தமிழோசை செயல்பட்டது. உலகமும் தமிழோசை செய்திகளையே பிரதானமாக எதிர்பார்த்து காத்திருந்தன. ஆனால் அப்படியான சூழலில் தலைநகர் கொழும்பிலோ, வடக்கா தமிழர்களின் அரசியல் தலைமையகமாக விளங்கிய யாழ்ப்பாணத்திலோ, கிழக்கிலோ அல்லது மலையகத்திலோ தமிழோசைக்கென்று முழுநேர செய்தியாளர்கள் இருக்கவில்லை. ஆனால் அதேவேளை சென்னையிலும், புதுடில்லியிலும் முழுநேர செய்தியாளர்கள் இருந்தனர். இது ஏன்? அதற்கு தலைமை ஒரு நாளும் பதிலளித்ததில்லை.
ஆனால் மாணிக்ஸின் ஆழ் மனதில் தங்களை முழுநேர செய்தியாளர்களாக பிபிசி தமிழோசை அங்கீகரிக்கவில்லை/நியமிக்கவில்லை என்பது இருந்தாலும், ஒரு நாளும் அவரது செய்தியிலோ அல்லது அதை வழங்குவதிலோ எந்த குறையும் இருக்காது.
அவர் வானொலியை நேசித்தார், சுவாசித்தார். இன்று அதே வானலையில் கலந்துள்ளார். போர்க்காலத்தில் ஒரு செய்தியாளர் கடுமையான நெருக்கடிகளிற்கு இடையே சுயத்தை இழக்காமல் எப்படி பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் பொன்னையா மாணிக்கவாசகம்.
அவர் நினைவை போற்றும் வகையில், இலங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக பக்கசார்பின்றி செயற்படும் செய்தியாளர் ஒருவருக்கு அவரது பெயரில் ஒரு விருதை ஏற்படுத்தி அதை அளிப்பது ஈழத் தமிழ் ஊடகத்துறையில் ஒரு மாணிக்கமாக திகழ்ந்த மாணிக்ஸ் அவர்களுக்கு செலுத்தும் ஒரு அஞ்சலியாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.