ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து விராட் கோலி – ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர். அணி 42 ரன்கள் எடுத்திருந்தபோது 22 ரன்களுடன் டூப்ளசிஸ் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி 34 பந்துகளில் அரைச்சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மஹிபால் லோம்ரோர் 26 ரன்களும், கிளென் மேக்ஸ் வெல் 24 ரன்களும் எடுத்தனர்.
ஷாபாஸ் அகமது 20 ரன்களும் அனுஜ் ராவத் 15 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 174 ரன்களை எடுத்தது. டெல்லி தரப்பில் மிட்செல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார்.
மிட்செல் மார்ஷ் 0 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த யாஷ் துல் 1 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய மணிஷ் பாண்டே 50 ரன்கள் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு உதவினார். அக்சர் படேல் 21 ரன்கள், அமான் ஹகிம் கான் 18 ரன்கள், ஆன்ரிக் நோட்ஜ் 23 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிந்த நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.