தமிழின அழிப்பின் மறுப்பையும் திரிபுபடுத்தலையும் எதிர்த்தல்
ஒன்ராறியோவின் சட்டசபையில் மே 2021இல் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானதெனக் கூறி தமிழின அழிப்பு மறுப்பாளர்கள் மீண்டுமொரு முறை இச்சட்டத்தினை சட்ட சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
சட்டமூலம்-104ஆனது, ஸ்காபரோ – றூஜ்பார்க்கின் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் அவர்களால் ஏப்ரல் 30, 2019இல் முன்மொழியப்பட்டு, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் மூன்று வாசிப்புகளையும் பூர்த்திசெய்து, மே 12, 2022இல் சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடன், அரச அங்கீகாரம் பெற்ற முழுமையான சட்டமாகக் கொண்டுவரப்பட்டது. இச்சட்டமானது, ஒவ்வோர் ஆண்டின் மே 18ஆம் திகதிக்கு முன்னர் வரும் ஒரு வார காலத்தை தமிழின அழிப்பு நினைவு வாரமாகவும், உலகில் நடைபெற்ற ஏனைய இன அழிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு வாரமாகவும் பிரகடனப்படுத்துகிறது.
இச்சட்டம் இன அழிப்பு நடைபெற்றதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் அதேவேளையில், இன அழிப்புக்குள்ளாகிய ஓர் இனம் தலைமுறைகளாக எதிர்கொள்ளும் உளவியல் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெறுவதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற இன அழிப்புகள் நடைபெறாமல் தடுக்கும் விழிப்புணர்வு செயற்பாடுளுக்கும் முன்னுரிமை வழங்குகிறது. எனவேதான், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரதும் பேராதரவைப் பெற்ற இச்சட்டத்துக்கு ஆரம்பம் முதலே அந்நிய நாடாகிய சிறிலங்காவின் தலையீடும் எதிர்ப்பும் இருந்துவருகிறது.
தமிழர்களை இன அழிப்புக்கு உள்ளாக்கியதைத் தொடர்ந்து மறுத்தும் உண்மையினைத் திரிபுபடுத்தியும் கூறிவரும் இன அழிப்பாளர்கள், இச்சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்ததுடன், சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சரும் கனடிய தூதரைச் சந்தித்து சிறிலங்காவின் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
தொடுக்கப்பட்ட வழக்கில் ஜூன் 28, 2022இல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அக்பர் அலி அவர்கள், மேற்படி சட்டம் சட்டரீதியானது என உறுதிப்படுத்தி வழக்கைத் தள்ளுபடி செய்திருந்த போதிலும், தமிழின அழிப்பாளர்கள் இத்தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளனர்.
எனவேதான், வரலாற்று ரீதியான இச்சட்டத்தைப் பாதுகாப்பதற்கென கனடிய தமிழர் தேசிய அவை, கனடா தமிழ் இளையோர் ஒன்றியம், கனடாத் தமிழ்க் கல்லூரி உட்பட்ட 60 தமிழர் அமைப்புகள் இவ்வழக்கில் இடையீடர்களாகத் தம்மையும் இணைத்துக்கொண்டு தமிழர் தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கு ‘கோல்ட்பிளாட் பாட்னர்ஸ்’ எனும் சட்ட நிறுவனத்தை அமர்த்தியுள்ளன. இதற்கான நிதியாக மே 31ஆம் திகதிக்குள் 100,000 டொலர்களைத் திரட்டுவதற்கு பின்வரும் இணையப்பக்கம் (https://www.gofundme.com/f/defend-bill-104) உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இச்சட்டத்தைப் பாதுகாப்பதற்கான எமது பங்களிப்பை நல்குவோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.