எழுதியவர் திசாராணி குணசேகர
(Colombo Telegraph இணையத்தில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரை. தமிழாக்கம் நக்கீரன்)
“நீங்கள் வைத்திருக்கும் பறவை இறந்துவிட்டதா அல்லது உயிருடன் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரிந்த விடயம் என்னவென்றால் அது உங்கள் கைகளில் உள்ளது. அது உங்கள் கைகளில் உள்ளது ….. ” ரோனி மோரிசன் (Tony Morrison (Nobel Acceptance Speech) நோபல் பரிசு பெற்ற போது ஆற்றிய ஏற்புரை)
இராசபக்சாக்கள் அவசரத்தில் உள்ளனர். அவர்கள் ஒரு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். மற்றும் ஒரு நாட்டை மீள உருவாக்க வேண்டும். தற்போது, இரு இடங்களுக்கும் செல்லும் பாதை ஒரு நெடுஞ்சாலை போல அகலமாகவும் தெளிவாகவும் தெரிகிறது. ஆயினும், அந்த இணக்கமான மென்மையின் அடியில் பதுங்கியிருப்பது கட்டமைப்பு ரீதியான முரட்டுத்தனமாகும். இது இறுதியில் இராசபக்ச திட்டத்தை தாமதப்படுத்தி கடைசியில் அதனை வெளிக்காட்டும் சாத்தியம் காணப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுசன பெரமுன (SLPP) ஏற்படுத்திய பூகம்பமே பேரலை ஆக மாறி ஐக்கிய தேசியக் கட்சிக்குள் (UNP) பிளவுகளை ஏற்படுத்தியது. யூஎன்பி பிளவுபடாமல் இருந்திருந்தால், இராசபக்சாக்கள் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் வென்றிருப்பார்கள்.
2019 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலுக்கும் 2020 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையில் இராசபக்ச ஆதரவுத் தளம் அதிகரிக்கவில்லை. உண்மையில் இது 70,500 க்கும் மேற்பட்ட வாக்குகளால் குறைந்துள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளைப் பார்க்கும்போது, எண்ணிக்கையிலும் அரசியல் ரீதியாகவும் இது மிகச்சிறியதாகத் தோன்றும். ஆனால் தேர்தலின் போக்கு முக்கியமானது – கோட்டாபய இராசபக்சவின் ஏழு மாத ஆட்சி இராசபக்சவின் ஆதரவு தளத்தை விரிவாக்குவதில் வெற்றிபெறவில்லை.
மாவட்ட அளவிலான ஆய்வு ஒரு தெளிவான படத்தை வழங்குகிறது. 2019 மற்றும் 2020 க்கு இடையில் பதினொரு மாவட்டங்களில் சிறிலங்கா பொது சன பெரமுன வாக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது. கொழும்பு (53,110), கம்பாஹா (47,974), காலி (35,709), களுத்துறை (34.221), மாத்தறை (22.264), புத்தளம் (10,194), அம்பாறை (9,046), மட்டக்களப்பு 5,044), குருநாகல் (2313), இரத்னபுரி (1,376), மொனராகலா (629) ஆகியவையே அந்த மாவட்டங்களாகும்.
சிறிலங்கா பெருமுனைக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்த 11 மாவட்டங்களில், நுவரேலியா (55,261), பொலநறுவை (33,507), மற்றும் பதுளை (33,327) ஆகிய மூன்றும் குறிப்பிடத்தக்கனவாகும்.
ஆதாயங்கள் மற்றும் இழப்புகளில் காணப்படும் முறை ஒரு பாடத்தை அறிவுறுத்துகிறது. இராசபச்சாக்களின் இழப்புகளில் பெரும்பாலானவை சிங்கள-பவுத்த பெரும்பான்மை மாவட்டங்களில் காணப்பட்டன. சிறிலங்கா பொதுசன பெருமுன மற்றக் கட்சிகளுடன் உருவாக்கிய கூட்டணியின் விளைவாக அதற்கு முக்கிய இலாபங்கள் கிடைத்தன – குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (நுவரேலியா மற்றும் பதுளை) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விருப்பு வாக்குப் பட்டியலில் முதலிடம் பிடித்த பொலநறுவை).
ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட உடைசல் பொதுசன பெரமுனையின் தேசிய வாக்கு இழப்பை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையாக மாற்ற முடிந்தது. இதையிட்டு இரணில் விக்ரமசிங்காவோ அல்லது சஜித் பிரேமதாசாவோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு இடையிலான தலைமைப் போட்டி இராசபக்சாக்களைத் தவிர வேறு எவரையும் பலப்படுத்தவில்லை. இது இராசபக்சாக்களுக்குத் தெரியும். அதுவும் – பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் நகர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த தலைதெறிக்க ஓடுகிறார்கள். மேலும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வரை அவர்கள் ஓடுகிற வேகத்தை நிறுத்த மாட்டார்கள்.
இலங்கையைக் குடும்ப அரசாக மாற்றுவதற்கான பயணத்தின் முதல் படி 19 வது சட்ட திருத்தத்தை ஒழிப்பதாகும். இது கோட்டாபய இராசபக்சவின் கைகளில் அதிக அதிகாரத்தை குவிக்கும். மேலும் பசில் இராசபக்சவை தேசிய பட்டியல் வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய உதவும் (2007 ல் அவர் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நுழைந்தது அப்படித்தான்). சுயாதீன ஆணையங்களைத் தடுப்பதன் மூலம், நீதித்துறையை நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதிக்கு அடிபணியச் செய்ய முடியும், மேலும் நாடு அப்பட்டமாக சுதந்திரமற்ற, நியாயமற்ற மற்றும் வன்முறைத் தேர்தல்களுக்கு திரும்பக்கூடும்.
19 ஆவது திருத்தத்தை நீக்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், எதிர்க்கட்சிகள் அந்த நகர்வுக்கு இலவச அனுமதி கொடுத்தால் அது ஆபத்தில் முடியும். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட வேண்டும். திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கான வாக்குப்பலம் அதற்கு இல்லை, ஆனால் அதை அம்பலப்படுத்தவும் மதிப்பிழக்கவும் அதற்கு வல்லமை இருக்கிறது. இந்தத் திருத்தம் சாத்தியமான அளவுக்கு மேலாக அத்துமீறலகளைக் கொண்டிருக்கலாம். அதையிட்டு நீதித்துறையிடம் முறையிடலாம். மிக முக்கியமாக, 19 வது திருத்தத்தின் ஆதாயங்களைப் பாதுகாப்பது என்பது ஒரு முழக்கம், முழு எதிர்ப்பையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு குறிக்கோள். இராசபக்ச ஆட்சியைத் தோற்கடிக்க நீண்ட, கடினமான ஆனால் அவசியமான போராட்டத்தைத் தொடங்க வேண்டிய இடம் இது.
19 ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பதில் உற்சாகமான சட்ட, அரசியல் மற்றும் பரப்புரை போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தனிப்பட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் தளங்களை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் முடியும். ஐக்கிய மக்கள் சக்தி முக்கிய எதிர்க்கட்சியாகச் செயல்படுவதற்கான திறனை எண்பிப்பதற்கான ஒரு சோதனை இதுவாகும். தேசிய மக்கள் சக்தி யைப் பொறுத்தவரை, அது சனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஒரு தேசிய போராட்டத்தை வழிநடத்த முடியும் என்பதை இராசபக்ச – விரோத இலங்கையர்களுக்குக் காட்ட ஒரு வாய்ப்பு ஆகும். வெளியேற்றப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, வெறுப்பினால் தங்கள் வாக்குகளைப் போடாமல் ஒதுங்கியவர்களை அல்லது (வாக்குகளை) பழுதாக்கிய வாக்காளர்களை மீண்டும் வென்றெடுப்பதற்கு கடைசி வாய்ப்பை இது வழங்குகிறது.
13 ஆவது திருத்தம், புதிய அரசியலமைப்பு மற்றும் வாக்கெடுப்பு 19 வது திருத்தத்தை நீக்கினால் சனாதிபதியை 2010 மற்றும் 2015 க்கு இடையில் இருந்ததைப் போலவே சக்திவாய்ந்ததாக ஆக்கும், ஆனால் இராசபக்ச சகோதரர்களது நோக்கங்களுக்கு இது போதாது. பழைய அரசியலமைப்பு இரண்டு காரணங்களுக்காக நீக்கப்பட வேண்டும். ஒன்று, ஒரு புதிய தேர்தல் முறையின் தேவை, இது இராபச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் பாரிய பெரும்பான்மையைப் பெற உதவும், அவர்களின் ஆதரவுத் தளம் அரைவாசிக்கு கீழே குறைந்துவிட்ட பின்னரும் கூட. மற்றது 13 ஆவது திருத்தத்தை நீக்கிவிட வேண்டிய அவசியம்.
தற்போதுள்ள அரசியலமைப்பு புதிய அரசியலமைப்பால் மாற்றப்பட்டால், 13 ஆவது திருத்தம் இருக்காது. அது போல 1972 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி (UF) அரசாங்கம் இதைத்தான் செய்தது. 1966 இல் பிரிவி கவுன்சில் சோல்பரி அரசியலமைப்பின் 29 வது பிரிவு சிறுபான்மையினரது உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது எனத் தீர்ப்பளித்ததால், ஐக்கிய முன்னணி அரசு நாடாளுமன்றத்தை அரசியல் நிருணய சபையாக மாற்றி ஒரு புதிய அரசியல் யாப்பை இயற்றியது. இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் கே.எம். டி சில்வா சுட்டிக்காட்டியபடி, “சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை, இலங்கைத் தீவின் தீவிர சிங்கள – பவுத்த ஆதிக்கத்தின் தடையற்ற வெளிப்பாட்டாக இருந்தது. இதனால் ஒரு அரசியல் நிருணய சபையின் மூலம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு போதுமான நியாயமாக இருந்தது” ( சிறிலங்கா/ இலங்கை – புதிய குடியரசு அரசியலமைப்பு).
கோட்டாபய – மகிந்தா அரசாங்கம் வெளிப்படையான சிங்கள-பவுத்த மேலாதிக்கவாத அரசாங்கம் ஆகும். ஆனால் 13 ஆவது திருத்தத்தை ஒழித்துக் கட்ட விரும்புவதற்கு அதுமட்டும் ஒரு காரணம் அல்ல. அவர்கள் 13 ஆவது திருத்தத்திலிருந்து விடுபட விரும்புவதற்குக் காரணம் அது அவர்களின் அதிகாரக் குவிப்பு மற்றும் முறைகேட்டுக்கு ஒரு தடையாகும்.
13 ஆவது திருத்தத்தின் சனநாயக மயமாக்கல் அம்சங்கள் பொதுவாகக் கவனிக்கப்படுவதில்லை, அது இராசபக்சர்களால் மட்டும் அல்ல. 13 ஆவது திருத்தம் தான், 2012 ஆம் ஆண்டில் இராசபக்சாக்கள் ஒரு சிறிலங்கா நிருவாகத்தில் இதுவரை முயற்சிக்கப்படாத மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் அநீதியான சட்டத்தை இயற்றுவதைத் தடுத்தது – புனித பகுதிகள் சட்டம் என்று பிரபலமாக அறியப்பட்ட நகர மற்றும் நாடு திட்டமிடல் (திருத்தம்) மசோதா.
இந்தச் சட்டம் 4 பக்கங்கள் மற்றும் 8 உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. அது இராசபக்சாக்களுக்கு ஒவ்வொரு அங்குல தனியார் நிலத்தின் மீதும் முழுமையான கட்டுப்பாட்டை வழங்குவதற்காக வரையப்பட்டது. எந்தவொரு நிலத்தையும் கட்டிடத்தையும் கையகப்படுத்த புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சருக்கு அதிகாரம் அளித்தது – ஒரு பாதுகாப்புப் பகுதி, வீணாவதைத் தடுத்துப் பேணுதல் பகுதி, ஒரு கட்டடக்கலை அல்லது வரலாற்றுப் பகுதி அல்லது ஒரு புனித பகுதி. அதற்குத் தேவையானது ஒரு சிட்டை மற்றும் வர்த்தமானி அறிவிப்பு மட்டுமே. பாதிக்கப்பட்டவருக்கு சட்டத்தினால் எந்த உதவியும் இல்லை.
நாடாளுமன்றத்தில் இராசபக்சாக்களுக்குப் பெரும்பான்மை இருந்தது, அதனால் அந்தச் சட்டம் முடிந்த முடிவு என நினைத்தார்கள். ஆனால் கொள்கைக்கான மாற்று மையம் (CPA) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தலைமையிலான ஆயம் (bench) இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்தது. 13 வது திருத்தத்தின் கீழ், காணி ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயமாகும். 13 ஆவது திருத்தம் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் குறித்த சட்டத்திற்கு அனைத்து மாகாண சபைகளின் ஒப்புதலும் தேவை என்று தெளிவாகக் கூறுகிறது.
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியபோது இந்தச் சட்டம் ஏற்கனவே நாடாளுமன்ற உத்தரவுத் தாளில் இருந்தது. அரசாங்கம் இந்தச் சட்டத்தை மாகாண சபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பியது. இது ஒரு சாதாரண சம்பிரதாயமாகக் காணப்பட்டது, ஏனெனில் வடக்கு மாகாண சபை நீங்கலாக மற்ற அனைத்து சபைகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (UPFA) கட்டுப்பாட்டில் இருந்தன.
வட மத்திய மாகாண சபை இந்தச் சட்டம் குறித்து விவாதிக்க அவகாசம் தேவை எனச் சொன்னது. கிழக்கு மாகாண சபை அதனை ஏற்க மறுத்துவிட்டது. இறுதியில் இராசபக்சாக்களுக்கு இந்தச் சட்ட முன்மொழிவை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
13 வது திருத்தத்தின் சர்வாதிகார எதிர்ப்பு அம்சங்களை இராசபக்சாக்கள் கசப்பான அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டவர்கள். புதிய அரசியலமைப்பு 13 ஆவது திருத்தத்தின் இறப்பை உறுதி செய்யும். இராசபக்சாக்கள் அதைக் கொல்ல மேலதிக முயற்சி செய்யத் தேவையில்லை. இந்தியாவை சமாதானப்படுத்தவும் தமிழர் நட்பு நாடுகளுக்கு ஒரு பொய்க் கவசமாக பிடித்துக் கொள்வதற்கும் இராசபக்சாக்கள் மாகாண சபை முறையை வெறும் ஓடாக வைத்திருப்பார்கள். (ஒரு புதிய அரசியலமைப்பின் மற்றொரு நன்மை, புனித பகுதிகள் சட்டம் போன்ற ஆசைத் திட்டங்களை அதில் எழுதும் திறன் ஆகும்).
அரசியலமைப்பு ரீதியாக, பொதுவாக்கெடுப்பு இல்லாமல் புதிய அரசியலமைப்பை இயற்ற முடியாது. அந்த இடத்தில்தான் இராசபக்சாக்கள் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்க முடியும். ஒன்றுபட்ட எதிர்க்கட்சி பொதுவாக்கெடுப்பை இராசபக்சாக்களுக்கு முடிந்தவரை ஒறுப்பாக மாற்ற முடியும். இது இராசபக்சாக்களுக்கு விரோதமாக இருக்கும் 47% மக்களை ஒன்று திரட்டுவதற்கும் பயன்படுத்தலாம். மேலும் இராசபக்சாக்களை நசுக்குவதற்கும் அடித்து வீழ்த்துவதற்கும் பயன்படுத்தலாம். இவை (இராசபக்ச)ஆட்சியின் நீண்ட ஆயுளைப் பாதிக்கச் செய்யும்.
2025 மற்றொரு 2015 ஆக மாறலாம். மற்றும் பயணத்தின் முதல் படி 19 ஆவது திருத்தத்தை பாதுகாக்க நம் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்வதாகும்.
எதிர்க்கட்சி எதிர்க்குமா?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய நாள், உதவிக் கண்காணிப்பாளர் சுகத் மோகன் மென்டிஸ் கம்பகா நீதிபதி நீதிமன்றத்தில் ஒரு வாய்மூல அறிக்கையை வெளியிட்டார், கொழும்பு குற்றவியல் பிரிவு (CCD) முன்னாள் புலனாய்வுத்துறை (CID) இயக்குனர் சனி அபயசேகராவுக்கு எதிராகச் சாட்சியங்களைத் தயாரிக்க அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டினார். அவர் ஒத்துழைக்காவிட்டால் அவரைச் சிறையில் அடைக்கப்போவதாக குற்றவியல் பிரிவு அச்சுறுத்தியது என்று அவர் கூறினார்.
துணைக் கண்காணிப்பாளர் மென்டிஸ் தன்னையும் சீருடையும் அவமதிக்க மறுத்துவிட்டார். அதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
சில வாரங்களுக்கு முன்பு, கொழும்பு நீதிபதி இரங்கா திசாநாயக்க திறந்த நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட வழக்கறிஞர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஆதாரங்களைத் தயாரிக்க முயன்றது என்பதை வெளிப்படுத்தினார்.
குற்றவியல் புலானய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவு அதிகாரிகள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தியோகபூர்வ விசாரணை எதுவும் தொடங்கப்படவில்லை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம் ஷானி அபயசேகரா மற்றும் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா இருவரும் அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட சூனிய வேட்டையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆச்சரியம் எதிர்க்கட்சியின் மவுனமும் மற்றும் செயலற்ற தன்மையும்.
இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால், புதிய எதிர்க்கட்சி இந்தக் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி விவாதத்தைக் கோருகுமா?
வடக்கில், நில அபகரிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில், ஓகஸ்ட் 20 ஆம் தேதி, கடற்படை கண்காணிப்புப் பணிக்காக மீனவருக்குச் சொந்தமான 15 பரப்பு நிலத்தைக் கடற்படை கைப்பற்ற முயன்றது. குடிமக்களது எதிர்ப்பு இப்போதைக்கு இந்த அபகரிப்பைத் தடுத்து நிறுத்தியது, ஆனால் புதிய அரசியலமைப்பு வந்தவுடன், புனிதப் பகுதிகள் சட்டத்தின் விதிகள் அதில் எழுதப்பட்டால், நாட்டில் எங்கும் இதுபோன்ற நில அபகரிப்பு என்பது முற்றிலும் சட்டப்பூர்வமாக மாறிவிடும்.
அந்தப் பேரழிவு ஏற்படும் வரை எதிர்க்கட்சிகள் தமது கைவிரல்களைத் திருகிக்கொண்டு இருக்கப் போகிறதா?
சனாதிபதி கோட்டாபய தனது சங்க ஆலோசனைக் குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் இராசாங்க அமைச்சுக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார். இது சில அமைச்சுகளின் நகைச்சுவையான தன்மையை விளக்குகிறது. புத்த சாசன, மதம் மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் கீழ் கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாமிய மத விவகாரங்கள் சிங்கள பவுத்த அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராசாங்க அமைச்சர்களின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய விடயம் அமைச்சரவை அமைச்சகத்திலிருந்து இராசாங்க அமைச்சகத்திற்கு தரமிறக்கப்பட்டு கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் அதன் முக்கியத்துவம் குறைகிறது. அதற்குப் பொறுப்பான அமைச்சர் ஒரு மேன்மையானவர் அல்லர். எந்தவொரு அமைச்சுப் பகுதியையும் கையாள்வதற்கான தெளிவான தகுதி இல்லாதவர். தரமிறக்கப்பட்ட பிற அமைச்சுளில் வறுமை ஒழிப்பு (சமுர்த்தி) மற்றும் சமூக மேம்பாடு ஆகியவை அடங்கும். தகவல் தொழில்நுட்பம் இல்லாத நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் தொல்பொருள்த் திணைக்களம் உட்பட 23 நிறுவனங்களை அதன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்துறை விவகாரங்களும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டு மாவட்டம் மற்றும் பிரதேச செயலகங்களை (அத்துடன் காவல்துறை) கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய வெளியுறவு செயலாளர் ஓய்வு பெற்ற இராணுவ மனிதர் ஆவர்.
இராணுவமயமாக்கல் வேகம் பிடித்துள்ளது. ஆனால் இது இராசபச்ச குணாதிசயங்களைக் கொண்ட இராணுவமயமாக்கல் ஆகும். சிங்கள – பவுத்த மதகுருமார்கள் கருவியாகப் பயன்படுத்தப்படுவதைப் போலவே இராணுவமும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் இராசபக்சாக்களே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
2005 – 2015 இடையிலான காலகட்டத்தில், இராசபக்சாக்கள் பல்வேறு ஒத்துழைப்பு / போட்டி முறையைப் பின்பற்றித் தங்களது சொந்த அதிகார மையங்களை உருவாக்கத் தொடங்கினர். நடந்து முடிந்த தேர்தலுக்குப் பின்னர் சகோதரங்கள் மற்றும் மகன்களிடையே அரசைப் பிரிக்கும் செயல்முறை மீண்டும் தொடங்கியுள்ளது. கோட்டாபய இராசபக்ச பாதுகாப்பைக் கட்டுப்படுத்துகிறார். பொருளாதாரம் நடைமுறையில் பசில் இராசபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ளது, இது 19 ஆவது திருத்தம் முடிந்தவுடன் முறைப்படுத்தப்படும். முன்னர் தருண்யதா ஹெடக் மற்றும் நில் பலகாயா ஆகியோரை மட்டுமே கொண்டிருந்த நாமல் இராசபக்ச இப்போது அதிகாரப்பூர்வமாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். சாமல் மற்றும் சஷீந்திர இராசபக்ச ஆகியோர் விவசாயத்தை கட்டுப்படுத்துகிறார்கள். மாத்தறை மாவட்ட மேம்பாட்டுப் பொறுப்பில் நிபுனா இரணவக்கா உள்ளார். குடும்பத்தின் பிடி முன்னை விட நீண்டும் பரந்தும் விரிந்துள்ளன.
இராசபச்சாக்களுக்கு அவர்களின் முன்னுரிமை எவை என்பது தெரியும். 19 ஆவது திருத்தத்திலிருந்து விடுபடுவது இலங்கையை ஒரு குடும்ப அரசாக மாற்றுவதற்குத் தேவையான முன்நிபந்தனையாகும்.
அந்த நடவடிக்கையை எதிர்ப்பது பாராளுமன்ற எதிர்ப்பை மட்டுமல்லாமல், கரு ஜெயசூரியா, மங்கள சமரவீர, சுனில் ஹண்டுநெத்தி மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா, தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் 47% இலங்கையர்களையும் உள்ளடக்கிய பரந்த கூட்டணியை உருவாக்க உதவும். 2019 இல் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தாவர்கள் அவர் நாங்கள் விரும்பிய சனாதிபதியாக இருந்ததால் அல்ல, மாறாக கோட்டாபய நாங்கள் விரும்பாத சனாதிபதியாக இருந்ததால்.
இராசபக்ச பேரலையைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் நாங்கள் ஒரு சுனாமி சுவரை எழுப்ப வேண்டும். அதற்கான வேலை 19 ஆவது திருத்தத்தைப் பாதுகாத்து 20 வது திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் தொடங்க வேண்டும்.