அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச சமுகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்
கூட்டமைப்பின் தலைவருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது.
நாங்கள் தேர்தல் முடிவுகள் குறித்து குறிப்பாக வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்தை நீக்குவது அல்லது அதில்மாற்றங்களை மேற்கொள்வது குறித்த எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
13வது மற்றும் 19வது திருத்தத்தங்களில் அவர்கள் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் என்னவென்பது எங்களுக்கு தெரியாது . இந்த விடயம் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனத்தை செலுத்தவேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால தேசியப்பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகள் காணப்படவில்லை முன்னைய அரசாங்கம் கூட தனக்குள் ஏற்பட்ட பிளவினால் தீர்வை முன்வைக்க தவறிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா நோர்வே இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது. அரசாங்கம் அவர்களின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளை தோற்கடித்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை என அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.