கலாநிதி பால சிவகடாட்சம் தெரிவிப்பு
தெய்வப் புலவர் திருவள்ளுவரின் சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் மாறாக. திருக்குறள் என்னும் நீதி நூலை ஆவரைத் தத்தமது மதநம்பிக்கைகளுக்கு ஆதரவான ஒருவராகக் காட்டிக்கொள்வதில் பல்வேறு மதங்களைச் சார்ந்தோரும் இன்று ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின் நீ மொட்டை அடிக்கவும் வேண்டாம் தாடி வளர்க்கவும் வேன்டாம். நல்லவனாக வாழ்ந்தாலே போதும் என்று கூறிய வள்ளுவருக்கு நீண்டதாடியும் சடைமுடியும் வைத்து அலங்கரித்ததுடன் நில்லாது காவி உடையும் திருநீற்றுக் குறிகளும் சூட்டி அழகுபார்க்க ஆசைப்படுகிறார்கள் சிலர். வள்ளுவரை மழித்த தலையிடைய சமண, பௌத்த துறவியாகவோ சடாமுடியும் கமண்டலமுமாகக் காட்சிதரும் ஒரு சைவத்துறவியாகவோ கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார் கனடா வாழ் சிந்தனையாளரும் பன்முகப் பார்வை கொண்ட எழுத்தாளருமான கலாநிதி பால சிவகடாட்சம் அவர்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ம் திகதி கனடா ஸ்காபுறோ- ஒன்றாரியோ- தமிழ் இசைக் கலாமன்றத்தின் கலாமண்டபத்தில் ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெருமானைக் கொண்டாடும் அற்புத விழா எடுக்கப்பெற்றது.
அன்றைய தினம் திருவள்ளுவப் பெருந்தகையின் .ஒளி’ வீசும் திருவுருவப் படம் ஒன்றும் திறந்து வைக்கப்பெற்றது.
விழாவின் ஆரம்பத்தில் ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் அவர்கள் பக்கவாத்தியக் கலைஞர்கள் சகிதம் திருக்குறளை இசையோடு பாடி சமர்ப்பணம் செய்த நிகழ்வு சபையோரை மெய்சிலிர்க்க வைத்தது.
மேற்படி விழாவில் பேராசிரியர் ஜொசப் சந்திரகாந்தன் மற்றும் கலாநிதி பால சிவகடாட்சம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி பால சிவகடாட்சம் தனது உரையில் பின்வருமாறு தெரிவித்தார்.
” காமத்துப்பால் உள்ளிட்ட திருக்குறள் முழுவதையும் ஆழ்ந்து படித்த ஒருவருக்கு வள்ளுவரை முற்றும் துறந்த முனிவராக ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். இல்லறவாழ்க்கையை முழுமையாக அனுபவித்து இல்லறத்தாருக்குரிய கடமைகள் அனைத்தையும் செய்துமுடித்தபின்னர் இறுதிக்காலத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ஒருவராகவே வள்ளுவரை இனம்காண முடிகிறது.
வள்ளுவர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறிவதைவிட அவர் எந்தச் சமயத்தைச் சேராதவர் என்று கண்டறிவது இலகுவானது. ஒன்று இரண்டு குறள்களை வைத்துகொண்டு வள்ளுவரின் மதத்தைத் தேடுவதில் அர்த்தம் இல்லை. திருக்குறளை முழுமையாக நோக்கும்போது எந்த ஒரு மதத்துக்குள்ளும் அடக்கமுடியாதவராகவும், மனிதன் என்பவன் இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் திடமான ஒரு தெளிவை உடையவராக வும், வள்ளுவரை நாம் தரிசிக்க முடிகிறது.
அனைத்து உயிர்களிடத்தும் அன்புகாட்டவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் மதம், அதாவது கொள்கை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவர் வள்ளுவர். இந்திய மரபில் உள்ள பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர குலமுறை வகைப்படுத்தலை அவர் ஏற்கவில்லை.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொடொழுகலான்
பிறப்பால் ஒருவர் அந்தணராகிவிடமுடியாது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவனே அந்தணன். என்பதை வலியுறுத்துகிறார் வள்ளுவர். அந்தவகையில் வள்ளுவரும் அந்தணர் என்னும் அடையாளத்துக்கு உரியவர் ஆகிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
திருக்குறள் 972
எல்லாப் பிறப்புக்களும் சமத்துவம் உடையன. அவரவர் செய்யும் தொழில்தான் வேறுபடுகின்றது என்று உறுதிபடக் கூறுகின்றார் வள்ளுவர்.
யாகம் அல்லது வேள்வி செய்வது வைதீக சமயத்தவரின் மிகமுக்கியமான சடங்காகக் கருதப்படுவது. ஆயிரம் வேள்விகளைச் செய்துமுடிக்கும் அரசன் இந்திரனுக்கு ஒப்பான பதவியை அடைகின்றான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் வேள்விகள் செய்வதிலும் ஓர் உயிரைக் கொன்று உண்ணாமல் இருத்தல் மேலானது என்கிறார் வள்ளுவர்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று திருக்குறள் 251
கடவுளின் பெயரால் ஆடு, மாடு, கோழி என்பவற்றைக் கொன்று பலி கொடுப்பது, படையல் வைப்பது, பகிர்ந்துண்பது போன்ற வழக்கங்கள் பண்டுதொட்டுப் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன என்பதை மறுக்கமுடியாது. சங்ககாலத் தமிழர் வாழ்விலும்கூட வேலன் என்னும் தெய்வத்துக்கு ஆடு வெட்டிப் பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. கிராமப்புறங்களில் சிறுதெய்வ வழிபாட்டு நிகழ்வுகளில் கடாவெட்டிப் படையலிடும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. யூதமதம், கிறீத்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் உயிர்ப்பலி கொடுப்பதைத் தடைசெய்ததில்லை. இன்றும் விலங்குகளைக் கொன்று உண்பதைத் தடைசெய்வதில்லை.
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
திருக்குறள் 252
தன்னுடைய சதையை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களின் சதையை உண்பவனிடம் கருணையை எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? என்று மாமிசம் உண்பவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார் வள்ளுவர் கொல்லாமையை வலியுறுத்திய அளவுக்குப் பௌத்தம் புலால் மறுப்பை வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. மாமிசத்தை மட்டுமல்லாது விலங்குகளிடம் இருந்து பெறப்படும் பால், தயிர், மோர், நெய் என்பவற்றுடன் வண்டுகளின் சேமிப்பான தேனையும்கூட மருந்துக்கும் அனுமதிக்காதவர்கள் சமணர்கள்.
புலால் உண்பது குறித்துப் பௌத்தனாகிய மொக்கலன் என்பவனுக்கும் சமணப்பெண்ணான நீலகேசிக்கும் இடையிலான நீண்டதொரு விவாதம் சமண காவியங்களுள் ஒன்றான நீலகேசியில் இடம் பெறுகின்றது.
“கொல்லுதல் பாவச்செயல் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், மாமிசம் உண்பதைப் பாவம் என்று சமணர் எப்படிக்கூறமுடியும்? தான் கொல்லாத ஒன்றைத் தின்பவனுக்குப் பாவம் ஏது?” என்று மொக்கலன் என்னும் பௌத்தன் கேட்கிறான். “தீமையை நேரடியாகச் செய்வது மட்டுமன்று, தீமையைச் செய்யத் தூண்டுவதும் பாவமே” என்கிறாள் சமணப்பெண்ணான நீலகேசி. இவளது வாதம் வள்ளுவரின் மற்றுமொரு குறளை நினைவூட்டுகின்றது.
உண்பதற்காக உலகிலே எவரும் மாமிசம் வாங்காவிடின் அதனை விற்றுப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கொலைத்தொழில் செய்வோரும் இருக்கமாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.
தினற்பொருட்டாற் கொள்ளாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்
திருக்குறள் 256
நீலகேசி என்னும் சமணக் காவியத்தில் தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள் என்னும் மூன்று தமிழ்நூல்கள் மட்டுமே எடுத்தாளப் படுகின்றன. நாலடியார் சமணமுனிவர்கள் ஆக்கிய அறநூல் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறே தொல்காப்பியமும் திருக்குறளும் சமணரால் இயற்றப்பட்டவை என்று கொள்ள இடமுண்டு என்கிறார் நீலகேசியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட பேராசிரியர் ஆ. சக்கரவர்த்தி அவர்கள். நீலகேசிக்கு உரை எழுதிய வாமனமுனிவர் (14ஆம் நூற்றாண்டு) வள்ளுவரை எம்மவர் (“எம் ஒத்து”) என்கிறார்.
வள்ளுவரைச் சமணர்கள் தமக்கு ஒத்த கருத்தை உடையவர் என்று கூறும்போது அதற்கு அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் மிகப்பலம் வாய்ந்தனவாக உள்ளன என்பதனை அவதானிக்கமுடியும். அதற்கும் ஒருபடி மேலே சென்று வள்ளுவரை ஒரு சமண ஆச்சாரியராக அடையாளப்படுத்துகின்றனர் சமணமதப் பெரியோர்கள்.
திருக்குறளை இயற்றியவர் ஸ்ரீ குந்த குந்த ஆச்சாரியார் என்று சமண சமயத்தவர் கூறுகின்றனர். இவர் கி. மு. 52 முதல் கி.பி. 44 வரை வாழ்ந்தவராக அறியப்படுகின்றார். இவருக்குப் பத்மநந்தி, ஏலாசாரியர் என்னும் பெயர்களும் உண்டு என்று கூறும் சமணர் இவர் பிராகிருத மொழியில் பலநூல்களை எழுதியுள்ளபோதிலும் தமிழில் திருக்குறள் என்னும் ஒரு நூலை மட்டுமே எழுதியுள்ளார் என்றும் கூறுகின்றார்கள்.
திருக்குறளுக்கான ஜைன உரையுடன் கூடிய திருக்குறள் ஓலைச் சுவடியொன்றில் ‘ஏலாசிரியரால் சிருஷ்டிக்கப்பட்ட திருக்குறள்’ என்று காணப்படுவதாக அறியமுடிகின்றது. இந்த ஏலாசிரியர் என்னும் பெயரை நோக்குமிடத்து மரபுக்கதைகள் சிலவற்றில் வள்ளுவரின் நண்பராகக் கூறப்படும் எலேலசிங்கன் பெயர் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.
குந்த குந்த ஆச்சாரியாரின் முதன்மைச் சீடரான திருவுள்ளம் நயினார் என்பார் தமது குரு கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் திருக்குறளை அப்போதிருந்த மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றுவித்தார் என்று கூறப்படுகின்றது. திருவுள்ளம் நயினாரே காலப்போக்கில் திருவள்ளுவர் என்றும் திருவள்ளுவ நாயனார் என்றும் அறியப்பட்டார் என்கிறார்கள் சமணர்கள்.
திருவுள்ளம் நயினார் வானப்பிரஸ்த ஆசிரமத்தை மேற்கொண்ட ஒருவராக அறியப்படுகின்றார். வானப்பிரஸ்தம் என்பது மணம் முடித்து மனைவி மக்களுடன் வாழ்ந்தபின்னர் இல்லறத்தினின்றும் விலகிக் காடுசென்று முற்றும் துறந்த முனிவர் ஒருவருக்குப் பணிவிடை செய்து அவரிடமிருந்து தத்துவங்களைக் கற்றுக்கொள்ளும் துறவு வாழ்க்கையாகும். இல்வாழ்க்கை, நன்மக்கட்பேறு, காதலின்பம் பற்றியெல்லாம் அழகுற எடுத்துரைக்கும் திருக்குறளின் ஆக்கத்தில் திருவுள்ளம் நயினாரின் பங்கு அதிகம் இருத்தல் கூடுமோ என்னும் ஓர் ஐயம் எழுகின்றது.
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமேலழகர் -திருமலையர்
மல்லன் பரிப்பெருமான் காலிங்கர் வள்ளுவர் நூற்(கு)
எல்லையுரை செய்தார் இவர்
திருக்குறளுக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர்களுள் முதலாவதாகக் கூறப்படுபவர் தருமர். இவரது உரை ஜைனமதச் சார்புடையது என்பதைத் தமக்குக் கிடைத்த ஓரிரு சுவடிகளை ஆராய்ந்து அறியத்தந்தார் பேராசிரியர் அ. சக்கரவர்த்தி அவர்கள். கவிராஜபண்டிதர் என்பவரின் ஜைனச் சார்புத் திருக்குறள் உரையை ஆங்கில முன்னுரையுடன்1949ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டவர் இவர்.
தருமரின் திருக்குறள் உரை இன்று முற்றாக மறைந்துவிட்டது. சைவநாயன்மார்களுள் ஒருவரான அப்பரடிகள் சமணமதத்தைத் தழுவிப் பின்னர் சைவத்துக்குத் திரும்பியவர். இவர் சமணராக இருந்த காலத்தில் தருமசேனர் என்னும் பெயரைச் சூடியிருந்தார். திருக்குறளுக்கு உரை எழுதிய தருமர் இவராயிருத்தல் கூடுமோ என்னும் ஓர் ஐயத்தை ஒருசில ஆதாரங்களின் அடிப்படையில் எழுப்புகின்றார் தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடிதுறையின் முன்னாள் பேராசிரியர் கே. எம். வேங்கடராமையா அவர்கள்.” என்றார்.
பல்வேறு துறைசார்ந்தவர்கள் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வு ஒரு அற்புதமான தமிழ் சார்ந்த விழாவாக பார்க்கப்பட்டது. அத்துடன் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு ‘மகுடம்’ சூட்டும் விழாவாக ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தினர் இதை நடத்திக்காட்டினர் என்றால் அது மிகையாகாது. இந்தவகையில் ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின் தலைவர் சட்டத்தரணி தம்பையா ஶ்ரீபதி மற்றும் அங்கத்தவர்கள் மற்றும் இந்த விழாவிற்காக உழைத்த புனிதவேல் அவர்கள் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
செய்தியும் படங்களும் சத்தியன் மற்றும் சிவா