(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்-பகுதி 15)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
ஒரு குழந்தை தனது தாய் தந்தையரின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வளர்ந்து சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக தனது கடமைகளைச் செய்து வாழவேண்டும் என்பதைத் தான் நாகரிகடைந்த எந்த ஒரு சமூகமும் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்தப்பாக்கியம் உலகில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. ஒன்றில் குழந்தைகள் தமது குடும்பத்தினாலேயே துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகிறார்கள். அல்லது வெளிநபர்களால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் வெளிச்சத்திற்கு வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் குற்றவாளிகளாக பெரும்பாலும் அவர்களது குடும்ப உறவினர்களோ அல்லது நெருங்கிய நண்பர்களாகவோ தான் இருந்துள்ளனர். அல்லது யார்யாரெல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ அவர்களே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்களும் மதபோதகர்களும் இதில் உள்ளடக்கம். உலகில் இடம் பெற்ற வன்முறைகளின் போதும் மோதல்களின் போதும் ஆக்கிரமிப்புகளின் போதும் சிறுவர்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு பதிவாகிய சம்பவங்கள் ஏராளம்.
உலகில் இடம் பெற்ற இரண்டு சம்பவங்களை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இவ்வாறு நான் எழுதுவதனால் இந்த இரண்டு சம்பவங்கள் தான் முக்கியமானவை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. எனது கவனத்திற்கு வந்த சம்பவங்கள் என்றவகையிலும் முதலாவது சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துக் பெற்ற அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டே இங்கு குறிப்பிடுகிறேன். முதலாவது அவுஸ்திரேலியாவின் பழங்குடியினரான அபர்ஜினோக்கள் மற்றும் டொரஸ் நீரிணைத் தீவுக்கூட்ட மக்களின் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு அவர்களின் பெற்றோரிடமிருந்து பறித்துச் சென்று மடாலயங்களிலும் காப்பகங்களிலும் வளர்க்க முடிவு செய்தமை. பழங்குடியினருக்கு பிள்ளைகளை முறையாக வளர்க்கத் தெரியாது என்பதால் எதிர்கால அவுஸ்த்திரேலியாவின் குடிமக்களுக்குத் தேவையான தகைமையுள்ளவர்களாக வளர்க்கும் நோக்கில் அவர்களின் குழந்தைகளை எடுத்துச் சென்று நாகரிகப்படுத்தியதாக அவுஸ்திரேலய அரசாங்கம் தமது செயலை நியாயப்படுத்தியது. ஆனால் இதனை அவுஸ்த்திரேலியப் பழங்குடியினர் திருடப்பட்ட தலைமுறை (stolen generation) என்று குறிப்பிடுகின்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி தொழில் புரியும் போதும் அவர்களுக்கு உரியசம்பளங்கள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு சரியாக நிதி நிர்வாகம் செய்யத்தெரியாது என்பதால் வாழ்க்கைக்கு போதுமானளவு சம்பளம் மாத்திரம் வழங்கப்பட்டதாக நியாயப்படுத்தப்பட்டது. இச்செயலை திருடப்பட்ட சம்பளங்கள் (stolen wages) என்று பழங்குடியினர் கூறுகின்றனர். பின்னர் இத்தகைய செயலுக்காக அவுஸ்த்திரேலிய அரசாங்கம் பழங்குடியினரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டதென்பது வேறு கதை. ஆனால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட சிறுவர்களில் பெரும்பகுதியினர் தமது குடும்பங்களை மீண்டும் சந்தித்ததில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்.
நீங்கள் வாழும் கனடாவிலும் கூட இதையொத்த சம்பவங்கள் நடைபெற்றமை உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கக் கூடும். அங்கும் செவ்விந்தியர்கள் உள்ளிட்ட பழங்குடியினரின் குழந்தைகள் தமது பெற்றோரிடமிருந்து மேலே சொல்லப்பட்ட அதே காரணங்களுக்காக பலவந்தமாகப் பறித்துச் செல்லப்பட்டு மிஷனரிப்பள்ளிக் கூடங்களில் சேர்க்கப்பட்டனர்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளில் பலருக்கு என்ன நடந்ததென்பது யாருக்கும் தெரியாது. சிலவருடங்களுக்கு முன்னர் அத்தகைய வரலாறு கொண்ட பள்ளிக் கூடம் ஒன்றில் தேவையொன்றிற்காக நிலத்தைத் தோண்டிய போது சிறுவர்கள் பல எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய உணர்வலைகயைத் தோற்றுவித்து இங்கிலாந்து இராணி ஒருவரின் உருவச் சிலை தகர்த்து எறியப்பட்டமையும் சிலவேளை உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். இவ்வாறு சிறுவர்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் உலகம் பூராகவும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் இத்தகைய சம்பவங்களில் சமய நிறுவனங்கள் அல்லது அரசு அனுசரணையுள்ள நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்புபடுகின்ற போது அவர்கள் மீது விழுகின்ற ஊடக வெளிச்சம் மிகக் குறைவாக இருக்கிறது. இலங்கையிலும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களும் வன்முறைகளும் அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தவண்ணம் உள்ளன. இதில் சமய சம்பந்தமான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்புபட்ட சம்பவங்களும் வெளிவருவதுண்டு. ஆனால் அதில் தொடர்புபட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் தண்டிக்கபட்ட சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவருவது குறைவு.
இவ்வகையில் இலங்கையில் மே மாதத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த ஒரு செய்தியில் 2020 தொடக்கம் 2022 வரையிலான காலப்பகுதியில் 17 சிறுவர்கள் உடல் ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதோடு அவர்களில் சிலர் கொல்லப்பட்டும் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக பௌத்த விகாரைகளில் பிக்கு பயிற்சி பெற்றுவரும் சிறுவர்கள் அங்கு அவர்களுக்கு பெரியவர்களால் தாக்கப்பட்ட மற்றும் துஷ்பிரயோகங்களுக்குட்பட்ட சம்பவங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. அதில் கம்பளைப் பிரதேசத்தில் உள்ள விகாரரையொன்றில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இளம் பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவமும் அதுபற்றிய விசாரணைகளின் போக்கு பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. குறிப்பாக மதத் தாபனங்களில் இடம் பெறுகின்ற இத்தகைய துஷ்பிரயோகங்கள் சௌகரியமாக மூடி மறைக்கப்பட்டு விடுவதாகவும் அதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் புத்தசாசன விவகார அமைச்சருக்கு இலங்கையில் சிறுவர் நலன் தொடர்பாக இயங்கும் தனிநபர்களும் நிறுவனங்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
பொதுவாக மதரீதியில் இயங்கும் நிறுவனங்களுக்கு எதிராக அதிலும் குறிப்பாக பௌத்த மத குருக்களுக்கு எதிராகவோ பௌத்த மதம் சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் குற்றச் செயல்கள் மறைக்கப்பட்டுவிடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இருந்து பதிவானது. அதில் ஆதரவற்ற சிறுவர்களைப் பாராமரிக்கும் சிறுவர் இல்லமொன்றின் போதகர் அங்குள்ள சிறுமிகளை முறையற்ற வகையில் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவ்வாறு மதம் சார்ந்த ஆட்கள் அத்தகைய சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களில் தொடர்புபடுவதேன் என்ற வினா எழுகிறது. அடிப்படையில் அங்கு நிறுவன ரீதியிலான வாய்ப்புகள் காணப்படுவதே அதற்குக் காரணம் எனலாம்.
உதாரணமாக பௌத்த மதத்தைப் பொறுத்தமட்டில் மதகுருக்களாக பயிற்சி பெறவேண்டுமாயின் பிரிவேனாக்களிலும் மடாலயங்களிலும் சென்று தங்கினால் மாத்திரமே அதனைச் செய்ய முடியும். அது மட்டுமன்றி பௌத்தம் துறவறத்தை வலியுறுத்தவதால் துறவிகளாக மாறி காவி கட்டினால் மட்டுமே ஒரு மதகுருவாக அங்கீகரிக்கப்படுவர். அது மட்டுமல்லாமல் பெற்றோர்களில் சிலர் தமது குழந்தைகளில் ஒருவரை பௌத்த சாசனத்திற்கு அர்ப்பணிப்பு செய்தால் தமது மரணத்தின் பின்னர் பரிபூர்ண நிர்வாண சுகம் கிடைக்கும் எனக்கருதி இளவயதிலேயே குழந்தையை பௌத்த மடாலயங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
உயர்சாதி பணக்கார பௌத்தர்களில் இவ்வாறான நடத்தை இருக்கும் போது சாதாரண விவசாயக் குடும்பங்களில் வறுமை நிலையும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளும் இருப்பதால் அவர்களில் ஒருவரை சாசனத்திற்கு தானம் செய்வதால் பிற்காலத்தில் அக்குழந்தையாவது கல்வியை இலவசமாகக் கற்று சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் நிலையில் இருப்பதோடு பொருளாதார ரீதியில் உதவக்கூடிய வாய்ப்பும் இருந்தது. பிக்குவாக மாறியவர் தனது தாய் தந்தையரை கவனிக்கக் கூடாது என்ற தடைகள் இல்லாத படியினால் தொடர்ந்து தனது குடும்பத்தை ஒரு பிக்குவால் கவனிக்க முடியும்.
எனது மிகவும் நெருங்கிய பிக்கு நண்பர் ஒருவரின் நிலைமையை நான் நன்கு அறிவேன். நான் ஏற்கனவே சொன்னது போல மிகவும் வறிய குடும்பம் ஒன்றின் இறுதிக் குழந்தை அவர். பெற்றோர் ஏழுவயதிலேயே அவரைச் சாசனத்திற்கு அர்ப்பணிப்புச் செய்து விட்டனர். ஏழுவயதில் சாசனத்தைப் பற்றியோ துறவு பற்றியோ அந்தச் சிறுவனுக்கு என்ன தெரியும்? தொடர்ந்து கல்வி கற்க வாய்ப்புக் கிடைத்ததோடு பல்கலைக்கழகம் செல்லவும் முடிந்தது. பெரும்பாலும் இவ்வாறு காவி உடையில் பல்கலைக்கழகம் வரும் பிக்குகள் அவர்களது காவியைக் கழற்றிவிட்டு ஒரு பெண்ணைத் தொடரும் நிலையினை நான் கண்டுள்ளேன்.
ஆனால், அதையும் மீறி நான் கூறும் நபர் பிக்குவாகவே தொடர்ந்திருந்து தொழில் புரிந்தார். தனது குடும்பத்தையும் கவனித்துக்கொண்டார். அவருடனான தனிப்பட்ட கலந்துரையாடல்களின் போது தான் அறியாப்பருவத்தில் துறவுக்குத் தள்ளப்பட்டதனால் உலக வாழ்க்கைத் தேவைகள் தன்னை வருத்தியதாக ஒத்துக்கொண்டார். ஆனால் துறவிலிருந்து வெளியேறி சமூகத்தின் அவச்சொல்லுக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறார் அவர். ஆனால் நான் வேலை செய்யும் துறையில் உள்ள பேராசிரியர்களில் கணிசமான எண்ணிக்கையினர் பிக்குவாக ஆரம்பித்து பின்னர் அதிலிருந்து வெளியேறியவர்களாவர். சிறுவயதிலேயே அறியாப்பருவத்தில் துறவறத்திற்கு தள்ளப்பட்டு உரிய வயதுகளில் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் தேவைகளால் உந்தப்பட்டு அதிலிருந்து வெளியேறியவர்கள் போக மடாலயங்களில் எஞ்சியுள்ளவர்கள் தமது உளப்பிரச்சினைகளை வன்முறை வடிவத்தில் புதிதாக வரும் இளைய பிக்குகள் மீது காட்டுவது ஆச்சரியமல்ல.
அது மட்டுமல்லாமல் செல்வச் செழிப்புடன் திருமணமாகி இல்லறத்தை அனுபவித்த சித்தார்த்த இளவரசன் ஒரு வயோதிகத்தையும் ஒரு நோயாளியையும் ஒரு மரணத்தையும் கண்டதனால் உலக வாழ்க்கையை வெறுத்து நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியையும் கைவிட்டு இராச்சியத்தையும் உலக ஆசாபாசங்களையும் கைவிட்டுத் துறவியானார். வாழ்க்கையின் அநித்தியத் தன்மையையும் அன்பின் மகத்துவத்தையும் உலகத்திற்கு எடுத்துக்காட்டி எல்லா உயிர்களும் நலம்பெற வாழ வேண்டும் என்பதற்காகப் பஞ்சசீலக் கொள்கைகளைப் போதித்தார். சாந்த சொரூபியான அவர் வன்முறையைப் போதிக்கவில்லை. அன்பின் மதமாகிய பௌத்தமும் அதைப் போதிக்கவில்லை.
ஆகவே மடாலயங்களில் பிக்குகள் வன்முறைக்கு உள்ளாவது பௌத்தத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைக்கிறது. இளம் சிறுவர்களான புத்தபிக்குகளே மூத்த புத்தபிக்குகளால் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றால் ஏனையவர்களைப் பற்றி எதைச் சொல்ல முடியும்?
ஞானசாரர் போன்றோரின் வாய்கள் நாறுவது ஆச்சரியப்படக் கூடிய ஒன்றா?
புத்தர் வந்து ஆளில்லா இடங்களில் குந்துவதும் ஆக்கிரமிப்பதும் அதிசயப்படக் கூடிய ஒன்றா? இளம் பிக்குகள் மூத்த பிக்குகள் வன்முறைக்குள்ளாக்குவது பற்றி வாய்திறக்காதவர்கள் ஆக்கரமிப்பு பற்றி வாய் திறப்பார்களா? வடக்கு கிழக்கில் பௌத்த பாரம்பரியங்கள் அழிவுக்குள்ளாவதாக அரற்றுபவர்கள் இந்த வன்முறைகள் பற்றி வாய்திறந்தார்களா?
செய்ய மாட்டார்கள் என்பதே உண்மை, யதார்த்தம். அதைச் செய்வார்கள் என்று எண்ணுவது மடமை.
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 1 – 10
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 11
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 12
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 13
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 14
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 15
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 16
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 17
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 18