சிவா பரமேஸ்வரன்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்கள தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
இனப்படுகொலை என்ற வார்த்தையைக் கேட்டாலே இலங்கை அரசிற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஒவ்வாவை ஏற்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு தகாத அல்லது கேட்கப்படக்கூடாத வார்த்தையாகவே உள்ளது என்பதை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அந்த வாதப்பிரதிவாதங்களின் போது காண முடிந்தது.
கனடாவிற்கு 156 ஆண்டுகால வரலாறே உள்ளது என்று அந்நாட்டையும் அதன் பிரதமர் ஜஸ்டின் டிரூடோவையும் இழிவுபடுத்தும் வகையில் இலங்கையின் இனவாத அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் கூறினார். அவர் தெரிவித்த கருத்திற்கு தமிழர் தரப்பில் பரந்துபட்டளவில் கண்டனம் எழுந்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலையை கனடா அங்கீகரித்துள்ளது சரியானது என்று அதை வரவேற்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்ற சரத் வீரசேகர மற்றும் விமல் வீரவன்ச கோஷ்டியினருக்கு ரத்த அழுத்தம் எகிறியது.
உக்கிரமான அந்த போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் மக்களிற்கு ஒரு தீர்வையோ அல்லது போரின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறவே இதுவரை அரசாங்கம் எந்த காத்திரமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை., மிகவும் கொடூரமாக இடம்பெற்று 2009 மே 18 அன்று ரத்தக்களறியுடன் போர் முடிவடைந்த நாளை தமிழினப் படுகொலை நினைவு நாளாக அனுசரிப்பதற்கு கனடா முடிவெடுத்துள்ளதற்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டிரூடோவிற்கு சிவஞானம் சிறீதரன் நன்றி தெரிவித்து நாடாளுமன்றாத்தில் உரையாற்றினார்.
உடனடியாக சிங்கள இனவாதிகளான அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் எதிர்க்குரல் எழுப்பி இனவாதத்தை கக்க ஆரம்பித்தனர். அவர்கள் அப்பட்டமான இனவாதத்தை வெளிப்படுத்தி அரசியல் இலாபம் தேட முயல்கிறார்கள் என்பது அவர்களின் நாடாளுமன்ற உரையில் தெரிந்தது.
”ஈழத்தமிழர்கள் மீது கனேடிய பிரதமருக்கு கரிசனை இருந்தால், ஈழத்தைந் ஏன் கனடாவின் அமைக்க கூடாது” என்று நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர குதர்க்கமாக கேள்வி எழுப்பினார். அவர் கூறியதை கேட்டு அவையில் இருந்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களே சிரித்ததை நேரலையில் காணக்கூடியதாக இருந்தது.
கனேடிய தமிழ் மக்களின் வாக்குகளிற்காகவே மே 18 ஆம் திகதியை தமிழின படுகொலை நினைவு நாளாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது என்று தனது வழமையான இனவாதன பாணியில் தெரிவித்தார்.
மேலும் தனது மேதாவிலாசத்தை வெளிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு ”எவ்விதமான ஆதாரங்களும் இன்றி கேள்விப்பட்டதன் அடிப்படையில் மட்டுமே, இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்று அறிவிப்பது வளர்ந்த நாடான கனடாவிற்கு அவமானம் ஆகும்” என்று தனது இனவாதத்தை உமிழ்ந்தார். பூர்வகுடி மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்காக கனேடிய அரசு மன்னிப்பு கேட்டதெல்லாம் இந்த இனவாதிகள் அறிந்திருக்கவில்லை என்பதே யதார்த்தம்.
”கனடா கொன்றொழித்த அனைத்து பூர்வகுடி மக்களின் நினைவாக ஏன் கனேடிய இனப்படுகொலை நாள் ஒன்றை அனுசரிக்க கூடாது” என்று தனது மிகவும் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து அவர் கேள்வி எழுப்பினார். கனடாவில் நடைபெற்ற தேசிய விசாரணை ஒன்றில் ’பெண்கள் மற்றும் சிறுமிகள் அழித்து இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை கண்டறிந்தது’ என்ற சரத் வீரசேகர உலகிற்கு மனித உரிமைகள் குறித்து வகுப்பெடுக்கும் கனடா, மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டிற்கு ஆளாது நம்ப முடியமல் இருக்கிறது என்றார். யாரோ எழுதிக் கொடுத்ததை அவர் வாசிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. கடற்படை தளபதியாக பொறுப்பான பதவியில் இருந்த அவர், நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன் என்ன பேசுகிறோம், அது சரியானதா, தான் கூறும் விஷயங்களில் உண்மை உள்ளதால், அது பின்னால் தவறு என்று தெரியவந்தால் எப்படி சமாளிப்பது? இதை பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
போர், போர்க்குற்றம், இனப்படுகொலை, பொறுப்புக்கூறல் ஆகியவை எல்லாம் இலங்கையில் தடை செய்யப்பட்ட சொற்கள் போலிருந்தது அவரது பேச்சு.
அவர் மட்டுமல்ல வரலாறு தெரியாமல் உளறுவதில் இலங்கை அரசியல்வாதிகள் தமது முட்டாள்தனத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது. அதற்கு நல்லதொரு உதாரணம் கனடா தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து.
”கனடா உருவாக்கப்பட்ட ஒரு நாடு. அந்நாட்டிற்கு 156 ஆண்டு வரலாறு மட்டுமே உள்ளது. இப்போது இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் எதற்காக? இலங்கையில் ஈழத்தை உருவாக்குவதற்கே. இந்தியா தமது நாட்டில் தனி தமிழ் தேசம் அமைய இடமளிக்காது. அதேபோன்று இலங்கையில் நாங்களும் தனி ஈழம் அமைய இடமளிக்க மாட்டோம். ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ தொடக்கம், அங்கிருக்கும் மாகாண சபைகள் வரை தமிழர்கள் மீது அனுதாபதம் இருப்பதாக காட்டும் நோக்கில் தனி ஈழம் குறித்து பேசுகின்றனர். கனடா சுமார் 10,000 சதுர மில்லியன் கிலோ மீட்டர் பரப்பரளவு கொண்ட நாடு. ஆனால் இலங்கையோ 65,610 சதுர கிலோமீட்டர் மட்டுமே நிலப்பரப்பு கொண்ட நாடு. சனத்தொக்கை நெருக்கத்தை பொறுத்தவரை கனடாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 4.1 மக்களும், இலங்கையில் 341 மக்களும் உள்ளனர். கனடாவில் 81 % நிலப்பரப்பு ஆளில்லாமல் உள்ளது. எனவே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உண்மையில் தமிழர்கள் மீது கரிசனை கொண்டவரானால், ஈழத்தை அங்கு அமைக்கலாமே” என்று கனடாவையும் அதன் பிரதமரையும் இழிவுபடுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
ஆனால், கனடாவில் மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் ஒன்று நடைபெறவில்லை. சர்வதேச நியமங்களிற்கு மாறாக சொந்த நாட்டு மக்களையே வான் தாக்குதல் மூலம் கொன்றொழிக்கவில்லை. ஆயிரக்கணக்கானவர்களை அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கபப்டவில்லை. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போன வரலாறு கனடாவில் இல்லை. இப்படியன சூழலில் இரு நாடுகளையும் ஒப்பிடுவதாக நினைத்துக் கொண்டு சரத் வீரசேகர போன்றோர் கருத்துக் கூறுவதை அறிவிலித்தனத்தின் உச்சகட்டம் என்றே எண்ணத்தோன்றுகிறது.
கனேடிய மக்களையும், அதன் பிரதமரையும் திட்டித் தீர்த்துவிட்டதாக கருதிக்கொண்டு சரத் வீரசேகர தனது ஆசனத்தில் அமர அடுத்ததாக இனவாத அரசியலையே தனது அடிநாத கொள்கையாக கொண்டுள்ள மற்றொரு அரசியல்வாதியான விமல் வீரவன்சவும் கனடாவையும் அதன் பிரதமரையும் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார்.
”இலங்கையில் இடபெற்றது இனப்படுகொலை என்று கூறியதன் மூலம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையை அவமானப்படுத்திவிட்டார்” என்றார் விமல் வீரவன்ச. கனடாவில் பூர்வகுடிகளாக வாழ்ந்த செவ்விந்தியர்களை இனப்படுகொலை செய்தது மட்டுமல்லாம், 1996 ஆம் ஆண்டு மீதமிருந்த செவ்விந்தியர்களின் குழந்தைகளையும் இனப்படுகொலை செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டினார் இனவாதி விமல் வீரவன்ச. கனடாவில் மிகப்பெரிய மனித புதைகுழியொன்றில் செவ்விந்தியர்களின் எலும்புக்கூடுகளின் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தினம் ஜுன் மாதம் 21 ஆம் திகதி. ”இனப்படுகொலைகள் ஏதும் இடம்பெறாத இலங்கையில் அப்படி இடம்பெற்றதாக கனேடிய அரசாங்கம் இனப்படுகொலை நாள் என்று ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் போது, ஏன் கனடாவில் இனப்படுகொலை நடந்த ஜூன் 21 ஆம் திகதியை கனேடிய இனப்படுகொலை நாள் என்று இலங்கையில் அனுசரிக்க தமது நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை இயற்ற வேண்டும்” என்று நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் கோரியுள்ளார் விமல் வம்ச. இதன் மூலம் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகவில்லை என்ற போலிப் பிரசாரத்தை அவர் மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
செல்வந்த ஏழு நாடுகளில் ஒன்றாகத் திகழும் கனடா, பூர்வகுடி மக்களிற்கு ஏற்பட்ட துன்பங்கள் தொடர்பில் தனது மக்களிடம் மன்னிப்பு கோரியது. ஆனால், இலங்கை அரசு இதுவரை போரினால் பாதிக்க மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை என்பதை இந்த இரு இனவாதிகள் அறிந்திருப்பார்கள். இலங்கையில் ஜே வி பி கிளர்ச்சியின் போது ஆயிரக்கணக்கான சிங்களவர்களும் கொல்லப்பட்டனர். பலர் இன்னும் தமது வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள், அந்த சிங்கள மக்களிடம் கூட இலங்கை அரசு மன்னிப்பு கோரியதில்லை என்பதை இவர்கள் அறிந்திருப்பார்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
கனடா இலங்கைக்கு பல ஆண்டுகளாக செய்துவந்த உதவிகளை எல்லாம் மறந்து இனவாதத்தை கக்கும் நோக்கில் இந்த இருவரும் நாடாளுமன்றத்தில் உரையாற்றியது இரு நாடுகளிற்கு இடையே இருக்கும் உரசலான உறவை மேலும் மோசமாக்க கூடும்.
சரத் வீரசேகர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு தைரியம் இருந்தால் ஜூன் 21 ஆம் அதிதியை கனடாவில் இடம்பெற்ற இன அழிப்பு நாளாக அனுசரிக்க இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றட்டுமே. முதலில் அப்படியான ஒரு தீர்மான முன்வடிவு நாடாளுமன்றத்திற்கு விவாதத்திற்கு வருகிறதா என்று பார்ப்போம்.
சபையறிந்து பேச வேண்டும், சமயமறிந்து பேச வேண்டும், அனைத்திலும் பார்க்க பேசுவதைவிட பேசாமல் இருப்பது நலம் என்பதையும் அரசியல் என்பது சினிமா அல்ல என்பதை இந்த இனவாத அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.