நடராசா லோகதயாளன்
சிந்தித்து செயற்படுவது என்பது இலங்கை அரசின் இலக்கணத்தில் என்றுமே இருந்ததில்லை என்பதை ஒவ்வொரு விடயத்திலும் எந்த அரசியல் கட்சி அல்லது தலைவராக இருந்தாலும் நிரூபித்து வருகின்றனர்.
அது அரசியல் கொள்கை வகுப்பாக இருக்கலாம், பொருளாதார திட்டங்களாக இருக்கலாம் அல்லது எந்தவொரு மக்கள் நலன் சார்ந்த பணிகளாக இருக்கலாம். இந்த திட்டமிடலில் உள்ள குறைபாடு மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாத காரணத்தால் இன்றளவும் நாடு சமூக-பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இதற்கு அண்மையில் அரசு முன்னெடுத்துள்ள ஒரு திட்டத்தை மேலும் ஓர் உதாரணமாக கூற முடியும். வவுனியா மாவட்டத்தில் சீனி உற்பத்தி ஆலை ஒன்றை ஏற்படுத்தவும், அதற்கு தேவையான கரும்பை அருகிலுள்ள மாவட்டங்களில் சாகுபடி செய்யவும் ரணில் விக்ரமசிங்க அரசு முன்வைத்து அதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்துள்ளன.
ஆனால், இந்த திட்டம் மற்றும் அதன் சாத்தியக்கூறு குறித்து எந்தளவிற்கு ஆராயப்பட்டது என்பதில் பல கேள்விகள் உள்ளன.
நெடுங்கேணியில் ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளவுள்ள சீனித் தொழிற்சாலைக்கான நிலத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
கடந்த வாரம்-மே 18 அன்று தமிழ் மக்கள் கொடூரமாக முடிந்த யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக முள்ளிய்வாய்க்கால் தொடக்கம் பல பகுதிகளில் தமது அஞ்சலிகளை செலுத்திவந்த நேரத்தில், ஜனாதிபதியில் செயலாளர் மெய்நிகர் வாயிலாக பங்குபெற்ற கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதுவும் தமிழர் தாயகப் பகுதியில் ஒரு ஆலையை அமைப்பது தொடர்பான கூட்டம் அது. அந்த கூட்டமும் திட்டமிட்ட நேரத்திற்கு ஒன்றரை மணி நேரத்தின் பிறகே தொடங்கியுள்ளது.
இந்த கலந்துரையாடல் வவுனியா வடக்கிலே ஓர் முதலீட்டிற்கான நிலம் தொடர்பானது என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அதன் அடிப்படையில் மாவட்டச் செயலாளர் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரையும் இணைத்துக்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி விகரமசிங்க வவுனியா மாவட்ட அரச அதிபர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோரிடம் ’அங்கு சர்க்கரை ஆலை அமையவுள்ளது. அதற்கான நிலம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்’ இது எனது கண்டிப்பான உத்தரவு என்று கூறியுள்ளர்.
இதற்கமைய நெடுங்கேணி நைனாமடுவில் ஓர் சீனித் தொழிற்சாலையினை அமைக்கும் அதேநேரம் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் கரும்புத் தோட்டங்கள் அமைத்து அவற்றை நெடுங்கேணியில் அமையும் தொழிற்சாலைக்கு வழங்கத் திட்டமிடப்படுகின்றது.
இவ்வாறு 18ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) பேச்சாளரான சுரேன் குருசாமி மட்டும் ஒரேயொரு அரசியல்வாதியாக கலந்துகொண்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் 19ஆம் திகதி காலை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்திப் பிரிவின் மேலதிக செயலாளர் கே.எஸ்.விஜயகீர்த்தியின் 16ஆம் திகதிய கடிதத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் தவிர்ந்த ஏனைய பிரதேச செயலாளர்களுடன் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலாளர்களிடையே இடம்பெற்ற கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்படவேயில்லை. வெறுமனே கரும்புச் செய்கைக்கு ஏற்ற அதிக இடங்கள் வனவளத் திணைக்களத்தின் பிடியிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனால் வனவளத் திணைக்களத்துடன் பேசி அவற்றை விடுவிப்பதாகவே முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் 18ஆம் திகதி கூட்டம் தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது என ஆரம்பத்தில் மறுத்த சுரேன் குருசாமி தற்போது தானும் ஓர் சீனித் தொழிற்சாலையின் சிரேஸ்ட துணைத் தலைவர் எனவும் அது தாய்லாந்தில் பதிவு செய்த நிறுவனம் எனவும் கூறுகின்றார். இதனால் இத்திட்டத்திற்கும் சீனாவிற்கும் தொடர்பு இல்லை என்க் கூற முற்படுகின்றனர்.
இவ்வாறு சீனாவிற்காக ஒருபகுதி நிலம் பிடிக்க முற்படும் சமயம் தமது பிடி தளர்ந்துவிடுமோ என இன்னுமோர் தரப்பு எண்ணுகின்றது. இதனால் சீனாவைத் தொடர்ந்து சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் கால் பதிக்கும. நோக்கில் இடங்களைத் தேர்வு செய்கின்றனர்.
இலங்கையின் வடபகுதியில் போரின் காரணமாக அதிக மக்கள் இடம்பெயர்ந்தமையினால் குடிசன அடர்த்தி குறைவாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக அதிக நிலங்கள் வெறுமையாகவும. வனப் பகுதியாகவும் காட்சியளிக்கின்றன.
இவற்றை காரணமாக வைத்து முதலீடு என்னும் பெயரில் சீனா- தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் சீனித் தொழிற்சாலையை நெடுங்கேணி நைனாமடுப் பகுதியில் ஆரம்பிக்கும் அதே நேரம் அயல் பகுதிகளில் அதிகளவு கரும்புச் செய்கையை ஊக்குவித்து அதற்கான நீரை மகாவலி ஊடாக கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
இத்திட்டத்திற்காக நைனாமடுவில் மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கிய நிலங்கள் தற்போது வனவளத் திணைக்களத்தின் பிடியில் உள்ளன. அவற்றை விடுவித்து அந்த சீனித் தொழிற்சாலைக்கு வழங்குமாறு 2023-05-18 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களிற்கு நேரில் உத்தரவிட்டிருந்தார்.
இதேநேரம் நெடுங்கேணி மற்றும் டொலர்பாம், கென்பாம் பகுதிகளை அண்டி காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆளுகையில் மேலும் 2000 ஏக்கர் நிலம் உள்ளதனால் அவற்றையும் வெளிநாடுகளிற்கு வழங்க அமைச்சர் காதர் மஸ்தான் முனைப்பு காட்டி வருகின்றார்.
இதற்கமைய கடந்த வாரம் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களை காதர் மஸ்தான் சகிதம் இப்பிரதேசங்களிற்கு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ் மாவட்டச் செயலக அதிகாரிகள் நேரில் அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர்.
அவ்வகையில் நெடுங்கேணி மற்றும் டொலர்பாம், கென்பாம் பகுதிகளில் நிலங்களைப் பார்வையிட்ட சவுதி அரேபியா உள்ளிட்ட முதலீட்டாளர்கள் குழு ஏற்கனவே கிளிநொச்சியில் கௌதாரிமுனையிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதங்கேணியில் உள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆளுகையில் உள்ள நிலங்களைப் பார்வையிட்டு அவை பொருத்தமற்றவை என நிராகரித்த நிலையில் நெடுங்கேணி, டொலர்பாம், கென்பாம் பகுதிகளில் உள்ள நிலங்கள் வளம் மிக்கவை என்னும் அடிப்படையில் அவற்றைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இவ்வாறு இந்த நாடுகள் தேர்வு செய்யும் இடங்கள் 1981ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களாக இருந்தவை. அங்கிருந்த தமிழ் மக்கள் போரின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டமையே இந்த நிலங்கள் வெறுமையாக காட்சியளிப்பதற்கு காரணமாக உள்ளது என்பதே யதார்த்தமான களநிலைமை. தமிழர்களின் பூர்விமான இந்த இடங்களை அபகரித்து இப்பகுதி மக்களிற்கோ அல்லது இந்த மாவட்ட மக்களிற்கோ அல்லாது பிற நாட்டவர்களிற்கு வழங்க இரகசிய முயற்சி இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
மிகவும் வேகமாக நில ஆக்கிரமிப்பிற்கான தயார்படுதல்கள் இடம்பெறும்போது அனைவரும் படுத்துறங்கிவிட்டு அங்கே பாரிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழாக்கள் அறிவிக்கும் போதே தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்காதே எனக் கோசம் போட்டு போராட்டம் நடாத்துவர்கள் என நெடுங்கேணி கமக்கார அமகப்பின் தலைவர் நெரிவிப்பதோடு இதற்கு எதிராக நெடுங்கேணி விவசாயிகள் விரைவில் வீதியில் இறங்கிப் போராட திட்டமிடுகின்றோம் என்கின்றார்.
இதேநேரம் நெடுங்கேணியில் சீனித் தொழிற்சாலையும் அயலில் அதிக கரும்புத் தோட்டமும் வந்தால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பாக அமையும் எனக் கூறப்படுகின்றபோதும் இவ்வாறான திட்டத்தை எதிர்ப்பவர்களில் மிக முக்கியமானவரான சூழலியலாளரும் பசுமை இயக்கத் தலைவருமான பொன் .ஐங்கரநேசனை இது தொடர்பில் கேட்டபோது இந்த திட்டம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று என்றார்.
”வடக்கு மாகாண சபை இருந்த போதும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றனர். நாம் அதற்கு இணங்கவில்லை. காரணம் கரும்புச் செய்கை மேற்கொள்வதானால் நெற் செய்கையினை விடவும் 3 மடங்கு நீர் தேவை. அங்கே தற்போது சிறு குளங்கள் மட்டுமே உள்ளதனால் சிறு போகத்தின்போது நெற் செய்கைக்கே நீர் கிடையாது. மாரி மழைகாலத்தில் வெள்ளம் அதிக நீர் ஓட்டம் என்பதனால் கரும்புச் செய்கையும் கடினமானது அதனால் சிறுபோக காலத்திலேயே மேற்கொள்ள வேண்டும். இதனால் நீர்த் தட்டுப்பாடு எனத் தெரிவித்து அப்பகுதிகளிற்கு நீர் விநியோகம் என்னும் போர்வையில் மகாவலி நீர் திருப்பப்படும் அதன் பின்பு அப்பகுதிகள் யாவுமே மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டு செல்லப்பட்டு தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறியாகும். இதனை நன்கு உணர்ந்தவர்கள்கூட அரசின் கைக்கூலிகளாக மாறி போரினால் பாதிக்க்பட்டவர்களிற்கான வேலை வாய்ப்பு என்னும் மாயையின் கீழ் தமது பொக்கற்றை நிரப்ப முயல்கின்றனர்” என்றார்.
மகாவலி அதிகார சபை வருவதனால் தமிழ் மக்களிற்கு என்ன பாதிப்பு அதன் கீழும் காணி அனுமதிப்பத்திரங்களைப் பெற்று நில உருத்தை உறுதி செய்ய முடியாதா என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டேன்.
”இலங்கையில் மகாவலி அதிகார சபை கொண்டு வரப்பட்டதன் பின்பு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு இந்த அதிகார சபை நிலம் வழங்கி அனுமதிப் பத்திரம் வழங்கியுள்ளது. இருப்பினும் இதில் தமிழர்கள் 45 குடும்பங்கள்கூட கிடையாது. இதனால் இந்த அதிகார சபை மீது தமிழர்கள் கொண்டுள்ள கோபமும் ஐயமும் நியாயமானது” என்றார்.
விவசாய வல்லுநர்களும் இந்த சர்க்கரை ஆலை திட்டம் தோல்வியில் முடியும் சாத்தியமே அதிகம் என்று கூறுகிறார்கள். மூலப் பொருளான கரும்பு தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யாமல், எப்படி ஒரு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இலாப நோக்கில் நடத்த முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
கரும்பு சாகுபடி மற்றும் சர்க்கரை உற்பத்தில் முன்னணியில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கூட இந்த விடயத்தில் தொடர்ச்சியக சிக்கலை எதிர்கொள்ளும் போது இலங்கையால் இதை கையாள முடியது என்றும், தமிழர்களின் நிலம் பறிபோவதை தவிர இதில் வேறு எந்த பயனும் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.